full screen background image

இயக்குநர் பாக்யராஜிடம் திருடப்பட்ட கதை..!

இயக்குநர் பாக்யராஜிடம் திருடப்பட்ட கதை..!

இயக்குநர் கே.பாக்யராஜ் கதை, திரைக்கதையில் மன்னர் என்பது எதனாலென்றால், அவர் குரூப் டிஸ்கஷனில்தான் கதையை முடிவு செய்வார். தானே தனியாக அமர்ந்து கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி முடிவு செய்ய மாட்டார். துணை இயக்குநர்கள், கதாசிரியர்களுடன் கூட்டாக அமர்ந்து டிஸ்கஷன் செய்யாமல் எந்தக் கதையையும் அவர் எழுதியதில்லை.

இப்படி அவர் டிஸ்கஷன் பேசும் சமயத்தில் தயாராகும் கதைகள் அடுத்தடுத்த நாட்களில் தள்ளிப் போகும்.. அல்லது கைவிடப்பபடும். அது போன்ற சில கதைகளை அந்த டிஸ்கஷனில் கலந்து கொண்டவர்கள் தங்களது சொந்தப் படங்களுக்கோ அல்லது வேறு ஒருவரின் படங்களுக்கோ சொல்லி பயன்படுத்திக் கொள்வார்கள். இது பாக்யராஜுக்கே தெரியும்.

அது போன்ற இரண்டு கதைகள் வேறு சிலரிடம் வெளியான கதையை நேற்று மாலை நடந்த ‘மீண்டும் அம்மன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார். அந்தக் கதையைக் கேளுங்கள்..

“நான் ஒரு தடவை தெலுங்கு படத்துல நடிக்கிறதுக்காக ஆந்திரா போயிருந்தேன். அப்போ ஒரு தெலுங்கு புரொடியூஸர் என்னை பார்க்க வந்து அவர் அடுத்து எடுக்கப் போற தெலுங்கு படத்துல என்னை ஒரு கேரக்டர்ல நடிக்கச் சொன்னார். அது ஒரு தமிழ்ப் படத்தோட ரீமேக்குன்னும் சொன்னார்.

தமிழ்ப் படம்ன்னு சொன்னதும் எனக்கு ஒரு ஆர்வம் வந்திருச்சு. ‘சரி.. மொதல்ல படத்தைக் கொடுங்க.. பார்த்திட்டு சொல்றேன்’னு சொன்னேன். அவரும் ஒரு சிடியை கொடுத்திட்டுப் போனார்.. லஞ்ச் பிரேக்ல கேரவன்ல உக்காந்து படத்தைப் போட்டேன். ‘இயக்கம் டி.பி.கஜேந்திரன்’னு போட்டிருந்தது.. ‘அட நம்ம ஆளு படமா’ன்னு சந்தோஷமா தொடர்ந்து படத்தைப் பார்த்தா.. எனக்கு பயங்கர ஷாக். அது என்னோட கதை..!

கதாசிரியர் தூயவன் தன்னோட மகனை ஹீரோவா நடிக்க வைக்க ஒரு கதை கேட்டார். அதை ராஜ் டிவி தயாரிக்கிறதா இருந்தது.. அதுக்காக நான் தயார் செய்து கொடுத்த கதைதான் அது.. அந்தப் படத்தோட டிஸ்கஷன்ல கலந்துக்கிட்ட யாரோ ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டர்.. பாவம்.. ரொம்பக் கஷ்டம் போலிருக்கு.. டி.பி.கஜேந்திரன்கிட்ட சொல்லியிருக்காரு. இவரும் அதை படமா எடுத்திட்டாரு..

இப்படித்தான் என்னோட பல கதைகள் பலருடைய இயக்கத்தில் வெளிவந்திருக்கு.. இதெல்லாம் எனக்குத் தெரியும்னாலும் சிலவைகளை நான் கண்டுக்கிறதில்லை.. சில மேட்டர்ல வேணாம்னு சொல்வேன்.. அப்படி நான் வேணாம்னு சொல்லியும் ஒருத்தர் படமா எடுத்து.. அந்தக் கேஸ் இன்னமும் ஓடிக்கிட்டிருக்கு.. டி.பி.கஜேந்திரனுக்கு இனிமேல் நல்ல கதைகள் கிடைச்சாலும், என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டா நல்லது..” என்றார்.

மேடையில் அமர்ந்திருந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனும் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டார்.. வேறென்ன செய்வார் பாவம்..?

Our Score