full screen background image

“நடிகர் சங்கக் கட்டட விவகாரம் – உண்மையில் நடந்தது என்ன..?” – பூச்சி முருகன் விளக்கம்..!

“நடிகர் சங்கக் கட்டட விவகாரம் – உண்மையில் நடந்தது என்ன..?” – பூச்சி முருகன் விளக்கம்..!

நடிகர் சங்க தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கட்ட்டம் கட்டும் விஷயத்தில் குழப்பம் வரும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

pooche murugan-1

நடிகர் சங்க உறுப்பினரான பூச்சி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குதான் கட்டடம் கட்ட தடையாக இருப்பதாக நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் சொல்லி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூச்சி முருகன் இது பற்றிய உண்மை விளக்கத்தை தனது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதமாக எழுதி அனுப்பியிருக்கிறார்.

அது இங்கே :

“தென்னிந்திய நடிகர் சங்க இடத்தில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக நடைபெற்ற பல ஊழல்களையும், தவறுகளையும் தட்டிக் கேட்டு திருவாளர்கள் ராதாரவி, சரத்குமார் அவர்களின் செயல்பாட்டிற்கு நீதிமன்றத்தில் தடையைப் பெற்று, அவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சங்க உறுப்பினர்களிடம் என்னைப் பற்றி உண்மைக்கு புறமான தகவல்களை பல பத்திரிகைகள் வாயிலாகவும் சங்கப் பொதுக்குழுவிலும், மறைமுகமாகவும் எனக்கு எதிராக பல சதி வேலைகளை  அவர்கள் செய்து வருவதால் கீழ்க்கண்ட சில உண்மைகளை நான், நமது சங்க உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

  • தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பாக பொதுக்குழு தீர்மானத்தில் ‘நான் கையெழுத்திட்டுள்ளேன்’ என்று சரத்குமார் கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும். நான் சங்க பொதுக்குழுவின் வருகைப் பதிவேட்டில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளேன்.
  • தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவது தொடர்பாக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் முன் அனுமதி பெறவில்லை என்பது முற்றிலும் உண்மை.
  • தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாக ஸ்பை சினிமாஸ் மற்றும் நடிகர்கள் சங்கம் போட்ட (29 வருடம், 11 மாதங்கள்) ஒப்பந்த நாள் 25.11.2010.
  • 25.11.2010 அன்று ஒப்பந்தம் போட்டுவிட்டு, அதன் பின்னர் 30.11.2010 அன்று நடந்த செயற்குழுவில் அதற்கு Ratification பெற்றது எந்தவிதத்தில் நியாயம்..?
  • தென்னிந்திய நடிகர் சங்க இடத்தில் சினிமா தியேட்டர் கட்டுவதற்கு சரத்குமார் அவர்கள் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலேயே 31.01.2011 அன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு செய்துள்ளார். சங்கப் பொதுக் குழுவில் Ratification பெற்ற நாள் 17.02.2011. இது நியாயமா..?
  • Sarath-Kumar-and-Radha-Ravi
  • 9 பேர்கள் இருக்க வேண்டிய நடிகர் சங்க அறக்கட்டளையில் திருவாளர்கள் ராதாரவி, சரத்குமார் ஆகிய இருவர் மட்டுமே இருந்து கொண்டு, கடந்த 10 வருடங்களாக பல தவறுகளைச் செய்து வருகிறார்கள் என்பது உண்மை.
  • நடிகர் சங்க அறக்கட்டளையில் ‘Life trustee’ என்ற ஒரு வார்த்தை இல்லாதபட்சத்தில் தங்களை Life Trustee என்று போட்டுக் கொண்டு சொத்து வாங்கியுள்ளது நியாயமா..?
  • ஸ்பை சினிமாஸ் மற்றும் நடிகர் சங்கம் செய்து கொண்ட பல கோடி ரூபாய்க்கான ஒப்பந்தப் பத்திரத்தில் திருவாளர்கள் ராதாரவி, சரத்குமார் ஆகியோரைத் தவிர சாட்சி கையெழுத்தாக ஒரு நடிகர், நடிகையர்கூட (பிரபல 30 செயற்குழு உறுப்பினர்கள் இருந்தும்) கையொப்பம் இடவில்லை.
  • சினிமா சேவை வரியை ரத்துச் செய்யக் கோரி நடிகர், நடிகைகள் இருந்த உண்ணாவிரதத்திற்கான செலவு சுமார் 12 லட்சம் ரூபாய் என்று கூறியிருக்கிறார்கள். இது நியாயமா..?
  • தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டதாக்க் கூறி பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்தப் பயிற்சி எங்கு நடந்தது..? அதற்கு ஆதாரம் உண்டா..?
  • நடிகர் சங்க இணையத்தளம் உருவாக்கப்பட்டதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் நடிகர் சங்கத்தில் இணையதளம் என்று ஒன்று உள்ளதா..? அதில் என்னென்ன இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
  • சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் அவர்களது சொந்த நிறுவனத்தின் சார்பாக பல திரைப்பட பிரபலங்களை அழைத்து ‘ஸ்டார் நைட்’ போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி அந்தக் கலை நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்று பணம் சம்பாதிப்பது நடிகர் சங்கத் தலைவர் என்ற போர்வையில்தானே..? இதனையே நடிகர் சங்கம் சார்பாக நடத்தி, சங்கத்தில் உள்ள நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவலாமே..?

(விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது ஸ்டார் நைட் நடத்தி சங்க்க் கடனை அடைத்துவிட்டு பல கோடி ரூபாயை சங்கத்தில் மீதம் வைத்துவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.)

  • தென்னிந்திய நடிகர் சங்க இடத்தில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக நியாயம் கேட்ட என்னை, வருடாந்திர உறுப்பினருக்கான சந்தா கட்டணமான ரூபாய் 34-ஐ என்னிடமிருந்து வாங்க மறுத்து பின்னர் நான் நீதிமன்றம் சென்று அதற்கு தடைபெற்று தொடர்ந்து சங்க உறுப்பினராக உள்ளேன். ஆனால் இதற்காக திருவாளர்கள் ராதாரவி, சரத்குமார் ஆகியோர் சங்கம் மூலமாக நீதிமன்ற வழக்கிற்காக செலவு செய்த தொகை 40 லட்சம் என்று தெரிய வருகிறது. வெறும் 24 ரூபாய்க்காக, 40 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளனர். இது நியாயமா..?
  • தென்னிந்திய நடிகர் சங்க இடத்தில் கட்டடம் கட்டுவது தொடர்பாக ராதாரவி, சரத்குமார் ஆகியோருக்கு குமரிமுத்து கடிதம் எழுதும்போது அவர்களை ‘திருவாளர்கள்’ என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியதற்காக அவர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
  • நடிகர் சங்கக் கட்ட்டம் தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகை ஒன்றை படித்த சங்க உறுப்பினர் மற்றும் நாடகக் கலைஞரான சுந்தரம், அச்செய்தி வந்திருந்த பத்திரிகையை சக சங்க உறுப்பினர்களிடத்தில் காண்பித்தார் என்பதற்காகவே அவர் சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இது நியாயமா..?
  • ‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தில் நடிகர் விஷால் தன்னுடைய கருத்தை அவருடைய இணையத்தளத்தில் ‘நடிகர் சங்கம் கேள்விக்குறி?’ என்று குறிப்பிட்டு வெளியிட்டிருந்தார். அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டிருந்தது நடிகர் சங்கம். ஆனால், நடிகர்கள் விஷால், நாசர் ஆகியோரைப் பற்றி நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி மற்றும் நடிகர் சங்கத் துணைத் தலைவர் காளை ஆகியோர் மேடை நாகரிகம் சிறிதுமின்றி அவர்களை ‘நாய்கள்’ என்று கூறி, ‘அவர்களை வெளியில் விரட்டுவோம்’ என்று பகிரங்கமாகப் பேசியதற்கு இவர்கள் மீது நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது..?
  • மொத்தத்தில் மே மாதம் 2015-ல் சங்கத் தேர்தல் வருவதாலும் பல நடிகர்கள் அத்தேர்தலில் போட்டியிட இருப்பதாலும் தேர்தல் பயத்தில் பல மேடைகளில் இவர்கள் சித்தம் கலங்கியவர்கள்போல உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
  • சரத்குமார் என்னைப் பற்றி அவதூறாகப் பரப்பி வரும் பொய்யான செய்திகள் பத்திரிகைகள் வாயிலாக வெளியே வரவில்லை என்ற காரணத்தினாலே பெரும் பொருட்செலவு செய்து சில பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் பொய்யான செய்திகளையும் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை தவறாகச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்த விளம்பரங்களுக்கான பணம் நடிகர் சங்கத்தினுடையது என்று கூறப்படுகிறது. மேலும், வரும் தேர்தல் பயத்தினால் சரத்குமார் நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு தாரை வார்த்த தேதியையும் மற்றும் சில தேதிகளையும் தவறாக அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார்.
  • நடிகர் சங்க வளாகத்தில் பல அடுக்கு மாடிக் கட்டடம், திரையரங்குகள் வந்தால் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று அந்தப் பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பாக Anna mathan (W.P.No. 28091/2011), R.Sukumaran (W.P.No.28073/2011), Ambika Menon (W.P.No.W.p.No.28085/2011) ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் ‘நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க சாரிடிபிள் டிரஸ்ட், அடுக்கு மாடி கட்டடம் கட்ட எந்த விண்ணப்பமும் செய்யவில்லை’ என்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள்(CMDA) மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ‘மேற்கண்ட இடத்தில் கட்ட்டம் கட்டுவதற்கு நாங்கள் எந்தவிதமான அனுமதியையும் அளிக்கவில்லை’ என்று கூறியதன் அடிப்படையில் நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது. “மீண்டும் கட்டடம் கட்ட நடிகர் சங்கம் அனுமதி கேட்டால் மனுதாரர்கள்(குடியிருப்போர் சங்கம்) மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடலாம்…” என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
  • ஆனாலும், ‘கட்டடம் கட்டக் கூடாது என்று பூச்சி முருகன் சொல்கிறார்’ என்று சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி ஆணை பெற்றிருப்பது ‘நடிகர் சங்க டிரஸ்ட்டில் 9 பேர் இருக்க வேண்டிய இடத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகிய இரண்டு பேர் தன்னிச்சையாக செயல்பட்டு பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள்’ என்றே தடையுத்தரவு பெற்றுள்ளோம்.

actor-vishal

  • நலிந்த நாடக நடிகர்களின் நலன் கருதியும், நடிகர் சங்க டிரஸ்ட்டில் நடந்த முறைகேடுகளை விளக்கவும் விஷால், கருணாஸ், நான் ஆகியோர் புதுக்கோட்டை நாடக நடிகர்களை சந்திக்கச் சென்றபோது, 90-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் எங்களுக்கு மாலை அணவிவித்து இன்முகத்துடன் வரவேற்று எங்களது விளக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். அதற்கு உண்டான ஆடியோ மற்றும் வீடியோ நகல் எங்களிடம் உள்ளது. இது பத்திரிகை நண்பர்களுக்கும் தெரியும். சரத்குமார் தேர்தல் தோல்வி பயத்தில் அக்கூட்டத்தில் 7 பேர்தான் கலந்து கொண்டதாக பொய் சொல்லி வருகிறார்.
  • மேலும் அவர் தந்த விளம்பரத்தில் உயர்நீதமன்ற தீர்ப்பை தவறாகத் திரித்து சொல்லி வருவது நீதிமன்ற அவமதிப்பாகும். நீதியரசர் சந்துரு, Granting leave to institute a suit உத்தரவுக்கு பிறகு சரத்குமார் மேல்முறையிடூ செய்த மனுவும் தள்ளுபடி ஆனதுதான் உண்மை.
  • மேற்கண்ட நீதிமன்றம் சரத்குமாருக்கு எதிராகத் தீர்ப்பளித்து மூன்று வருடங்கள் ஆகியும் சரத்குமார் பக்கம் நியாயம் இருக்கும்பட்சத்தில் மேல்முறையீட்டுக்கு அவர் உச்சநீதிமன்றத்திற்கு ஏன் செல்லவில்லை..?

இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் கடந்த 15 வருட காலமாக நலிந்த நாடக நடிகர்களின் சங்கப் பணத்தையும், சொத்துக்களையும் அவர்களுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது நாடறிந்த உண்மையாகும்.

அன்புடன்

பூச்சி முருகன்

Our Score