’ஜீரோ’ பட இயக்குநருக்கு கிடைத்த உலக அங்கீகாரம்

’ஜீரோ’ பட இயக்குநருக்கு கிடைத்த உலக அங்கீகாரம்

ஹாலிவுட் படங்களைப் பார்த்து மிரண்டு போகும் தமிழ் சினிமா ரசிகர்களை ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுத்து மிரட்டிய இயக்குநர்களின் பட்டியலில், தனது முதல் படமான ‘ஜீரோ’ படத்தின் மூலம் இணைந்தவர்தான் ஷிவ் மோஹா.

அறிமுகப் படத்திலேயே வித்தியாசமான கதைக் களத்தை தேர்வு செய்த இவர், மேக்கிங்கிலும் உலகத்தரத்திலான ஒரு படமாக ‘ஜீரோ’ படத்தை இயக்கியிருந்தார்.

இந்த ஆண்டு வெளியான ஊடகங்களின் பாராட்டுக்குரிய படங்களில் ஒன்றாக திகழ்ந்த ‘ஜீரோ’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த வெளிநாட்டு நிறுவனமான ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) விருது வழங்கி கெளரவித்துள்ளது.

உலக அளவில், ஹோட்டல், தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தரச் சான்றிதழ் வழங்கும் ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) நிறுவனம், இதற்கு முன்பு திரைத்துறையைச் சார்ந்த, ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூங்குட்டி, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு விருது வழங்கியுள்ளது. திரைப்பட இயக்குநர்களில் இவ்விருது பெரும் முதல் நபர் ஷிவ் மோஹா என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதின் சிறப்பு என்னவென்றால், விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவரையும் ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) நிறுவனமே நேரடியாக தேர்ந்தெடுக்கிறது.

மற்ற விருதுகளுக்கெல்லாம், சம்மந்தப்பட்டவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பிவைப்பார்கள் அல்லது விருது போட்டியில் பணம் செலுத்தி பங்கேற்பார்கள், ஆனால், இந்த விருதைப் பொருத்தவரை ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) நிறுவனமே நேரடியாக சம்மந்தப்படவர்களின் படைப்பை பார்த்து விருது வழங்கி வருகிறது.

அப்படி, ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் ‘ஜூரோ’ படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தின் மேக்கிங், கதைக்களம் ஆகியவற்றைப் பார்த்து வியந்ததுடன், இயக்குநர் ஷிவ் மோஹாவுக்கு விருதும் வழங்கியுள்ளார்.

பொறியியல் பட்டதாரியான ஷிவ் மோஹா, லயோலா கல்லூரியில் சினிமா தொழில் நுட்பம் படித்து, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆல்பங்கள், தனுஷ் நடித்த ’மாரி’ படத்தை இயக்கிய பாரத் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன், பல விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்றது பற்றிப் பேசிய இயக்குநர் ஷிவ் மோஹா, “இந்த படத்தை ஒரு கதையாக பிறரிடம் சொல்வதே கடினம். அந்த அளவுக்கு படத்தில் விஷுவலாக சொல்ல வேண்டிய விஷயங்கள் தான் அதிகம். அதற்காக ஒவ்வொரு காட்சியையும் நாங்கள், ஸ்டோரி போர்டாக தயார் செய்து, அதை தயாரிப்பாளரிடம் காட்டி சம்மதம் வாங்கினோம்.

மேலும் படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வருவதற்காக ரொம்பவே மெனக்கெட்டோம், அதற்கான பலன் படத்தில் கிடைத்தது. இப்படி பலவிதத்தில், ‘ஜீரோ’ படத்திற்காக நான் உள்ளிட்ட படக் குழுவினர் உழைத்திருந்தோம்.

சில ரசிகர்களுக்கு மாற்று கருத்து இருந்தாலும், இது போன்ற வித்தியாசமான படங்களை ரசிப்பதற்கானவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. மேலும், ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) போன்ற நிறுவனங்களின் அங்கீகாரமும், அவர்கள் எனக்கு வழங்கிய கெளரவமும் எனது ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

எனவே, ‘ஜீரோ’ படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை எடுக்க இருக்கிறேன். முன்பே இதற்கான திரைக்கதையை நான் எழுதி வைத்திருக்கிறேன். இதற்கு முன்பாக வேறு ஒரு படத்தை இயக்க இருக்கிறேன். க்ரைம் திரில்லர் படமான இப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது பேச்சுவார்த்தை அளவில் இருக்கும் இப்படத்தைப் பற்றிய மேலும் விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளேன்..” என்றார் ஷிவ் மோஹா.