அடுத்த பேய்ப் படம் ‘யூகன்..’

அடுத்த பேய்ப் படம் ‘யூகன்..’

ஜி.கமல்குமார் என்ற புதியவர் தயாரித்து, எடிட்டிங் செய்து, இயக்கியிருக்கும் புதிய படம் யூகன்.

இந்தப் படத்தில் முற்றிலும் புதியவர்களே நடித்துள்ளனர். யாஷ்மித், ஜிஆர்என் சித்து, ஷியாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, சாக்ஷி அகர்வால், ஆய்ஷா, தருண் சக்ரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ரவி ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஷாந்த் அர்வின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அலெக்ஸ் பிரேம்நாத் பின்னணி இசையமைத்திருக்கிறார். ரதி கலரிஸ்ட் பணியைச் செய்திருக்கிறார்.

‘யூகன்’ என்றாலே ஊகித்து முடிவெடுப்பன் என்று பொருள். இதே அர்த்தத்தில் ஒரு ஐ.டி. கம்பெனியில் நடைபெறும் ஒரு சின்னப் பிரச்சினையை மையமாக வைத்து நடப்பது போல கதை எழுதப்பட்டுள்ளதாம்.  

அந்தக் கதைக் கருதான் என்ன என்று இயக்குநரிடம் துருவித் துருவிக் கேட்டும் மனிதர் சொல்லவில்லை. ஆனால் ஹீரோயின் இதில் இறந்து போய், அதே பில்டிங்கில் ஆவியாய் வலம் வந்து அனைவரையும் பயமுறுத்துகிறார் என்கின்ற உண்மையை மட்டும் ஒப்புக் கொண்டார்.

இந்த ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஐந்து நபர்களின் பிரச்சினைகள் கொஞ்சம் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். கூடவே அந்த ஆவியும் அடங்காமல் திரிந்து அவர்களை அலைக்கழிக்கிறதாம். சஸ்பென்ஸ், திரில்லரைவிடவும் பேயின் அட்டகாசங்கள் அதிகமாகவே படமாக்கப்பட்டுள்ளன என்றார் இயக்குநர்.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸே இல்லாமல் வெறும் கேமிரா டிரிக் மூலமாகவும் மேக்கப் மூலமாகவுமே நம்மை பயமறுத்தியிருக்கிறார்களாம்.

மேலும், இடைவேளையின்போது மிகப் பெரிய திருப்பமும், கிளைமாக்ஸில் அதைவிட பெரிய திருப்பமும் இருக்கிறதாம். அது என்னவென்று தெரிந்தால் படமே பார்த்தது போலாகிவிடுமே என்று அதையும் சொல்ல மறுத்துவிட்டார்.

ஒய்யாரமாக வந்திருந்த பெங்களூர் கிளி சாக்ஷி அகர்வால்தான் பாதி படத்தில் இருந்து பேயாக அவதாரமெடுத்து நம்மை பயமறுத்தப் போகிறவராம். எப்படி இந்த இயக்குநருக்கு இந்த அழகு கிளியை பேயாக காட்ட மனசு வந்தது என்று தெரியவில்லை..!? 

சென்னை, சிவகாசி, கொடைக்கானல், திருநெல்வேலி, கோவில்பட்டி, சேலம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

மிக விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறதாம்..!
error: Content is protected !!