ஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிப்பது ஏன்..? – கவிஞர் பா.விஜய்யின் விளக்கம்..!

ஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிப்பது ஏன்..? – கவிஞர் பா.விஜய்யின் விளக்கம்..!

யு டிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்த்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் 'யட்சன்.' இதில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார்.

'யட்சன்' என்றால் குபேரன், இயக்குபவன் என்று பொருளாம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது.

IMG_0579

விழாவில் படத்தின் இயக்குநர் விஷ்ணுவத்தன் பேசும்போது, "இது  'ஆரம்பம்'  படத்துக்கு முன்பேயே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்தவிகடனில் வந்த எழுத்தாளர்கள் சுபாவின் தொடர்கதைதான் இந்தப் படத்தில் திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள்  நன்றாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன.  கம்போசிங், பாட்டு என்று நாங்கள் வெளிநாட்டுக்கெல்லாம் போய்  சிரமப்படவில்லை. தி.நகரிலுள்ள ஒரே ரூமில்தான் இந்தப் படத்தின் பாடல்களை உருவாக்கினோம். ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2-வது படம். ஸ்டண்ட் - சில்வா. கலை இயக்கம் - லால்குடி இளையராஜா.

ஆர்யாவுடன் இது எனக்கு 5-வது படம். ஆர்யா என் ஹீரோ. அவரைப் பார்த்தாலே போதும். எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். ‘வாங்க’ன்னு கூப்பிட்டால், ‘எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம்..?’ என்பார். .அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார்.

நான் எப்போ படம் தொடங்கினாலும் என் அம்மா ‘உன் தம்பியையும் நடிக்க வைப்பா’ என்பார்கள். அவருக்கு ஏற்ற மாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடுபட்டேன். தீபா சன்னதிக்கு நல்ல நடிப்புக்கு இடம் தருகிற பாத்திரம்.

யுவன் என் ஆரம்ப காலம் முதல் என்னுடன் பெரிய பலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியா போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது. படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது.'' என்றார்.

IMG_0620

பாடலாசிரியர் பா. விஜய் பேசும்போது, "நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து இது எட்டாவது படம். அதிலும் எல்லா படங்களிலும் எல்லா பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படியொரு நட்பு, புரிதல் உள்ளது. நண்பர்களைப் பார்க்கச் செல்வதுபோல போவேன். இந்த யூனிட்டில் பாடல் எழுதும்போது மட்டும் நான் கவிஞன் என்கிற மனநிலையில்  போனதில்லை. கையில் பேனா, பேப்பரை வைத்துக் கொண்டெல்லாம் எழுதுவதில்லை. அப்படியே மனதில் தோன்றியதை சொல்வேன். அதை அப்படியே பாடலாக்கிவிடுவார் யுவன்.

இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் பெண்களும், கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா..? இதுவரை தெரியாத அந்த விஷயம் இப்போதுதான் எனக்குப் புரிந்தது.  நட்புக்கு அவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர். 

இதுவரை மூவாயிரம் பாடல்களை எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை நடிக்க வந்த பிறகு அப்படி பரப்பிவிட்டார்கள். இதன் பாடல்களும், 'சர்வம்' படத்துக்குப் பிறகு இந்தப் படமும் பெரிய வெற்றியடையும்...'' என்றார்.

IMG_6368

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா  பேசும்போது, ''இந்தப் படத்துக்காக பேட்டி கேட்டு வர்றங்க எல்லாருமே, இந்தப் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார்? என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்றே கேட்கிறார்கள். இதில் புதிய முயற்சி எதையும் செய்யவில்லை. எப்போதும் வெளிப்படும் இசைதான் இதிலும் வந்திருக்கு. விஷ்ணுவர்த்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும். அவரை பள்ளி நாட்களிலிருந்தே எனக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர்... நாங்களெல்லாம் ஒரே வேவ் லென்த்தோட இருக்கிறதால இப்படி அமையுதுன்னு நினைக்கிறேன்..'' என்றார்.

நடிகர் கிருஷ்ணா பேசும்போது, ''என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் ஏன் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பார்கள். இனி இதைக் கேட்க மாட்டார்கள். என் முதல் இரண்டு படமும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் 'நேரம் வரும்போது நாம் இணையலாம்' என்று கூறினார். ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தது செம ஜாலியாக இருந்தது.. என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்து வெற்றி பெற்றுத் தந்தது. 'கழுகு' பட வெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான்.. அதேபோல் இந்தப் படமும் வெற்றி பெறுமென்று நம்புகிறேன்..'' என்றார்.

IMG_6379

ஆர்யா பேசும்போது, "என்னை நடிக்க வைத்து யு டிவியில் பல படங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்த்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணி நேரம் கதை சொல்வார். அதனால்தான் நான் அவரிடம் மட்டும் கதையே கேட்பதில்லை.

நான் இதுவரை நடித்தவை 25 படங்கள். என் எல்லாப் படங்களுக்கும் யுவன்தான் இசை என்கிற அளவுக்கு நிறைய செய்துள்ளார். என் சினிமா பயணம் 'தீப்பிடிக்க' பாடலில் தொடங்கியது. அது முதல் 'தீப்பிடிக்க' பாட்டில் நடித்த பையன் என்று அடையாளம் வந்தது. அது இன்னும் தொடர்கிறது காரணம் யுவன்.

'சர்வம்' படத்துக்கு பிறகு 'யட்சன்' படமும் பேசப்படும். இதில் கிருஷ்ணா  புது கிருஷ்ணாவாக வருவார். கிருஷ்ணாவுடன் நடித்ததில் சந்தோஷம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பெங்களூரிலிருந்து வந்துள்ள தீபா சன்னதி அழகான நடிகை. இந்தப் பட அனுபவம் ஜாலியாக இருந்தது.'' என்றார். 

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சுபா, நடிகை தீபா சன்னதி, ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் தயாரிப்பாளர் யு டிவி ஜி.தனஞ்ஜெயன் ஆகியோரும் பேசினார்கள். ஆடியோ சிடியை எழுத்தாளர்கள் சுபா வெளியிட யுவன் சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.