கவியரசர் கண்ணதாசனின் பேரன் அறிமுகமாகும் ‘யாதெனக் கேட்டேன்’ திரைப்படம்..!

கவியரசர் கண்ணதாசனின் பேரன் அறிமுகமாகும் ‘யாதெனக் கேட்டேன்’ திரைப்படம்..!

கவியரசர் கண்ணதாசனின் பேரனான முத்தையா கண்ணதாசன் ‘யாதெனக் கேட்டேன்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஐ.எஸ்.ஆர். வென்சர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தில் ஷனாயா, வைஷாலி, மாதவி உள்ளிட்ட மூன்று நாயகிகள் அறிமுகமாகிறார்கள். விஹான் இன்னொரு நாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய பாத்திரத்தில் நடிப்பு பயிற்சியாளர் சித்தன் கார்த்திஷ் மற்றும் சோலை ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – பொன் காசிராஜன், இசை – விவேக் நாராயண்.

கவியரசர் கண்ணதாசனின் ‘பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்’ என்கிற கவிதையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஐ.எஸ்.ஆர்.செல்வக்குமார் இயக்குகிறார். இவர் மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகரான ஐ.எஸ்.ஆரின் மகனாவார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்டது.

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள்.

அனைத்துத் தரப்பினரும் பார்க்கக் கூடிய வகையில் சஸ்பென்ஸ் கலந்த குடும்பப் படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளதாக இயக்குநர் ஐ.எஸ்.ஆர்.செல்வக்குமார் கூறினார்.