‘விஸ்வரூபம் – 2’ படத்தின் டிரெயிலர் ஜூன் 11-ல் வெளியாகிறது..!

‘விஸ்வரூபம் – 2’ படத்தின் டிரெயிலர் ஜூன் 11-ல் வெளியாகிறது..!

‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகத்தின் டிரெயிலர், வரும் ஜூன் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நேரடிப் படமாகவும், தெலுங்கில் மொழி மாற்றம் செய்தும் வெளியாகவுள்ளது.

‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரெயிலரின் தமிழ் பதிப்பை நடிகை ஸ்ருதிஹாசனும், தெலுங்கு பதிப்பை ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தி பதிப்பை அமீர்கானும் வெளியிடவுள்ளனர்.

3

இத்திரைப்படத்தில் சேகர் கபூர், வஹீதா ரஹ்மான், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, ஜல்தீப் அலாவத், நாசர், ஆனந்த் மகாதேவன், யூசுப் ஹூசேன், ராஜேந்திர குப்தா என்று முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீடு தொடர்பாக நடிகரும், இயக்குநருமான ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் பேசுகையில், “விஸ்வரூபம்-2’ திரைப்படத்தின் டிரெயிலரை இந்த நேரத்தில் வெளியிடுவதில் எங்களது நிறுவனம் பெரும் மகிழ்ச்சியடைகிறது.

இரண்டாம் பாகத்திற்காக பொறுமையுடன் காத்திருந்த உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் என்றென்றும் எங்களது நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரின் உழைப்பும் பாராட்டுக்குரியது. ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களின் உழைப்பின் மீதான உங்களது நம்பிக்கையே எங்களை மேலும் வலிமையடையச் செய்கிறது. எங்களின் இந்த உழைப்பும், படைப்பும் உங்களை மகிழ்வடையச் செய்யும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது..” என்றார்.