‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்

‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்

இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் நடிகர் கமல்ஹாசனும், அவரது அண்ணன் சந்திரஹாசனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சேகர் கபூர், வஹீதா ரஹ்மான், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, ஜல்தீப் அலாவத், நாசர், ஆனந்த் மகாதேவன், யூசுப் ஹூசேன், ராஜேந்திர குப்தா மற்றும் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கமல்ஹாசன், தயாரிப்பு – சந்திரஹாசன், கமல்ஹாசன், ஒளிப்பதிவு – Shamdat Sainudeen, Sanu John Varghese, படத் தொகுப்பு – மகேஷ் நாராயணன், விஜய் சங்கர், சண்டை பயிற்சி – Stefan Richter, ParvezFeroz, T.Ramesh, ஒலி வடிவமைப்பு – குணால் ராஜன், நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜூ மகாராஜ், கமல்ஹாசன், உடை வடிவமைப்பு – கவுதமி, கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, இசை – முகம்மது ஜிப்ரான், பாடல்கள் – வைரமுத்து, கமல்ஹாசன்.

2013-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதியன்று வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படத்தைக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான கமல்ஹாசன்.

முதல் பாகத்தின் விமர்சனம் இந்தப் பதிவில் உள்ளது. இதைப் படித்துவிட்டு இரண்டாம் பாகத்திற்கான விமர்சனத்தை வாசிப்பது நல்லது. http://truetamilans.blogspot.com/2013/02/blog-post_11.html

முதல் பாகத்தில் சொல்லாத கமல்ஹாசனின் முன் வாழக்கைக் கதை.. அவர் ஏன்.. எப்படி அல்கொய்தாவில் இணைந்தார்.. எதற்காக இந்த வேலையைச் செய்கிறார்.. என்பதற்கான விடையை இந்த பாகத்தின் முதல் பாதியிலேயே சொல்லிவிடுகிறார்கள்.

இந்திய ராணுவத்தில் மேஜர் அதிகாரியாகப் பணி புரிகிறார் விஸாம் அகமது காஷ்மீரி என்னும் கமல்ஹாசன். இவரிடம் பயிற்சி பெறுகிறார் அஸ்மிதா சுப்ரமணியம் என்னும் ராணுவ வீராங்கனையான ஆண்ட்ரியா.

ரா உளவுத் துறை தன்னுடைய வேலைக்குப் பொருத்தமாக இரண்டு பேரை தேர்வு செய்யச் சொல்லிக் கேட்கிறது. ராணுவ உயரதிகாரிகள் இதற்குப் பொருத்தமானவர்கள் என்று கமலையும், ஆண்ட்ரியாவையும் தேர்வு செய்து சொல்கிறார்கள்.

அவர்களது ஏற்பாட்டின்படியே இருவரும் தனியே ஒரு ஹோட்டலில் சந்திப்பதுபோல காட்சியை அமைக்க.. இது ஒழுக்க ரீதியிலான குற்றாச்சாட்டாகி ராணுவத்தில் விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவில் கமலுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் 10 வருட சிறை தண்டனை கிடைக்கிறது.

இதையடுத்து சிறையில் அடைக்கப்படும் இருவரும் ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி சிறையில் இருந்து மீட்கப்பட்டு ரா உளவுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

இப்படித்தான் விஸாம் என்னும் கமல்ஹாசன் நியூயார்க்கு பயணப்பட்டு அங்கே விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்திருக்கிறார். ஆண்ட்ரியாவுடன் அவருடனேயே இருந்து ஓமரை பிடிக்க வலை வீசியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்களால் கடத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கைதிகளை விடுவிக்க ராகுல் போஸுடன் நட்பு பாராட்டி திட்டம் போட்டு அமெரிக்க படையினரை வரவழைத்து ராகுல் போஸின் குடும்பத்தினரை அமெரிக்கா ஹெலிகாப்டரில் தப்பிக்க வைக்கிறார் கமல்ஹாசன். இந்தக் கடுமையான சமரில் ராகுல் போஸ் காயத்துடன் தப்பிக்கிறார்.

தப்பிக்கை கையோடு நியூயார் நகரையே தகர்க்கும் முயற்சியில் ராகுல் போஸ் ஈடுபடு அதையும் தனது சாகசச் செயல்களால் தடுக்கிறார் கமல். இந்த முயற்சியிலும் தோற்றுப் போய் தப்பித்துவிடுகிறார் ராகுல் போஸ். இப்போது கமல்ஹாசன் சொல்கிறார்.. “ஒண்ணு, அந்த ஓமர் சாகணும்; இல்ல நான் சாகணும். அப்பத்தான் இந்தக் கதை முடியும்..” என்று..!

அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை.

இப்போதும் அதே சூட்டோடு கமல்ஹாசன் தனது மனைவியான நிருபமா என்னும் பூஜா குமாருடனும், தனது தோழமையான அஸ்வினி என்னும் ஆண்ட்ரியாவுடனும் இங்கிலாந்துக்கு வருகிறார்.

இங்கே ஹோட்டலுக்குச் செல்வதற்குள்ளாக இவர்களைக் கொலை செய்ய ராக்கெட் லாஞ்சர் உடன் இரண்டு பேர் முயல்கிறார்கள். கமல்ஹாசன் அவர்களை பிடிக்க முயன்று அதில் ஒரு கொலைகாரனை கொன்றுவிடுகிறார். அவர்களுடைய தாக்குதலில் கமல்ஹாசனை அழைக்க வந்த இந்திய உளவாளி ஒருவரும் இறந்து போகிறார்.

இந்தியாவில் இருந்து வெளியுறவுத் துறையின் உயரதிகாரியான ஆனந்த் மகாதேவன் லண்டனுக்கு வந்து கமலின் உயரதிகாரியான சேகர் கபூரையும், கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசுகிறார். அதே லண்டனில் ஓரிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ஆனந்த் மகாதேவன் சுட்டிக் காட்ட அங்கே போய் சோதனையிடுகிறார் கமல்ஹாசன்.

அந்த நேரத்தில் அந்த இடம் வெடித்துச் சிதறினாலும் கமல்ஹாசன் தப்பிக்கிறார். இது ஆனந்த் மகாதேவனின் லீலை என்பதையறியும் கமல்ஹாசன் அவருக்கு போன் செய்து தான் உயிருடன் இருப்பதை எக்காளமாகச் சொல்கிறார். இவர்களை அழைத்து வந்த காரின் டிக்கியில் சோதனையிடும்போது ஒரு புதிய விவகாரம் வெடிக்கிறது.

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் தண்ணீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த அமைத்திருக்கும் அமைப்பை வெடி வைத்துத் தகர்க்கும் வேலையை சிலர் செய்கிறார்கள் என்பது தெரிய வர.. உடனடியாக அங்கேயும் ஓடுகிறார் கமல்ஹாசன். ஓடிய வேகத்தில் தனது மனைவியையும் உடன் லண்டன் போலீஸ் ஒருவரையும் தண்ணீருக்குள் சோதனையிட அனுப்பி வைக்கிறார்.

அதே நேரம் அந்த இடத்தில் குண்டு வைக்க வரும் ஒரு தீவிரவாதியை கமல்ஹாசன் அடையாளம் கண்டு அவனை காலி செய்துவிட்டு தானே தண்ணீருக்குள் குதித்து அந்த வெடிகுண்டைக் கைப்பற்றி நாசவேலை நடைபெறாமல் தடுக்கிறார்.

இதையடுத்து டெல்லி திரும்புகிறார்கள் மூவரும். டெல்லியில் வெளியுறவுத் துறையிலும், உள்துறையிலும், தன்னை வேலைக்கு வைத்திருக்கும் ரா அமைப்பிலும் அடுத்தக் கட்ட பணிகள் பற்றி பேச கமல் காத்திருக்கம் வேளையில், ராகுல்போஸ் ஆண்ட்ரியாவுடன் மோதி அவரைக் கொலை செய்கிறார்.

மேலும், கமல்ஹாசனின் அம்மாவான வஹீதா ரெஹ்மானையும், மனைவி பூஜா குமாரையும் கடத்திச் செல்கிறார். கமல்ஹாசன் தன்னிடம் சரணடைந்தால் மட்டுமே அவர்களை உயிருடன் பார்க்க முடியும் என்கிறார் ராகுல் போஸ்..!

கமல்ஹாசன் ராகுல் போஸை தேடிச் சென்று எப்படி அவருடன் மோதி அவரை அழித்து தனது மனைவியையும், அம்மாவையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

இடையிடையே ஆண்ட்ரியா, பூஜாவுக்கும் இடையிலான சக்களத்தி சண்டை, ஈகோ மோதல்.. கமல்-பூஜாவுடனான காதல், நெருக்கம், கட்டிலறை காட்சிகள் என்று பலவற்றையும் தமிழகத்தின் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொங்கல் பரிசு போல கலந்து கட்டி அடித்திருக்கிறார் கமல்.

முதல் பாகத்தில் எடுத்து மீந்து வைத்திருந்த காட்சிகளைத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் பயன்படு்த்தியிருக்கிறார். எடுத்தவைகளை தூக்கிப் போட மனசில்லாமல் இதற்காகவே இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இரண்டாம் பாகத்தில் வரும் ராணுவ அகாடமி சம்பந்தப்பட்டவைகள் மட்டுமே புதிதாக ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன.

கமலிடம் இருக்கும் பெரிய பிரச்சினையே தான் நினைப்பதையெல்லாம் வெளியில் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறார். இந்த நினைப்புக்குக் காரணம் “கொடுப்பதையெல்லாம் ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து ஆச்சரியப்பட்டு போவார்கள்..” என்கிற குருட்டு நம்பிக்கைதான்.

அதே சமயம் தன்னுடைய அரசியல் கொள்கை, தான் கொண்டிருக்கும் இந்திய தேசியத்தின் மீதான காதல், ஜாதிப் பற்றில்லாததை காண்பித்துக் கொள்வது,  இந்தியாவின் வெகுஜன மக்களிடையே வேறோன்றிருக்கும் ஐயர்கள் அனைவருமே சுயநலவாதிகள்.. தேசத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளையடிப்பவர்கள்.. இத்யாதி.. இத்யாதி.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். இது அனைத்திற்கும் இந்தப் படத்தில் வலிந்து திணித்து வசனங்கள் மூலமாக சொல்லியிருக்கிறார் கமல்.

ஐயர் வேற. ஐயங்கார் வேற என்பதில் துவங்கி.. ஐயர்மார்கள் எல்லாம் தேசத்துக்கு விரோதிகளாகத்தான் இருக்கிறார்கள் என்று திட்டிவிட்டு தான் எப்போதும் நல்லவன் என்றும் ஐயராகவே இருந்தாலும் தான் புனிதமான இந்திய தேசியத்தைக் காப்பாற்றும் இந்தியக் குடிமகன் என்றும் சொல்கிறார். அவர் ஏற்றிருக்கும் கேரக்டரான விஸாம் அகமது காஷ்மீரி ஒரு நல்ல முஸ்லீம் என்றும், இந்தியாவின் நேர்மையான குடிமகன் என்றும் சொல்லிக் கொள்கிறார்.

ஆக, கமல் இந்த இரண்டாம் பாகத்தைக் கொண்டு வந்தது எதற்காக என்பதை படத்தின் துவக்கத்தில் வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விழாக்களை இணைத்து ஒளிபரப்பியதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கும் ஆனந்த் மகாதேவனை சேகர் கபூரிடம் காட்டிக் கொடு்க்காமல் காப்பாற்றிவிட்டு பின்பு அவரைப் பார்க்கவே டெல்லிக்கு வரும் கமல்ஹாசனின் நோக்கம்தான் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

ரா உளவுத் துறையின் செயல்பாடுகளை இப்படி பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தியிருக்கும் விதத்திற்கு சென்சார் எப்படி ஒப்புதல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் இது நிஜம்தான்..!

ராணுவப் பயிற்சியின்போது ஆண்ட்ரியாவின் மீது ஒரு இதுவாக இருக்கும் கமல்ஹாசன் பின்பு எப்படி மடிசார் மாமி பூஜாவைக் கைப்பிடித்தார் என்று தெரியவில்லை. விமானத்தில் வந்து கொண்டிருக்கும்போதுதான் பூஜா ஆண்ட்ரியாவை காட்டி “இது யார்…?” என்கிறார். ஆக இந்த முக்கோணக் காதல் கதையை தன்னுடைய ரசிகர்களுக்காகவே அமைத்திருக்கிறார் என்பது தெளிவு.

அதே ரசிகர்களை ஆசுவாசப்படுத்துவதற்காக இந்த 60 வயதிலும் தான் இன்னமும் ஆக்ட்டிவ்வாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு பூஜாவுடன் காட்டும் கட்டிலறை சரசங்கள் அவருடைய ரசிகர்களுக்கு போதுமானதுதான்.  

முதல் பாகத்தில் இருந்த அளவுக்கான ஆக்சன், திரில்லிங் போர்க்களக் காட்சிகள் இதில் இல்லையென்றாலும், முதல் பாகத்தில் விட்டுப் போனவைகளையெல்லாம் தொகுத்து இதில் ஆங்காங்கே பிட்டு, பிட்டாக ஓட்டுவதால் படம் ஒரு விறுவிறுப்பாக இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. படம் முடிந்து வெளியில் வரும்போதுதான் எல்லாமே மாயை என்பது தெரிகிறது.

இனி கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பாரோ.. நடிக்க மாட்டாரோ.. தெரியாது.. ஆனால் அவரிடம் ஒரு சின்ன வேண்டுகோள்.. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், சினிமா பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் பேசுவதையெல்லாம் சினிமாவில் வசனங்களாக வைத்துவிட வேண்டாம்.. ஏதோ பேட்டி கொடுக்குறாரு போலிருக்கு என்று நினைத்துவிடுவார்கள்..!  

கமலின் வசனங்கள் என்றாலே அதற்குத் தனியாக கோனார் நோட்ஸ் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கும் என்பது உலகறிந்த செய்தி. இந்தப் படத்திலும் அதற்கேற்றவாறே வசனங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

தான் சரளமாக பேசும்போது என்ன வருமோ, அதையெல்லாம் வசனமாக பேசி குவித்திருப்பதால் காட்சிகளை புரிந்து கொண்டு அனுபவிப்பது வயற்றுப் போக்கு நேரத்தில் சாப்பிட்ட கருவாட்டு பீஸை நினைப்பது போலிருக்கிறது.

இதையும் மீறி சிற்சில வசனங்கள் கமலின் டச்சாகவே படத்தில் பதிந்திருக்கின்றன. விமானத்தில் செல்லும்போது சேகர் கபூர் “தூங்கிட்டீங்களா..?” என்று கேட்க “யெஸ்.. ஸ்லீப்பர்ல…” என்று சொல்வது நச் என்ற பதில்.. இதேபோல் ஆனந்த் மகாதேவனிடம் “வெள்ளைக்காரன் 200 வருஷமா சுரண்டுனதை நீங்க 64 வருஷத்துல சுரண்டிட்டீங்க…” என்று வெடிப்பதுகூட கை தட்டலை வரவழைக்கிறது. “நான் ஒண்ணும் உன்னை மாதிரி கோட்டு சூட்டு போட்ட மாமா இல்லை…” என்று சொல்லி தன்னுடைய ஜாதிப் பற்றில்லாத தன்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார் கமல்.

சிற்சில வசனங்களை பேசி முடித்துவிட்டு போகும் சில நொடிகள் கழித்துதான் நமக்கே யோசனை வந்து உதட்டோரம் சிரிக்க முடிகிறது. ஆனந்த் மகாதேவன் ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறும்போது “ஒண்ணும் அவசரமில்லை. யோசிச்சு சொல்லுங்கன்னு சொன்னேன்…” என்று கமல்ஹாசன் சொல்லும்போது குபீர் சிரிப்பு வருகிறது. ஆனால் அது ஆக்சனால்தான்..! இப்படி ஆக்சனும், வசனமும் சேர்ந்து நம்மை படுத்தியெடுத்திருக்கின்றன.

வெகு சீரியஸான விஷயத்தைக்கூட படு காமெடியாக நகர்த்தியிருப்பதால் ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டிருக்கும் ஒட்டுக் கேட்பு பேட்டரியை கைப்பற்றும் முயற்சியின் வீரியத்தை உணர முடியாமல் போகிறது. கடைசியாக ஆனந்த் மகாதேவனை தனக்குத்தானே தண்டனை கொடுத்துவிட்டு இறந்து போக விட்டிருக்கிறார் இயக்குநர் கமல். ஆனால் ராகுல் போஸை மருத்துவமனையில் வைத்து அவரது மனதை உருக வைத்துவிட்டு மரணிக்க வைக்கிறார்..!

முதிர் கன்னியாக இருக்கும் பூஜா குமாரைவிடவும் ஆண்ட்ரியாவே தன்னுடைய ஸ்டைல் நடிப்பில் கவனித்தில் ஈர்க்கிறார். அக்ரஹாரத்து மைதிலியைபோல் பூஜா குமார் பேசும் ஸ்டைலும், ஒவ்வொரு கணமும் அவர் தவிக்கும் தவிப்பும் சாதாரண மகளிரை ஈர்க்கும்வகையில் இருக்கிறது. இதைத்தான் இயக்குநர் கமல்ஹாசன் விரும்பியிருக்கிறார்.

இரண்டே காட்சிகள் என்றாலும் வஹீதா ரஹ்மான் கவனித்தில் கொள்கிறார். தன்னுடைய அம்மாவைக் காண வந்த காட்சியில் கமல்ஹாசன் தன்னை அடக்கிக் கொண்டு வஹீதாவை பேச வைத்திருப்பதுகூட ஆச்சரியம்தான். ஆனால் இப்படி அம்மாவை ஹோமில் அடைத்துவைத்துவிட்டு இந்தியாவுக்காக நாடு, நாடாக போயி கொலை செய்யும் கமல்ஹாசனுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என்பது அவருக்குத் தெரியுமா..? பெற்ற தாயை தன்னுடன் வைத்துக் கொண்டு கவனிக்காமல் நாடு, நாடாக அலையும் கமலின் செய்கை நேர்மையானதா என்பதை கேரக்டர் ஸ்கெட்ச்சை உருவாக்கிய கமலிடம்தான் கேட்க வேண்டும்.

ராகுல் போஸின் தனித்துவமான நடிப்பு முதல் பாகத்தைவிடவும் இதில்தான் அதிகம் தெரிகிறது. அவருக்கான மேக்கப்பும், அமெரிக்கப் படையின் தாக்குதலினால் தன்னுடைய உடல் நலிந்து போயிருப்பதையும் சொல்லி கோபப்படும் காட்சியிலும் ஒரு ஜிகாதி என்பதையும் தாண்டி அச்சச்சோ என்று பாவம் பார்க்க வைத்திருக்கிறார் ராகுல் போஸ்.

கமல்ஹாசனை கொலை செய்ய டைம் பாமை வைக்கும் காட்சியில் “ஜிகாதியெல்லாம் சீக்கிரமா சாகணும் அவங்களுக்கு 40 செகண்ட்டே போதும்…” என்று கோப சிரிப்புடன் சொல்லும் காட்சியில் வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார் ராகுல் போஸ்..!

ஆண்ட்ரியாவின் படுகொலை காட்சி எதிர்பாராதது என்றாலும் திகைக்க வைக்கிறது. அதேபோல் லண்டனில் கமலை கொலை செய்ய ஆனந்த் மகாதேவன் செய்யும் திட்டமிட்ட சதியும் பயங்கொள்ள வைக்கிறது. சேகர் கபூரிடம் கடைசி நேரத்தில் ஆனந்த் மகாதேவன் பற்றி எச்சரிக்கை செய்ய.. அவர் பயந்து பயந்து ஆனந்தை பார்க்கப் போகும் இடத்திலும் ஒளிப்பதிவும், இயக்கமும் அருமை. இப்படியாக பல காட்சிகள் படத்தை இறுதிவரையிலும் கவனிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவு எப்படி தரமோ அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளையும் மிக மிக செய் நேர்த்தியோடு எடுத்திருக்கிறார்கள். கமலின் கார் விபத்துக்குள்ளாகி பறக்கும் காட்சிகளிலும், தண்ணீருக்குள் சென்று வெடிகுண்டைக் கைப்பற்ற செய்யும் காட்சிகளிலும், இறுதியான கிளைமாக்ஸில் சண்டை காட்சிகளிலும் படமாக்கலை அருமையாகச் செய்திருக்கிறார்கள்.

சென்ற படம் வரையிலும் சாதாரண ஜிப்ரானாக இருந்த இசையமைப்பாளர் இந்தப் படத்தில் முகம்மது ஜிப்ரானாக மாறியதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் பின்னணி இசையில் மட்டும் அடித்து ஆடியவர் பாடல்களுக்கான இசையில் கொஞ்சமே வேலையைக் காட்டியிருக்கிறார்.

படத்தின் ஒலி வடிவமைப்பை இன்னமும் கவனமாக கூடுதல் ஒலியுடன் செய்திருந்தால் ஓடிப் போன வசனங்களெல்லாம் காதுகளில் நன்கு கேட்டு காட்சிகளை நன்கு ரசிக்க முடிந்திருக்கும். வசனங்களே புரியாமல் இருக்க.. காட்சிகள் மட்டும் எப்படி மனதில் நிற்கும்..?

ஒரு ஜிகாதியை மனம் திருந்திய நிலையில் இறக்க வைத்திருப்பதும், ஒரு தேசத் துரோகி அம்பியை தற்கொலை செய்து கொள்ளச் செய்திருப்பதும், தேசத்திற்காக ராணுவத்தில் தன் மீது விழுந்த பழியை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணை சாகடித்திருப்பதும்தான் இந்த ‘விஸ்வரூபம்-2’ படத்தின் சாதனை..!

எல்லாப் புகழும் இறைவனுக்கே..!