“என்னத்த செஞ்சு கிழிச்சிட்டீங்க..?” – நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி..!

“என்னத்த செஞ்சு கிழிச்சிட்டீங்க..?” – நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி..!

நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் நிற்கிறார் என்றவுடன் திரையுலகத்திலேயே அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர் சேரன் ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

இன்னொரு பக்கம் விஷாலை எப்போதுமே எதிர்த்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்பதற்காகவே விஷாலை வறுத்து எடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக சுரேஷ் காமாட்சி  விஷாலுக்கு தொடர்ச்சியாக பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

அவை இங்கே :

1. ‘நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு வருடத்தில் கட்டவில்லை எனில் ராஜினாமா செய்கிறேன்’ என்றார். சொல்லி 2 வருசம் ஆகுது. என்னாச்சு..?

2. ‘விவசாயிகளின் பிரச்சனை பற்றி பேசுவதற்காக மத்திய நிதியமைச்சரை சந்திக்கப் போகிறேன்’னு சொன்னாரு. எந்த பிரச்சனைக்கு எந்த துறையை அணுக வேண்டும்னுகூட தெரியாத அறிவாளி இவர். அமைச்சரை சந்திச்சிட்டாரா..?

3. இவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன பிறகுதான் அசோக்குமார் செத்தாரு. இப்ப அன்புச்செழியனை கைது பண்ணனும் பேசுறாரு. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்புதான், ‘அன்பு அண்ணா இல்லைனா நான் தயாரிப்பாளராகவே ஆகி இருக்க முடியாது’ என்றார்.

4. ‘சல்லிக்கட்டு பிரச்சனைக்கு பிரதமரை சந்திக்க போறேன்’னு பிரஸ் மீட் தலைப்பு செய்தி கொடுத்தாரு. பிறகு போனாரா.. பார்த்தாரா.. ஒரு தகவலும் இல்லை.

5. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு ‘காவிரி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும்’ என்று வெளிவந்தவுடன், அந்த நேரத்தில் கர்நாடகாவில் போய் காவிரியை தரணும்னு பேசி நீர் திறந்த பிறகு ‘நான் சொல்லியதால் திறந்ததற்கு நன்றி’ என அறிக்கை விட்டார்.

6. ‘தியேட்டர்களில் கிடைக்கும் டிக்கெட் காசில் இருந்து விவசாயிகளுக்கு 1 ரூபாய் தரப்படும்’ என சொன்னார். இதுவரை தரவில்லை. ‘துப்பறிவாளன்’ படத்தின் வசூலில் தருவேன் என்றார். அதிலும் தரவில்லை.

7. ‘படத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் கேபிள் டிவி கட்டணமாக பெற்றுத் தரப்படும்’ என்றார். அதுவும் நடக்கவில்லை.

8. ‘QUBE கட்டணம் 2500 ஆக குறைக்கப்படும்’ என்றார். ஆனால் இப்போது 32000 ஆக அதிகரித்துவிட்டது.

9. ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தை ரிலீஸ் செய்வேன்’ என்றார். இன்றுவரையிலும் அந்தப் படம் வெளிவரவில்லை.

10. ‘மருத்துவ கல்லூரி மாணவர்கள் படிப்புக்கு பணம் தருவேன்’ என்றார். என்னாச்சு… கொடுத்தாரா?

11. தமிழ் ராக்கர்ஸை பிடிக்க வேண்டும் என்று சொல்லி, வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் 1 இலட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது அவர்களைப் பிடித்து விட்டாரா…?

12. இவர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக வந்த பிறகுதான் படத் தலைப்பை பதிவு செய்ய, கட்டணம் 500 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

13. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கட்டணம் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 3 இலட்சமாக உயர்த்தியுள்ளார்.

14. நடிகர் சங்கத்தில் செயலாளர்.. தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன பிறகு என்ன செஞ்சி கிழிச்சிட்டீங்கனு இப்போ ஆர்.கே நகர் தேர்தலில் நிற்க போறிங்க…?

அறிக்கை, அறிவிப்பு, தலைப்பு செய்தி… இதுல நம்ம பெயர் வரணும்கிறதுக்காக எங்கயாவது மைக் பிடிச்சு என்னத்தையாவது பேசிவிட வேண்டியது.

1200 பேர் கொண்ட சங்கத்தையே காப்பாத்த முடியல… இதுல 8 கோடி தமிழனை காப்பாத்த போறாராக்கும்..” என்று கடுமையாக கேள்வியெழுப்பியுள்ளார் சுரேஷ் காமாட்சி.