விஷால் படங்களுக்கு தடை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு..!

விஷால் படங்களுக்கு தடை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு..!

பிரச்சினைக்கு பஞ்சமேயில்லையா தமிழ்ச் சினிமாவுலகில்..?! ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பிளாட்பார்ம் போட்டுத் தர்றாங்க..!

இந்த வாரம் விஷால் வாரம் போலிருக்கிறது. சென்ற வாரம் வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகைக்கு பேட்டியளித்த விஷால், தான் அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் நுழையப் போவதாகவும், அந்த சங்கம் அங்கே தள்ளாடிக் கொண்டிருப்பதாகவும், சங்கம் செயல்படாமல் முடங்கிப் போயிருப்பதாகவும் பேட்டியளித்திருந்தார்.

வழக்கம்போல இந்தப் பேட்டியை படித்த்தும் பல தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கொதித்தனர். நடிகர் விஷாலே அந்தச் சங்கத்தில் ஒரு உறுப்பினர் என்பதால், ‘சங்க விஷயத்தை சங்கத்திற்கு வந்து பேசியிருக்கலாமே..? எதற்காக வெளியில் பேச வேண்டும்?’ என்று கேள்வியெழுப்பினார்கள் சில உறுப்பினர்கள்.

இந்த நிலைமையில் இன்று மாலை சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடிகர் விஷால் ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டி பற்றி உறுப்பினர்களுக்குள் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. நடிகர் மன்சூரலிகான் மட்டுமே விஷாலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் மன்சூருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு, “விஷாலை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே எதிர் கொண்டார்கள். இதுவரையிலும் யாரும் லாபம் சம்பாதித்ததில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி விஷால் பத்திரிகையில் பேசியது முறையல்ல. விஷால் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். அவருடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.” என்றார்.

இறுதியாக இந்தப் பிரச்சினையில் விஷாலை மன்னிப்பு கேட்க வைக்க பெரும்பாலான உறுப்பினர்கள் சங்கத் தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சங்கத்தில் இது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.

“தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றி விமர்சித்து கொடுத்த பேட்டிக்காக ஒரு வார காலத்திற்குள் நடிகர் விஷால் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், விஷால் நடிக்கும் (கத்தி சண்டை படம் தவிர) வேறு எந்த படத்திற்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை..” என முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “விஷால் பதில் கூறவில்லை என்றால்.. கண்டிப்பாக அவருடைய படங்கள் தடை செய்யப்படுமா..?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “அவர் வயசு, அப்படித்தான் பேச சொல்லும். அவருகூட இருக்கறவங்க அவருக்கு அறிவுரை கூற வேண்டும். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது எங்களது நோக்கமல்ல.. அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.. அதற்காகத்தான் இந்த நடவடிக்கை..” என்று பூசி, மெழுகி பேசினார் தாணு.

ஆக மொத்தம், இந்த வாரம் நடிகர் சங்கம் Vs. தயாரிப்பாளர் சங்கம் மோதல் வாரம் போலிருக்கிறது. காத்திருப்போம்..!