“ஆர்யாவுக்குத்தான் பர்ஸ்ட்.. அடுத்ததுதான் எனக்கு..” – விஷாலின் கல்யாண உறுதி..!

“ஆர்யாவுக்குத்தான் பர்ஸ்ட்.. அடுத்ததுதான் எனக்கு..” – விஷாலின் கல்யாண உறுதி..!

‘பூஜை’ கொடுத்த புல்பூஸ்ட்டில் மிக சந்தோஷமாக இருக்கிறார் நடிகர் விஷால். ‘பூஜை’க்கேற்ற ‘பரிசு’ கிடைத்திருப்பதால் மனிதர் படு உற்சாகமாக வெளியூர்களுக்கு ரசிகர்களைச் சந்திக்க போய்க் கொண்டிருக்கிறார்.

தெலுங்கிலும் ‘பூஜை’ திரைப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளதாம். இதுவும் அவரை சந்தோஷப்படுத்த “இந்தத் தீபாவளி தனக்கு ஒரு ஸ்பெஷல் தீபாவளி…” என்று சமீபத்திய ஒரு பேட்டியில் மகிழ்ச்சி பொங்க சொல்லியிருக்கிறார் விஷால்.

“இந்த வருடத் தீபாவளி எனக்கு விசேஷமானது. தொடர் ஹிட் படங்களை கொடுத்த சந்தோஷம் இருக்கிறது. பூஜையும் அந்த லிஸ்ட்டில் சேரும். மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினேன்..” என்கிறார் விஷால்.

இப்போதைய புதிய கதாநாயகர்கள் குறித்து..? 

“இப்போதைய இளம் கதாநாயகர்கள் ரொம்பத் திறமையானவர்களாக இருக்கிறார்கள். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நிறைய பேரை அதிர வைத்தது. விஜய்சேதுபதி நல்ல கதைகளில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு ‘கும்கி’யில் சிறப்பாக நடித்திருக்கிறார்..”

இந்த வருஷமாவாவது கல்யாணச் சாப்பாடு போடுவீங்களா..?

“என் திருமணம் இப்போதைக்கு இல்லை. அடுத்த வருடமும் இருக்காது. ஆர்யாவுக்கு திருமணம் முடிந்த பிறகே என் திருமணம் நடக்கும்..”

இன்னமும் நடக்காத ஆசை ஏதாவது இருக்கிறதா..?

“வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது.. கதாநாயகனைவிட வில்லனுக்குத்தான் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே சைக்கோ வில்லனாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.”

எல்லா இள வயது ஹீரோயின்ஸ்கூடவும் டூயட் ஆடியாச்சு. இன்னும் யாராவது மனசுல இருக்காங்களா..?

“இலியானாவுடன் நடிக்க விருப்பம் உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று கேட்டால் சொல்லத் தெரியாது..”

இப்போது மனதில் இருக்கும் வருத்தம்..?

இணையத்தளங்களில் சிலர் நடிகர்களை கண்டபடி விமர்சனம் செய்வது வருத்தமாக உள்ளது. படங்கள் பற்றி பொதுவாக விமர்சித்துவிட்டுப் போகட்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் யாரையாவது குறிப்பி்ட்டு அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்றெல்லாம் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இப்படி விமர்சிப்பவர்கள் தங்கள் பெயர்களை குறிப்பிடுவதில்லை. அவர்களது விமர்சனங்களைவிட மக்கள் விமர்சனங்கள்தான் முக்கியம்..” என்கிறார் விஷால்..!




error: Content is protected !!