ஜூன்-21, மாலை 6 மணிக்கு ‘விஜய்-61’ படத்தின் தலைப்பு வெளியாகிறது..!

ஜூன்-21, மாலை 6 மணிக்கு ‘விஜய்-61’ படத்தின் தலைப்பு வெளியாகிறது..!

நடிகர் விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த மூன்று வேடங்களுக்கும் பொருத்தமான ஹீரோயின்களாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேன்ன் மூவரும் நடிக்கின்றனர்.

மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, வடிவேல், சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் அணி வகுத்திருக்கிறது.

ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்குநர் – முத்துராஜ், சண்டை பயிற்சி – அனல் அரசு, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் – விவேக், திரைக்கதை – விஜயேந்திர பிரசாத், ரமணகிரிவாசன், கதை, வசனம், இயக்கம் – அட்லீ.

ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் முரளி ராமசாமியும், ஹேமா ருக்மணியும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இளைய தளபதி விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லீ இவர்களுடன் ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனம் இணையும் முதல் படம் இதுவாகும்.

சென்னையில் பிரம்மாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிவருவது படத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்.

“இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22-ம் தேதி வருவதையொட்டி அதற்கு முந்தைய நாளான ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு இத்திரைப்படத்தின் பெயரும், டீஸரும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்…” என்று தயாரிப்பாளர் முரளி ராமசாமி அறிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வகையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




error: Content is protected !!