விதார்த்-அஞ்சலி நாயர் நடிக்கும் திகில், சஸ்பென்ஸ் கலந்த திரைப்படம்..!

விதார்த்-அஞ்சலி நாயர் நடிக்கும் திகில், சஸ்பென்ஸ் கலந்த திரைப்படம்..!

Preniss International (OPC) Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிரேம்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் விதார்த் நாயகனாக நடிக்கவுள்ளார்.

விதார்த்தின் மனைவியாக, நாயகியாக ‘நெடுநல்வாடை’ படத்தில் நாயகியாக நடித்துப் புகழ் பெற்ற அஞ்சலி நாயர் நடிக்கிறார். விதார்த்தின்  நண்பனாக ‘பிக் பாஸ்’ புகழ் சென்ட்ராயன் நடிக்கிறார். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் நடிகரான  சந்தோஷ் இப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர்களுடன் சங்கிலி முருகன், ‘ஆடுகளம்’ நரேன், லக்ஷ்மி பிரியா மற்றும் பலரும் நடிக்க உள்ளனர்.

‘மெட்ரோ’ மற்றும் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த N.S.உதயகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் ராகவன் என்பவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு படத் தொகுப்பு செய்த மணி குமரன் இப்படத்திற்கும் படத் தொகுப்பு செய்யப் போகிறார்.  ‘சத்யா’, ‘சைத்தான்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் கலை இயக்குனராக பணியாற்ற உள்ளார் A.B.R.

‘பருத்தி வீரன்’, ‘நாடோடிகள்’, ‘சுப்ரமணியபுரம்’ மற்றும் ‘ரேணிகுண்டா’ படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகர் இப்படத்திற்கும் சண்டை பயிற்சியை செய்ய உள்ளார்.

நிறைய மர்மங்கள் நிறைந்த இந்த திரில்லர் திரைப்படத்தை புதுமுக இயக்குநர் மனோஜ் ராம் இயக்கப் போகிறார். இவர் பிரபல இயக்குநரான ஷக்தி சௌந்தரராஜனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

இப்படத்தின் திரைக்கதை தமிழுக்கு முற்றிலும்  புதிதான களத்தில் முழுக்க, முழுக்க மர்மங்கள் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMG-20190828-WA0015(1)

இப்படம் பற்றி இயக்குநர் மனோஜ் ராம் பேசும்போது, "சம காலத்தில் பேசப்பட்டு வரும்  ஒரு முக்கியமான  பிரச்சனையை  மையமாக வைத்து இப்படத்தின் கரு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை  மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாக்க உள்ளோம். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் எதிர்பார்க்காத நிறைய திருப்பங்களும், விறுவிறுப்பும்  கூடியதாக அமைந்திருக்கும்.

விதார்த் இப்படத்தில் துப்பறிபவராக  நடிக்க உள்ளார். விதார்த் தொடர்ந்து கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து கதையின் நாயகனாக விளங்குகிறார். இப்படத்திற்கு  அவர் கச்சிதமாக பொருந்துவார். எங்களை மாதிரி புதுமுக இயக்குனர்களுக்கு அவர் ஒரு வரப் பிரசாதம். இப்படத்தின் திரைக்கதை முடித்ததும் இந்த கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடிப்பதற்கு அவரால் மட்டுமே முடியும் என்று எனக்கு தோன்றியது.

புதுமுக இயக்குநரான என்னை முழுமையாக நம்பி, இப்படி ஒரு வாய்ப்பு வழங்கியதற்காக தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் அவர்களுக்கும், வெள்ளை சேது அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.

இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் தற்போது தீவிரமாக  நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க, முழுக்க சென்னையிலேயே நடைபெறவுள்ளது.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘Production No.2’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் பெயர் விரைவில் வெளியாகும்.