“நெருக்கடில இருக்கேன். படம் பண்ணி கொடுங்க…” – தனுஷிடம் கேட்ட வெற்றிமாறன்..!

“நெருக்கடில இருக்கேன். படம் பண்ணி கொடுங்க…” – தனுஷிடம் கேட்ட வெற்றிமாறன்..!

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் கம்பெனியும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கொடி’.

இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனான தனுஷ், படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் வெற்றிமாறன், இன்னொரு தயாரிப்பாளரான மதன், இணை தயாரிப்பாளரான கோபால் ஜேம்ஸ், நாயகி அனுபமா பரமேஸ்வரன், படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், நடிகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

vetrimaran

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "தனுஷ் ஸார் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முக்கியப் புள்ளி. அவரிடத்தில் எனக்கு நிறைய உரிமைகள் உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஒரு முறை, ‘எனக்கு நிறைய நெருக்கடிகள் இருக்கு. என் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்க’ன்னு கேட்டேன்.

உடனேயே தனுஷ் ஸார், ‘துரை செந்தில்குமார் ஒரு ஒன் லைன் சொல்லியிருக்கார். நல்லாயிருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்களும் கேளுங்க..’ என்று சொல்லி என்னிடம் அனுப்பி வைத்தார். இப்படித்தான் இந்தப் படம் துவங்கியது. இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக இருந்த தனுஷ் சாருக்கு, இந்த தருணத்தில் நான் நன்றி கூற வேண்டும்.

இயக்குநர் துரை செந்தில்குமார் தனுஷ் சார் தயாரிப்பில் இரண்டு வெற்றி படங்களை உருவாக்கினார். இப்போது நான் தனுஷ் சார் நடிப்பில் – துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்  இந்தப் படத்தை தயாரித்துள்ளேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  

நான் இந்த படத்தில் பெயருக்குத்தான் தயாரிப்பாளர் என்று கூறுவேன். இடையில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஸார் வந்தார். ‘நானும் இதன் தயாரிப்பில் ஈடுபடுகிறேன்’ என்றார். அவர் வந்தவுடன் படம் இன்னமும் பலம் பெற்றது. தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிப்பதால் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்குன்றது எனக்குத் தெரியும். நிச்சயம் ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றாது.." என்றார் உறுதியான குரலில்..!