விவசாயிகளின் தற்கொலை பற்றிய கதையை படமாக்குகிறார் வெற்றிமாறன்..!

விவசாயிகளின் தற்கொலை பற்றிய கதையை படமாக்குகிறார் வெற்றிமாறன்..!

‘விசாரணை’ படத்தின் அதிவேக வெற்றிக்குப் பின்பு மீண்டும் ஒரு பரபரப்பு படத்தைக் கொடுக்கப் போகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

vetrimaran

Kota Neelima என்கிற பத்திரிகையாளர் எழுதியிருக்கும் ‘Shoes Of The Dead’ என்கிற புத்தகத்தை தனது அடுத்தப் படத்தின் கதைக்களமாக வெற்றிமாறன் தேர்வு செய்திருக்கிறாராம்.

மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான அளவிற்கு விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை மையப்படுத்திதான் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறதாம்.

Kota Neelima ‘தி சண்டே கார்டியன்’ பத்திரிகையில் அரசியல் பிரிவின் எடிட்டராக பணியாற்றியிருக்கிறார். பல்வேறு பத்திரிகைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அரசியல் தொடர்பான பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் நன்கு அறிமுகமானவர்.

2013-ம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகத்தின் கதை.. ஒரு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் அவலத்தை விளக்குகிறது. இன்றைய அரசியல் சூழல் காரணமாய் கடன் தொல்லை, தொழிலின் பாதிப்பினால் விளைந்த தற்கொலை என்பதையெல்லாம் ஒத்துக் கொள்ளாமல் அது தற்கொலையே இல்லை என்கிற அளவுக்கு சாதிக்க வைக்கும் இந்தியாவின் அரசியலையும் இந்தக் கதை வெளிப்படுத்துகிறதாம்..!

ஏற்கெனவே தனுஷ், சமந்தா நடிப்பில் ‘வடசென்னை’யை இயக்க தயாராக இருந்த வெற்றிமாறனுக்கு இன்னமும் தனுஷ் தேதிகள் கொடுக்காததால் அவருக்காகக் காத்திருக்காமல் புதிய படத்தை இயக்கலாமே என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் வெற்றிமாறன். இந்தப் படத்தை தனது சொந்த பேனரான கிராஸ்ரூட் நிறுவனத்தின் பெயரில் வெற்றிமாறனே தயாரிக்கிறார்.

தற்காலத்திய சினிமாவில் இயக்குநர்களை படைப்பாளிகள் என்று அழைப்பதற்கு ஒரு அடையாளமாக இருப்பவர் வெற்றிமாறன். இப்படியொரு கதையை தேர்வு செய்த வெற்றிமாறனுக்கு நமது வாழ்த்துகள்..!