அபி சரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றி மாறன்’..!

அபி சரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றி மாறன்’..!

லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றி மாறன்.’

அபி சரவணன்  கதாநாயகனாக  நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மேலும், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

குணசேகரன் ஒளிப்பதிவு  செய்துள்ளார்.  டேவிட் கிறிஸ்டோபர் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநரான மனோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால்தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழி வாங்க கிளம்பினால் என்னவாகும்..? அதுதான் இந்தப் படத்தின் கதை. 

காதலுடன் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மனோ. குறிப்பாக பழி வாங்கும் முறையில் நிறைய  உத்திகளை கையாண்டுள்ளார். அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை-மகன் பாசப் போராட்டமும் அடங்குகிறதாம். 

இந்தப் படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபி சரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

தற்போது இந்தப் படம் விறுவிறுப்பான இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும்.