full screen background image

வெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்

வெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்

‘டெண்ட் கொட்டா’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் அமெரிக்கா வாழ் தமிழர்களான திகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகிய மூவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் விவேக், சார்லி, தேவ், பூஜா தேவரியா இவர்களுடன் ஹாலிவுட் நடிகையான Paige Henderson-ம் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் – திகா சேகரன், வருண், அஜய் சம்பத், தயாரிப்பு நிறுவனம் – டெண்ட் கொட்டா, இயக்கம் – விவேக் இளங்கோவன், ஒளிப்பதிவு – ஜெரால்டு பீட்டர், இசை – ராம்கோபால் கிருஷ்ணராஜூ, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், பாடல்கள் – மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு – குணால் ராஜன், கலரிஸ்ட் – பாலாஜி கோபால், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

தமிழகத்தில் போலீஸ் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெறுகிறார் விவேக். அவருடைய மனைவி பல வருடங்களுக்கு முன்பேயே இறந்துவிட்டார். ஒரே மகனான தேவ்வை நன்கு படிக்க வைத்தார். தேவ் இப்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். அங்கேயே ஒரு அமெரிக்கப் பெண்ணான ஆலீஸை திருமணம் செய்து கொண்டதால் மகன் மீது கோபம் கொண்டு ஒரு வருட காலமாக தேவ்வுடன் பேசாமல் இருக்கிறார் விவேக்.

இந்த நிலைமையில் ஓய்வு பெறும் நாளில் விவேக்கின் உயரதிகாரி அவரை அமெரிக்காவிற்குச் சென்று சில நாட்கள் மகன் வீட்டில் ஓய்வெடுத்து வரும்படி சொல்லியனுப்புகிறார். இதனால் மகன் இருக்கும் சியாட்டில் நகருக்கு வருகிறார் விவேக். மகனுடன் பேசுகிறார். ஆனால் அமெரிக்க மருமகளிடம் பேசாமல் தவிர்க்கிறார்.

தேவ்வின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ரம்யா என்னும் பூஜா தேவரியாவின் அப்பாதான் பாரதிதாசன் என்னும் சார்லி. விவேக்கும், சார்லியும் நண்பர்களாகிறார்கள். ஊர் சுற்றுகிறார்கள்.

இந்த நேரத்தில் விவேக் இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மோனோ என்கிற பெண் திடீரென்று காணாமல் போகிறார். அதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனும் காணாமல் போகிறார். இந்த வழக்குகளை அமெரிக்க போலீஸ் விசாரித்து வந்தாலும் விவேக்கின் போலீஸ் மூளையும் வேலை செய்கிறது.

எங்கோ தவறு நடக்கிறது என்பதை அறிந்து விவேக் தானே தன்னிச்சையாக சார்லியுடன் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுகிறார். இந்த நேரத்தில் அவருடைய மகனான தேவ்வும் ஒரு நாள் காணாமல் போகிறார். திடுக்கிடும் விவேக் தன் மகனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தின் நாயகனாகவே விவேக் நடித்திருக்கிறார். அவரைச் சுற்றித்தான் கதையே நடக்கிறது. இவரும், சார்லியும் ஒன்று சேர்ந்து அவ்வப்போது அடிக்கும் சின்னச் சின்ன விட்டுகள் ரசிக்க வைக்கின்றன.

தேடுதல் வேட்டையில் விவேக்கின் தமிழக போலீஸ் வேலை செய்யும்விதத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டே அவர் துப்பறிவது சுவாரஸ்யம்தான் என்றாலும் அவரும் சார்லியும் பேசிக் கொண்டேயிருப்பது சில இடங்களில் அலுப்பைத் தட்டிவிட்டது.

மகனையும் கடத்திவிட்டார்களே என்றெண்ணி விவேக் அழும் அந்த ஒரு காட்சி இதுவரையிலும் எந்தவொரு தமிழ்ப் படத்திலும்கூட வைத்திருக்காத காட்சி. விவேக் கிடைத்த வாய்ப்பில் கோல் போட்டுவிட்டார். சிறப்பான நடிப்பு. இதேபோல் முதல்முறையாக அவருடைய மருமகளுடன் அவர் பேசும் காட்சியிலும் அவரது நடிப்பு அழகு.

இவருக்கு உறுதுணையாய் டயலாக் டெலிவரியில் சமன் செய்திருக்கிறார் நடிகர் சார்லி. பாரதி உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று விவேக் கேட்பதும் சார்லி இதற்கு காட்டும் முக பாவனையும் அசத்தல். விவேக்கிற்கு ஈடு கொடுத்து பல காட்சிகளில் வசனம் மூலமாகவும், நடிப்பு மூலமாகவும் காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார் சார்லி.

இவருடைய மகனாக தேவ்.. அப்பாவை சமாதானம் செய்ய முயற்சித்து தோல்வியடைந்தாலும் மனைவியிடம் பொறுமை காக்குமாறு சொல்வதும், விவேக்கை கண்டிப்பதும் என்று தனக்குக் கிடைத்த வாய்ப்பை நிறைவாக செய்திருக்கிறார்.

ஆலீஸாக நடித்திருக்கும் பால்கி ஹெண்டர்சன், ரம்யாவாக நடித்திருக்கும் பூஜா தேவரியாவும் அவரவர் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் வேறொன்றும் சொல்வதற்கில்லை.

ஆனால் இடையில் பால்கியின் துவக்கக் கால வாழ்க்கையைக் காட்டும் கதையில் சின்ன வயது பால்கியாக நடித்த பெண்ணும், அவரது அப்பாவும், அம்மாவும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இந்தப் போர்ஷனை இயக்குநர் சிரத்தையாக படமாக்கியிருக்கிறார் போல் தெரிகிறது. பாராட்டுக்கள்.

ஜெரால்டு பீட்டரின் ஒளிப்பதிவில் சியாட்டில் நகரின் அழகை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். பால்கியின் சின்ன வயது கதையில் காட்டப்படும் இடமும், சில காட்சிகளும் அருமையான ஒளிப்பதிவில் படமாக்கப்பட்டுள்ளன. பின்னணி இசை சில இடங்களில் ‘திக் திக்’ உணர்வை ஏற்படுத்தினாலும் பல சஸ்பென்ஸ் காட்சிகள் இருந்த இடங்களில் அது ஒலிக்கவில்லை என்பதுதான் உண்மை.

படத் தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் உழைத்து படத்தை இறுக்கமாக்கித் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவேக் போதை மருந்து கடத்தல்காரனை பின் தொடர்ந்து செல்வதை அத்தனை நீளத்திற்குக் காட்டியிருக்க வேண்டாம். அந்தக் காட்சியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அதேபோல் பால்கியின் பால்ய வயதுக் கதையிலும் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இறுக்கமாகியிருக்கும்.

ஒரு திரில்லர் டைப் கதையில் சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதைதான் மிக முக்கியம். இந்தப் படத்தில் அது இடையிடையே விட்டுவிட்டு வருவதுதான் பிரச்சினை.  இதேபோல் அமெரிக்க போலீஸை தமிழகத்து போலீஸ்போல் மொக்கையாகக் காட்டியிருப்பதும் அதிர்ச்சியை காட்டுகிறது.

தமிழகத்தில் இருக்கும் நமக்கே இப்படி தோன்றுகிறது என்றால், அமெரிக்காவிலேயே வசிக்கும் இயக்குநரும், தயாரிப்பாளர்களும் ஏன் இதை யோசிக்கவில்லை..? நாயகன் விவேக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சியாட்டில் நகர போலீஸை டம்மியாக்கிவிட்டார்கள் போலும்..!

உடலில் பட்டதும் அலர்ஜியைக் கொடுக்கும் பூக்களை வைத்துதான் கதையின் முடிச்சு அவிழ்க்கப்படுகிறது என்பதால் ‘வெள்ளைப் பூக்கள்’ என்று பொருத்தமாக தலைப்பை வைத்திருக்கிறார்கள். இந்த டிவிஸ்ட் சிறப்புதான் என்றாலும், இன்னும் சிறப்பாக திரைக்கதை எழுதியிருக்கலாம் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

‘வெள்ளைப் பூக்கள்’ நடிகர் விவேக்கிற்கு மிக முக்கியமான படம்..!

Our Score