வைரமுத்து-யுவன்சங்கர்ராஜா கூட்டணி..!

வைரமுத்து-யுவன்சங்கர்ராஜா கூட்டணி..!

எம்.எஸ்.வி.-கண்ணதாசன் கூட்டணியைப் போல 1980-களில் கிளம்பிய இளையராஜா-வைரமுத்துவின் கூட்டணி இன்றைய தலைமுறைவரைக்கும் கவர்ந்திழுத்திருக்கிறது.. ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதை போல எதிர்பாராதவிதமாக இருவருக்குள்ளும் பிறந்த ஈகோ என்னும் கத்தி இருவரையும் பிரித்துவிட்டது.

இதற்குப் பின்னால்தான் இளையராஜாவுடன் வாலி, மேத்தா, முத்துலிங்கம், நா.காமராசன், புலமைப்பித்தன் என்று பலரும் மாறி மாறி பல்லாங்குழி ஆடினாலும் இளையராஜாவின் இசையால் அனைவருமே நின்று ஆடினார்கள். இன்னொரு பக்கம் ராஜாவைத் தவிர மற்ற இசையமைப்பாளர்களுடன் வைரமுத்து கூட்டணி வைத்து அவரும் இப்போதுவரையிலும் தில்லாக ஆடி வருகிறார்..

காலம் மாறிவரும் சூழலில் அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலைமை வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும  இசை ரசிகர்களுக்கு அதற்கான முதல்படியாக நிகழ்ந்துள்ளது இளையராஜாவின் புதல்வர் யுவன்சங்கர்ராஜா, வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றுவது.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்திற்குத்தான் இப்படி இருவரும் இணைந்திருக்கிறார்கள்.. லிங்குசாமி தயாரிக்கும் படங்களுக்கு யுவன்தான் மியூஸிக். சீனு ராமசாமியின் படங்களுக்கு வைரமுத்துதான் பாடலாசிரியர். ஆக.. இவர்களுக்காக இயக்குநரை மாற்ற முடியாது என்பதால் இசையையும், கவிஞரையும் ஒன்றாக பேச வைத்து ஒட்டி விட்டார்கள் இயக்குநரும், தயாரிப்பாளரும்..!

இதேபோல் இளையராஜா தனது மகன்களான மதன் கார்க்கியுடனும், கபிலன் வைரமுத்துவுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வைரமுத்துவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது இசைஞானியின் காதில் ஏறுமோ, ஏறாதோ என்றாலும்.. இதற்கு அச்சாணி போடும் தயாரிப்பாளர், இயக்குநர் யார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

சீனு ராமசாமியின் திரைப்படங்களில் பாடல்களே தனிக்கதைகளைச் சொல்பவை. அவர் பாடல் காட்சிகளின் மூலமாகவே கதையை நகர்த்தவும் செய்வார்.. அந்த அளவுக்கு உயிரோட்டமான பாடல்களைத் தர விரும்பும் சீனுவின் படத்தில், இந்தப் புதியக் கூட்டணியின் பாடல்கள் எப்படி வரும் என்பதை காத்திருந்து பார்ப்போம்..!
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!