வைகோ தயாரிக்கும் ‘வீர மங்கை வேலு நாச்சியார்’ திரைப்படம்

வைகோ தயாரிக்கும் ‘வீர மங்கை வேலு நாச்சியார்’ திரைப்படம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியுமான வைகோவும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து தமிழகத்தில் முதன்முதலாக குரல் எழுப்பி போரிட்ட வீர மங்கை சிவகங்கை அரசி வேலு நாச்சியாரின் வாழ்க்கைக் கதையை தனது முதல் தயாரிப்பாக தயாரிக்கவுள்ளார் வைகோ.

இதற்காக ‘கண்ணகி பிலிம்ஸ்’ என்கிற பெயரில் புதிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் வைகோ. இதன் பொருட்டு சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று, அந்தச் சங்கத்தில் ஒரு அங்கத்தினராக தன்னை பதிவு செய்து கொண்டிருக்கிறார் வைகோ.

இந்த வேலு நாச்சியார் நாடகம், தமிழகத்தில் பல இடங்களிலும் அரங்கேற்றப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நாடக விழா நேற்றைய தினம் மாலையில் சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்றது. இந்த நாடக விழாவுக்கு வைகோ தலைமை வகிக்க.. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், நடிகர்கள் விவேக், விஜயகுமார், நடிகை கஸ்தூரி மற்றும் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வந்திருந்த திரையுலக பிரமுகர்கள் நாடகத்தின் முடிவில் அனைவரையும் பாராட்டி பேசினார்கள்.

vaiko-vishal

அப்போது நடிகர் விஷால் பேசும்போது, “வைகோ அவர்கள் வேலு நாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலு நாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்தார். அதனால்தான் இங்கே வந்தேன்.

முதலில் இந்த நாடகத்தை இயக்கிய இயக்குநருக்கும், இந்த நாடகத்தில் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில், பெரிய மருது, சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நடித்த நடிப்பு, உங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் எனது பாராட்டுக்கள்.

இங்கே நமது திரைத்துறையை சேர்ந்த பலரும் வந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு வரி கட்டுவதை எதிர்த்துதான் நமது வேலு நாச்சியார் போராடினார். அதேபோல் இப்போது தமிழக அரசு விதித்திருக்கும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தப் போராட்டத்தில் ஒரு பாதுகாப்பான வழி கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலு நாச்சியார் கதாபாத்திரத்திற்கு எனது நன்றி. அதே போல் நான் கத்தியால் சண்டை போட போவதில்லை, புத்தியால்தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்.

எனக்கு வேலு நாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்…” என்றார்.

vaiko

விழாவில் வைகோ பேசும்போது, “தமிழர்களின் உயிர்க் காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனைவரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்தமிக்காத எங்களை பிரிட்டிஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியத்தை முதலில் எதிர் கொண்டு வெற்றி கொண்டவர் எங்களது சிவகங்கை சீமையை ஆண்ட அரசி வேலு நாச்சியார்.

நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை… நானா சாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசியான இந்த வேலு நாச்சியார் அவர்கள் பெற்றிருக்கிறார்.

velu naachiyaar

இவர்களின் வரலாற்றை,  திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால் சர்மா அவர்களின் மகன் ஸ்ரீராம் சர்மா அவர்கள் ஆறரை ஆண்டுக்கு முன்னால் என்னைச் சந்தித்து சொன்னபோது மெய் மறந்து போனேன்.

இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலு நாச்சியாரை கண்டீர்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ, அதைபோல இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சகோதரி மணிமேகலை சர்மா நமக்கு வேலுநாச்சியாராகவே காட்சி அளித்தார்.

IMG_0380

இந்த நாடகத்தில் ஹைதர் அலியும்,  வேலு நாச்சியாரும் சந்திக்கின்ற காட்சி நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘மறவர் சீமையின் மகாராணிக்கு வந்தனம்’ என்றது..  ‘என்னை தமைக்கையாக ஏற்று கொண்ட பாதுஷாவுக்கு நன்றி’ கூறியது.. படைகளின் உதவியைக் கேட்டது.. இதையெல்லாம் பார்க்கும்போது இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்டுகின்ற ஒரு உணர்வு இப்போதைய தமிழ் நாட்டுக்கு தேவை என்பதை நான் இங்கு  நினைவூட்ட விரும்புகிறேன்.

வேலு நாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அதை என்னுடைய கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்…” என்றார் வைகோ.