full screen background image

அரசியல் செய்தியாளர்களை ஏமாற்றிய வடிவேலு..!

அரசியல் செய்தியாளர்களை ஏமாற்றிய வடிவேலு..!

இதுவரைக்கும் ஒரு சாதாரண பிரஸ் மீட்டுக்கு இத்தனை கூட்டம் பிரசாத் லேப்பிற்குள் நுழைந்ததில்லை.. அத்தனை கூட்டம் தெனாலிராமன் பிரஸ் மீட்டிற்கு..!

சினிமா பத்திரிகையாளர்களையும் தாண்டி, அந்தந்த பத்திரிகைகளும், டிவி சேனல்களும் தங்களுடைய அரசியல் ரிப்போர்ட்டர்களையும் சேர்த்தே அனுப்பி வைத்திருக்க.. ஒரே நிறுவனத்தில் இருந்து 5 பேர் வரையிலும் வந்து குவிந்துவிட்டார்கள். உளவுத் துறை போலீஸாரும் வந்திருந்தார்கள்.

பத்திரிகையாளர்களைத் தவிர மற்றவர்கள் வெளியேறுங்கள் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூப்பாடு போட வேண்டிய நிலைமை. போதாக்குறைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தும் ஒரு கூட்டம் தெனாலிராமனை பார்ப்பதற்காக உள்ளே வந்து உட்கார்ந்துவிட நிஜமான பத்திரிகையாளர்களுக்கு உட்காரவே இடமில்லை..

4.35 மணி நிகழ்ச்சி துவங்கும் என்று முகூர்த்த நேரம் போல் கூறியிருந்தாலும், நிகழ்ச்சி என்னவோ 5.5-க்குத்தான் துவங்கியது. முன்னதாக அனைத்துச் சேனல்களும் வடிவேலுவிடம் தனித்தனியாக பேட்டியெடுக்க முயல அவர்களையெல்லாம் ஒரே வார்த்தையில் அவாய்ட் செய்தார் வடிவேலு. ஆனாலும் ஹீரோயினும், இயக்குநரும் தங்கள் தொண்டை வலிக்க அனைவருக்கும் பேட்டியளித்துவிட்டுத்தான் ஓய்ந்தார்கள்.

டிரெயிலர் 2 நாட்களுக்கு முன்பாகவே இணையத்தில் வெளியிடப்பட்டாலும் ஸ்கிரீனில் பார்க்க பிரெஷ்ஷாக இருந்தது.. வடிவேலுவின் ஒவ்வொரு ஆக்சனிலும் பெர்பெக்ஷன் தெரிந்தது.. இந்தப் படத்தை ஹிட்டாக்கியே தீருவது என்கிற வெறியோடுதான் களத்தில் குதித்திருக்கிறார் போலும்.. 2 பாடல் காட்சிகளை திரையிட்டார்கள். குழந்தைகளுடன் குழந்தையாக வடிவேலு பாடும் ஒரு பாடலில் முழுக்க முழுக்க மக்கள் திலகம் எம்ஜிஆரின் மேனரிசத்தை பின்பற்றியிருக்கிறார் வடிவேலு.. அடுத்தது ஒரு காதல் பாடல்.. விவேகாவின் வஞ்சகமில்லாத வரிகளுக்கு இமானின் இசை மீண்டும் கேட்க வேண்டும் போல இருந்தது..!

மேடை கச்சேரி துவங்கியபோது இதுக்கு மேல இடமே இல்லப்பா என்பதை போல சேர்கள் போடப்பட்டிருந்தன. மேடையில் கல்பாத்தி பிரதர்ஸ், நடிகர்கள் வடிவேலு, சந்தானபாரதி,  மனோபாலா, சண்முகராஜா, கிருஷ்ணமூர்த்தி, பாலாசிங், எடிட்டர் ராஜாமுகமது, இயக்குநர் யுவராஜ், இசையமைப்பாளர் டி.இமான், ஹீரோயின் மீனாட்சி தீட்சித் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

பத்திரிகையாளர்களுக்கு வேறொரு நிகழ்ச்சி 6 மணிக்கு இருப்பது படக் குழுவினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால் வந்தவர்கள் அனைவருமே ரத்தினச்சுருக்கமாக 2 நிமிடங்களுக்குள் தங்களது பேச்சை முடித்துக் கொண்டார்கள். வடிவேலு மட்டுமே 10 நிமிடம் எடுத்துக் கொண்டார். இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம். ஆனால் இதற்கு மேலும் பேசினால் ஏதாவது வார்த்தைகள் தன்னையறியாமல் வந்து விழுந்துவிடுமோ என்று பயந்து முடித்துக் கொண்டார்.  ஆனாலும் படு யதார்த்தமாக இருந்த அவரது பேச்சில் அவ்வப்போது சரவெடிகளை அள்ளி வீச, எழுந்த கை தட்டல்கள் சாலிகிராமம் மெயின் ரோட்டுக்கே கேட்டிருக்கும்..!

வடிவேலு பேசுவதற்கு முன்பாகவே “அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இன்னும் 2 நாட்களில் இன்னொரு முறை பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து பேசுவதாக வடிவேலு சொல்லியிருக்கிறார். ஆகவே இங்கே அரசியல் சம்பந்தமான கேள்விகள் வேண்டாம்.. இந்த சினிமா சம்பந்தமான கேள்விகளை மட்டும் பிரஸ் மீட் முடிந்த பிறகு அவரிடம் தனியாகக் கேட்கலாம்..” என்று படத்தின் பி.ஆர்.ஓ. நிகில் எச்சரிக்கை மணி அடித்துவிட்டதால் புஸ்ஸாகிப் போனது பிரஸ் மீட்..

மேடைப் பேச்சு முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை பக்கத்தில் அமர்த்திக் கொண்டு ஜாலியாக ஒரு பிரஸ் மீட் நடத்தினார் வடிவேலு..

“இந்த 2 வருஷத்துல எனக்கு நல்ல ஓய்வு கிடைச்சது. இந்த ஓய்வு, காலத்தின் கட்டாயம். சிலர் எனக்கு பட வாய்ப்பு கொடுக்கவே பயந்தாங்க. அந்த நேரத்துல மலையாளத்தில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் பட வாய்ப்புகள் தானா வந்தது. அந்த மொழி படங்களில் நான் நடிச்சிருந்தா, வடிவேலு ஊரை காலி செஞ்சுட்டு போயிட்டான்னு பேசியிருப்பாங்க. அதனாலதான் அந்தப் படங்களை நான் ஒத்துக்கலை.

அதனால் எனக்கு எந்த வேதனையும் கிடையாது. அதுக்கப்புறமும் நிறைய பட வாய்ப்புகள் வந்துகிட்டேதான் இருந்துச்சு. எல்லாம் நமக்குத் தெரிஞ்சவங்கதான்.. ‘வாண்ணே.. ஒரு அஞ்சு நாள் போதும்ணே.. முடிச்சுக் கொடுத்துட்டுப் போண்ணேன்’னு கூப்பிட்டாங்க. ஆனா நான்தான் ‘வேண்டாம்’னு சொல்லிட்டேன். வந்தா ஒரு பெரிய அடி அடிக்கணும்.. ‘கிங்’ மாதிரி நம்மளை சொல்லிக்க வைக்கணும்னு நினைச்சேன். அப்படித்தான் இந்த ‘தெனாலிராமன்’ படம் நம்மகிட்ட மாட்டுச்சு.

தமிழ்நாட்டுல ஒவ்வொரு வீட்டுலேயும் ரேஷன் கார்டுல என் பெயர் இல்லையே தவிர, அந்த குடும்பத்துல ஒருத்தனாத்தான் என்னை ஏத்துக்கிட்டிருக்காங்க. இனிமே அவங்களை திருப்திப்படுத்துறதுதான் நம்மளோட வேலையே..” என்றார்..

அத்தனை ஏசியிலும் பொங்கி வழிந்த வியர்வையை துண்டால் துடைத்துக் கொண்டிருந்தவரிடம், “அரசியல் பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க..? ஏன் இந்தத் தடவை பிரச்சாரத்துக்கு நீங்க போகலை..?” என்று கேட்டபோது, “நான் அரசியலுக்கு போறது உங்களுக்குப் பிடிக்குதா..?” என்று எதிர் கேள்வி கேட்டார். “என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க. படத்துல மட்டும் நடின்னு எனக்கு புத்திமதி சொல்லுங்கப்பா.. நீங்களே சொல்லலைன்னா வேற யார் சொல்லுவா..?” என்று உரிமையோடு நிருபர்களிடமே கேட்க.. “நீங்க பேசாம இதையே சொய்யுங்க ஸார்.. அரசியலெல்லாம் வேண்டாம்..” என்று நிருபர்களும் உரிமையுடன் சொல்ல.. “ஆங். இதைத்தான் எதிர்பார்த்தேன்..  இதுதான் நம்ம சனம்ன்றது..” என்ற நெகிழ்ச்சியோடு பேசி அனைவருக்கும் விடைகொடுத்தார்.

இதற்கடுத்து டிவி சேனல்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு பேட்டியும் கொடுத்தார். அதிலும் அரசியல் கேள்விகளை தவிர்த்துவிட்டு பொத்தாம் பொதுவாக தான் இனிமேல் அரசியலுக்கு வர மாட்டேன்.. பேச மாட்டேன் என்பது போலவே சொல்ல.. ‘எதையோ’ எதிர்பார்த்து வந்த நிருபர்கள் கூட்டம் தங்களது அலுவலகத்திற்கு போன் செய்து ‘ப்ச்.. ஒண்ணுமே இல்லை ஸார்..’ என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது நிஜமான காமெடிதான்.!!!

Our Score