‘வானம் கொட்டட்டும்’ – சினிமா விமர்சனம்

‘வானம் கொட்டட்டும்’ – சினிமா விமர்சனம்

‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில் சே’, ‘அலைபாயுதே’, ‘ராவணன்’, ‘காற்று வெளியிடை’ ‘செக்க சிவந்த வானம்’ போன்ற படங்களை தயாரித்த இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது.

இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலமாகத்தான் மணிரத்னம் எழுதிய கதையில் நடித்திருகிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

மேலும் சாந்தனு, சரத்குமார், ராதிகா சரத்குமார், இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை - கோவிந்த் வசந்த், ஒளிப்பதிவு – பிரீத்தா, கலை இயக்கம் – அமரன்,  உடை வடிவமைப்பு - ஏகா லகானி, எழுத்து – மணிரத்னம், தனா, இயக்கம் – தனா.

மணிரத்னத்தின் உதவியாளரான இயக்குநர் தனா ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தேனி அருகேயுள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ‘போஸ்’ என்னும் சரத்குமார். இவரது மனைவி ‘சந்திரா’ என்னும் ராதிகா. சரத்குமாரின் அண்ணன் ‘வேல்சாமி’ என்னும் பாலாஜி சக்திவேல். சரத்குமார்-ராதிகா தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு பையனும், 5 வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் பாலாஜி சக்திவேல் போட்டியிடுகிறார். ஆனால் அவர் மீது பொறாமை கொண்ட எதிர்க்கட்சியினர் பாலாஜி சக்திவேலை வேல் கம்பால் குத்திக் கொலை செய்ய முயல்கின்றனர். இதையறியும் தம்பி சரத்குமார் கோபமடைந்து எதிர்க்கட்சியினரின் அலுவலகத்திற்குச் சென்று அங்கேயிருந்த 2 தொண்டர்களை வெட்டிக் கொலை செய்கிறார்.

இதையடுத்து இதே ஊரிலேயே இருந்தால் தன்னுடைய மகனும் அப்பாவைப் போலவே வளர்வான் என்று சொல்லி குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருகிறார் ராதிகா. இங்கே ஒரு பிரிண்ட்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

சரத்குமாருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. அவர் ஜெயிலில் இருக்க.. பிள்ளைகள் வளர்ந்திருக்கிறார்கள். பையன் விக்ரம் பிரபு இப்போது கால் டாக்சி ஓட்டுகிறார். மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.

பெரியப்பா பாலாஜி சக்திவேலின் வாழைக்காய் பிஸினஸில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரி ஒருவர் அவரை ஏமாற்றுகிறார். இதை நேரில் பார்த்த விக்ரம் பிரபுவுக்கு சொந்தமாகத் தொழில் செய்யும் ஆசை வருகிறது. அதே கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைக்காய் வியாபாரம் செய்யத் துவங்குகிறார்.

இந்த நேரத்தில் கால்டாக்சி ஓட்டும்போது ஒரு நாள் விக்ரம் பிரபுவின் காரில் நாயகி மடோனா செபாஸ்டியனும் அவரது காதலரும் வருகிறார்கள். கல்யாண விஷயமாக இருவருக்குள்ளும் சண்டை நடக்க.. காதலனை தண்ணீருக்குள் தள்ளி கொல்லப் பார்க்கிறார் மடோனா. அந்தச் சந்தர்ப்பத்தில் மடோனாவையும் ஆறுக்குள் தள்ளிவிடுகிறார் விக்ரம் பிரபு. ஆனாலும் பின்பு இருவரையும் காப்பாற்றிவிடுகிறார்.

இதனால் மடோனாவின் அப்பாவுடன் விக்ரம் பிரபுவுக்குப் பழக்கமாகிறது. இந்தப் பழக்கம் வீடுவரைக்கும் விக்ரம் பிரபுவை அழைத்துச் செல்கிறது. இவர் வீட்டுக்குப் போன நேரத்தில் வருமான வரித்துறையின் ரெய்டு நடக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் மடோனாவுடன் நெருங்கிப் பழகுகிறார் விக்ரம் பிரபு.

16 ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு சரத்குமார் விடுதலையாகி வருகிறார். மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார். ஏனோ, பிள்ளைகள் அவருடன் ஒட்டாமலேயே இருக்கிறார்கள். இது சரத்குமாருக்கு பெரும் கவலையாக இருக்கிறது.

இந்த நேரத்தில்  சரத்குமார் கொலை செய்தவரின் பிள்ளைகளான இரட்டையரில் இரண்டாவது நபரான நந்தா சற்று புத்தி சுவாதீனம் குறைவாக இருப்பவர். சரத்குமாரை கொலை செய்தே தீர்வேன் என்று சொல்லி சரத்தைத் தேடி சென்னைக்கே வந்துவிட்டார். அவரைத் தேடி அவரது சகோதரரான இன்னொரு நந்தாவும் சென்னைக்கு ஓடி வருகிறார்.

நந்தாவின் கொலை முயற்சியில் இருந்து சரத்குமார் தப்பித்தாரா..? சரத்குமார் பிள்ளைகள் இடையேயான பிரச்சினைகள் தீர்ந்தனவா..? என்பதுதான் இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை.

படத்தில் உண்மையான நாயகன், நாயகி சரத்குமாரும், ராதிகாவும்தான். சிறந்த கதையும், இயக்குநரும் கிடைத்தால் அந்த நட்சத்திரங்களை வேறுபட்ட கோணத்தில் பார்க்கலாம் என்பதற்கு இந்தப் படத்தில் சரத்குமார், ராதிகா இருவரின் நடிப்பை உதாரணமாக வைத்தே சொல்லலாம்.

சிறையில் இருவரும் சந்திக்கும் காட்சிகளில் இருக்கும் உருக்கமும், பாசமும், அன்பும் படத்தை ஆழமாகப் பார்க்க வைத்திருக்கிறது. அப்பனைப் போல பையனும் கோபக்காரனாக அரிவாளைத் தூக்குபவனாக இருந்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பில் ராதிகா சரத்குமாரிடம் வாதாடும் காட்சி உணர்ச்சியமாக மனதைத் தொடுகிறது.

இதேபோல் இடைவேளைக்கு பின்பு வீட்டுக்கு வந்த கணவரை மதிக்காமல் நடந்து கொள்ளும் பிள்ளைகளைக் கண்டிப்பதிலும், இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் அக்மார்க் இந்தியத் தாய்களின் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் இந்தச் சந்திரா.

சரத்குமாரும் தன் பங்குக்கு நீண்ட நாட்கள் கழித்து அவருக்கு பெயர் சொல்லும் ஒரு கதாபாத்திரத்தைச் செய்து முடித்திருக்கிறார். மிக இயல்பாக நம்ம பிள்ளைகள்தானே என்ற நினைப்பில் அவர் செய்யும் விஷயங்களெல்லாம் அவருக்கு எதிர்ப்பாக போக அதைக் கண்டு அவர் மனம் வருந்தும் காட்சிகள் நிஜம். “என்னை ஏண்ணே இப்படி பாசத்தைக் கொட்டி வளர்த்த..?” என்று தனது அண்ணனிடம் அவர் கேட்கும் காட்சியில் மனதையும் தொட்டுவிடுகிறார். சிறந்த இயக்குநர்கள் கிடைத்தால்தான் இது போன்ற பெயர் சொல்லும் கதாபாத்திரங்களும் நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும்.

விக்ரம் பிரபுவுக்கும் இத்திரைப்படம் ஒரு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. இதுவரையிலான அவரது நடிப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தளத்தில் காண முடிகிறது. இதற்கு சிறந்த இயக்கம் ஒன்றே காரணம்.

கோபக்காரனாக.. ஆத்திரக்காரனாக.. அவசரத்தனக்காரனாக இருப்பவர்.. வியாபாரத்தில் ஆர்வம் காட்டி இறங்கியவுடன் முழுக்க, முழுக்க வியாபாரத்தனத்தோடு பேசும்போதும், அப்பாவை எதிர்த்துப் பேசி அவரால் தனக்கு நஷ்டம் என்பதைக் கோபத்தோடு சொல்லும்விதத்திலும் விக்ரம் பிரபு காணாமல் போய் அவருடைய கேரக்டரே முன்னுக்கு நிற்கிறது.

இன்னொரு பக்கம் மடோனாவைக் கலாய்த்தலில் துவங்கி.. கடைசியாக காதல்வரைக்கும் கொண்டு போய்விடும்போதும் ஒரு நல்ல நண்பனாகத் துவங்கி காதலனில் தனது கேரக்டரை கச்சிதமாக முடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அந்தக் காதலனுக்கான உணர்வை வெளியில் சொல்லாமல் மறைமுகமாகக் காட்டியிருப்பதுதான் இயக்குநரின் டச்.

மடோனா செபாஸ்டியனுக்கு பணக்காரக் கேரக்டர். அதற்கேற்றாற் போன்ற திரைக்கதையில் அவருடைய நடிப்பும் படத்திற்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய பலம். தண்ணியடித்துவிட்டு அவர் புலம்பும்போதும், கடைசியாக “நான் ரொம்ப கோபக்காரி.. பணக்காரி.. நமக்கு செட்டாகுமா..?” என்று கேட்டு காதலுக்கு ‘ஓ.கே.’ சொல்லும்போதும் பாவமாகத் தெரிகிறார்.  இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவரை மனதாரப் பாராட்ட வேண்டும். அதுதான் மடோனாவின் மிகப் பெரிய பலம் எனலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் துள்ளித் திரியும் இளம் பெண்ணாக.. வாய்த்துடுக்கு உள்ள பெண்ணாக அவருக்கேற்ற கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார். சாந்தனு மீது அவருக்கும் இருக்கும் காதலை முன்கூட்டியே சொல்லியிருந்தால் அந்தச் சின்னக் குழப்பம்கூட வந்திருக்காது.

இயக்குநர் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை சஸ்பென்ஸில் வைத்திருந்திருக்கிறார் போலும். அதனாலேயே சாந்தனுவிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும்போது மட்டும் எந்த பீலிங்கும் வரவில்லை. மற்றபடி சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பாசமிக்க அண்ணனாக பாலாஜி சக்திவேல்.. ‘வேல்சாமி’ என்னும் கிராமத்து பெரிசாக.. ‘பழசை மறந்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்து விடுவோம்’ என்று எதிராளியிடமே போய் வியாபார டீல் பேசுவதும்.. தனது தம்பியை மரியாதைக் குறைவாகப் பேசும் பிள்ளைகளை கண்டிக்கும்போதும் தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பர்களான சாந்தனுவும், ரெட்டியாக நடித்தவரும் பரவாயில்லை என்ற ரீதியில் நடித்திருக்கிறா்கள். அவர்களுக்கான பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். கொலைகாரனாக வரும் நந்தாவின் இரட்டை வேடமும் கச்சிதம். இறுதியில் ஒரேயொரு வசனம் மூலமாக நந்தா மனம் மாறுவது மட்டுமே நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

ப்ரீத்தாவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் ஜொலிக்கிறது. கிராமத்துப் பக்கத்தை பச்சைப் பசேலென்று காட்டிவிட்டு சென்னை சிட்டி வாழ்க்கையையும் அதேபோன்ற அழகுடன் படமாக்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியைப் படமாக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது.

படத்தின் இசையமைப்பாளர் பாடல்களை துண்டு, துண்டாக வெட்டி வெட்டி படத்தில் ஆங்காங்கே இடையிடையே தூவியிருக்கிறார். இதுதான் படத்தில் நமக்கு எரிச்சலாக இருக்கும் ஒரே விஷயம். வெறும் வாயால் எத்தனைவிதமான குரல்களை எழுப்ப முடியுமோ.. அத்தனையையும் செய்து இதைத்தான் ‘இசை’ என்கிற பெயரில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்த இயக்குநர் மணிரத்னம் என்பதை இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் படத்தின் வசனங்கள். ராதிகா-சரத்குமார் ஜெயிலில் பேசும் சில காட்சிகளின் வசனங்கள்.. தன் பிள்ளைகளுடன் ஊரைவிட்டுக் கிளம்பும்போது ராதிகா பேசும் வசனங்கள்.. ராதிகா புருஷனுக்காக மகனிடம் பரிந்து பேசும் காட்சி போன்றவைகளில் உயிர்த் துடிப்புடன் காட்சிகளை நகர்த்தியிருப்பவை வசனங்கள்தான். பாராட்டுக்கள்.

பெண்களை மிக எளிதாகக் கவரும் வகையிலான கதை அமைப்பு.. இந்தக் கதைக்கேற்ற சுவையான திரைக்கதை.. பொருத்தமான நடிகர், நடிகைகள்.. அழுத்தமான இயக்கம்.. என்று பல வழிகளிலும் இத்திரைப்படம் தனது முத்திரையைப் ஆழமாகப் பதித்திருக்கிறது.

படத்தில் பங்கு கொண்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..!