“வாழ்க விவசாயி’ படம் என்னை வாழ வைக்கும்…” – நடிகர் அப்புக்குட்டியின் நம்பிக்கை

“வாழ்க விவசாயி’ படம் என்னை வாழ வைக்கும்…” – நடிகர் அப்புக்குட்டியின் நம்பிக்கை

நீரின்றி, உணவின்றி, தொழில்  இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவிக்கும் விவசாயிகள் பிரச்சினையை மையப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழ்க விவசாயி’.

இந்தப் படத்தை  கதிர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்  ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்துள்ளார். 

இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா, முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி, ஸ்ரீகல்கி, ‘மதுரை’ சரோஜா அம்மாள், திலீபன், குழந்தை நட்சத்திரங்கள் வினோத், சந்தியா, ஆனந்த ரூபிணி, கவிஞர் விக்கிரமாதித்யன், விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – கே.பி.இரதன் சந்தாவத், இசை – ஜெயகிருஷ், பாடல்கள் – யுகபாரதி, தமிழ்மணி அமுதன், தமயந்தி, படத் தொகுப்பு – பா.பிரவின் பாஸ்கர். கலை இயக்கம் – ஆர். சரவண அபிராமன். நடனம் – ‘காதல்’ கந்தாஸ், ஒலிக் கலவை – G.தரணிபதி, மக்கள் தொடர்பு – சக்தி சரவணன். புதுமுக இயக்குநரான பி.எல்.பொன்னி மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும்  என்கிற  கருத்தை  மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. மேலோட்டமாக  இல்லாமல்  முழுக்க முழுக்க  விவசாயம் சார்ந்த  பிரச்சினைகளை  அலசுகிற  இந்தப்  படத்தில்  நாயகனாக  நடித்திருக்கிறார்  தேசிய விருது  நடிகர்  அப்புக்குட்டி.

இத்திரைப்படம் பற்றிய அனுபவங்களை நாயகன் அப்புக்குட்டி  பெருமையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

appukutty 

அவர் பேசும்போது,  “எனக்கு  ‘அழகர்சாமியின்  குதிரை’  படம்  பரவலான பாராட்டுகளையும், புகழையும்  தேடித்  தந்தது.  அதற்குப்  பிறகு படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க  வேண்டும்  என்ற  தெளிவையும்  கொடுத்தது.

அப்போதே இனிமேல் நல்ல  கதையம்சம்  கொண்ட  படங்களில்  மட்டுமே நடிக்க வேண்டும் என்று  முடிவு  செய்துவிட்டேன். இதுமாதிரியான  கதையில்  நான்  நடிக்க  வேண்டும்  என்று நான் விரும்பிய  ஒரு  கதையாக  இந்த ‘வாழ்க  விவசாயி’ படம்  அமைந்திருக்கிறது. 

அந்தக்  கதையைச்  சொன்னபோதே  இதில் நாம்  நடிக்க  வேண்டும்  என்ற  எண்ணம்  எனக்கு வந்துவிட்டது. எனக்கு  மிகவும்  பிடித்த  கதை. நான்  ஆசைப்பட்டு விரும்பி  நடித்த கதையில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. 

இயக்குநர்  P.L.பொன்னிமோகன்  சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால்  போதுமா..? இதை  தயாரிக்க  நல்ல  தயாரிப்பாளர்  வேண்டுமே.  அப்படி  ஒரு   நல்ல  தயாரிப்பாளராக தயாரிப்பாளர் ‘பால்  டிப்போ’  கதிரேசன்  கிடைத்தார்.  படத்தின்  மீது  எனக்கு  நம்பிக்கை வரும்படி  விரைவாகவே  எனக்கு  முன்  பணம்  கொடுத்தார்.  படம் தொடங்கப்பட்டது. இயக்குநர்  மோகன்  சொன்னபடியே  கதையை  அழகாகப்  படமாக்கியிருக்கிறார் .

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும்  ஒவ்வொருவரும் உணர்வார்கள்.  நானும்  ஒரு  விவசாயியின்  மகன்.  எனக்கும் விவசாயம்  தெரியும்.  நாற்று  நடுவது, களை  எடுப்பது, கதிர்  அடிப்பது,  அறுவடை செய்வதுவரை  எனக்கும்  எல்லா  வேலைகளும்  தெரியும். எனவே,  இந்தப்  படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும், மகிழ்ச்சியாக இருந்தது.

கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது. உடன்  எனக்குள்  அடுத்த கேள்வி எழுந்தது. யார் கதாநாயகி..? அவர்  எப்படி  இருப்பார்..?  என்பதுதான்  அது. ஏனென்றால்  என்  உயரத்துக்கு  அவர்களும்  சரியாக  இருக்க வேண்டுமே  என்கிற கவலை எனக்கு.

கடைசியில் படத்தின் நாயகி  ‘வசுந்தரா’  என்றார்கள். எனக்கு  தூக்கிவாரிப் போட்டது. அவர்  ‘தென்மேற்குப் பருவக் காற்று’  படத்தில்  நடித்தது எனக்குப்  பிடித்திருந்தது. ‘பேராண்மை’யிலும்  நன்றாக  நடித்திருந்தார். இருந்தாலும், அவர்  என்னைவிட உயரமாக இருப்பாரே.. என்னைவிட  நிறமாக  இருப்பாரே  என்றும் எனக்குள் கவலை.

_MG_5570 

ஆனால்  அவரைப்  பற்றி  நான் கவலைப்பட்டது,  பயந்தது  எல்லாமே  படப்பிடிப்பில் மாறிவிட்டது. அவர்  உயரம்  தெரியாதபடியும்,  நிறம்  தெரியாதபடியும் சரி  செய்து மாற்றங்கள்  செய்து  மேக்கப்பில்  நிறத்தைக்  குறைத்து  எனக்கு  ஜோடியாக  நடிக்க வைத்துவிட்டார்கள். 

வசுந்தரா  ஒரு  அர்ப்பணிப்புள்ள  நடிகை. அவர்  வழக்கமான  கதாநாயகி  கிடையாது. அவருக்கும்  இந்தப்  படம்  நல்ல  பெயரைத்  தேடித்  தரும்.  தன்னால்  முடிந்த  உழைப்பையும், அர்ப்பணிப்பையும் இந்தப் படத்தில் வசுந்தரா காட்டியிருக்கிறார். 

படத்தில் கதையின்படி  நான் இரண்டு  குழந்தைகளுக்கு தந்தை. வினோத்,  சந்தியா  என்ற அந்த  இரண்டு  குழந்தைகளும்  நன்றாக  நடித்திருக்கிறார்கள். 

_MG_2238

ஒரு நாள் பரண் ஒன்றில் நானும், வசுந்தராவும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது  போன்ற காட்சி  படமாக்கப்பட்டது.  கலை இயக்குநர்  அந்தப்  பரணை  நன்றாக  தயார்  செய்து இருப்பதாக கூறினார். 

முதல்  நாள்  நல்ல  மழை  பெய்திருந்தது. பாண்  நனைந்து  ஈரம்  சொட்டச்  சொட்ட  இருந்தது. முதலில் நான்  ஏறினேன். அடுத்து  வசுந்தரா  ஏறியபோது  அந்தப்  பரண்  சரிந்து  விழுந்தது. நான்  விழுக… என்  மேல்  அவர்  விழுந்தார்.  என்  மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும், பயமாகவும் இருந்தது.

ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.  தவறாக  நினைத்துக்  கொள்வாரோ  என்று பயந்தேன்.  ஆனால் அவரோ, “நல்ல  வேளை  என்னைக்  காப்பாற்றி  விட்டீர்கள்.  நான்  உங்கள்  மேல் விழுந்திருக்காவிட்டால்  எனக்கு  இந்நேரம்  அதிகமாக  அடிபட்டிருக்கும்”  என்றார்.  எனக்கு  ‘அப்பாடா’ என்றிருந்தது .

இந்தப் படம் விவசாயம் பற்றிய படம்தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக  இருக்கும். ‘வாழ்க  விவசாயி’ படம்  என்னை  வாழ  வைக்கும்  படமாக  இருக்கும் என்று  நம்புகிறேன். இந்தப்  படம்  விவசாயிகளைத் திரும்பிப் பார்க்க  வைக்கும்  படம்  என்று  சொல்வதைவிட எல்லா  மக்களையும்  விவசாயிகள்  பக்கம்  திரும்பிப் பார்க்க  வைக்கும்  ஒரு  படமாகவும் இருக்கும்  என்று  உறுதியாகக்  கூறலாம். 

ஒரு  விவசாயியாக  நான்  வாழ்ந்திருக்கும் இந்தப்  படம்  எனக்கு  நல்ல  பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்…” என்று  மிகப் பெருமையாகக் கூறி முடித்தார்.




error: Content is protected !!