உத்தரவு மகாராஜா – சினிமா விமர்சனம்

உத்தரவு மகாராஜா – சினிமா விமர்சனம்

JAESHAN STUDIOS நிறுவனத்தின் சார்பில் நடிகர் உதயா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் உதயா நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், இளைய திலகம் பிரபு, நாசர், கோவை சரளா, Sreeman, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், மனோஜ்குமார், சோனியா, ஆடம்ஸ், பிரியங்கா, சேரா, மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லேப் – ரவி பிரசாத் யுனிட், கிராபிக்ஸ் – ACCEL MEDIA, பாடல்கள் – நா.முத்துக்குமார், சண்டை இயக்கம் – தளபதி தினேஷ், கலை இயக்கம் – ராம், படத் தொகுப்பாளர் – சத்யநாராயணன், இசை – நரேன் பாலகுமார், ஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா, எழுத்து, இயக்கம் – ஆஸிப் குரேஸி, தயாரிப்பு – உதயா.

Dissociative Identity Disorder என்ற மன நலம் சார்ந்த ஒரு நோயினால் பாதிக்கப்படும் ஒரு இளைஞனின் கதைதான் இத்திரைப்படம். இதே மாதிரியான கதைக் கருவில் ஏற்கெனவே ‘அந்நியனும்’, ‘சந்திரமுகி’யும் வந்துவிட்டது நமக்குத் தெரிந்ததே..!

நாயகன் உதயாவின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர் இஸ்திரி போடும் வேலை செய்பவர். உதயா சிறு வயதில் இருக்கும்போது இஸ்திரி போட வந்த ஒரு சிறிய கோட், சூட் டிரெஸ்ஸை தன் மகனுக்கு அணிவித்து அழகு பார்க்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அந்த உடையை இஸ்திரி செய்ய கொடுத்தவர் இதைப் பார்த்துவிட்டு நடுரோட்டில் இவர்களுடன் சண்டையிட்டு அவமானப்படுத்துகிறார்.

இந்தச் சூழலில் உதயாவின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எப்போதும் கோட், சூட் டிரெஸ் நினைப்பிலேயே இருக்கிறார். இதனை வாங்க பணம் வேண்டுமே என்பதற்காக பிச்சையெடுக்கவும் செய்கிறார். மருத்துவர்களிடத்தில் இவரை அழைத்துச் சென்று பரிசோதிக்க.. உதயாவுக்கு சிறிது மனப் பிறழ்வு நோய் ஏற்பட்டுள்ளது என்பதை அறிகிறார்கள்.

இந்த நோயுடனேயே காலத்தைக் கழிக்கும் உதயா இப்போது பெரியவனாகிறார். எப்போதும் பந்தாவாக கோட் சூட்டுடனேயே வலம் வருகிறார். பெரிய பணக்காரரை போல தனது நண்பர்களிடத்தில் தன்னைக் காட்டிக் கொள்கிறார். வழக்கம்போல ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இன்னும் 2 தினங்களில் திருமணம் நடைபெற இருக்கும் சூழலில் ஒரு நாள் இரவில் அவர் மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்த நித்திரையில் மூழ்குகிறார்.

அதோடு அவர் காணாமலும்போக.. நண்பர்களும், மணப்பெண்ணும் அவரைத் தேடி அலைகிறார்கள். போலீஸில் புகாரும் தருகிறார்கள். போலீஸும் விசாரித்து வருகிறது. இடையில் திடீரென்று ஒரு மாதம் கழித்து அவருடைய செல்போன் பயன்பாட்டுக்கு வர.. அதை வைத்து உதயாவின் நண்பர்கள் அவரைக் கண்டறிகிறார்கள்.

ஆனாலும் அவர் இத்தனை நாட்களாக எங்கேயிருந்தார்..? எப்படியிருந்தார்..? என்ன செய்தார்..? என்பது அவருக்கும் தெரியவில்லை. இவர்களுக்கும் தெரியவில்லை.

ஆனால் உதயாவால் இப்போது நிம்மதியாக இருக்க முடிவதில்லை. திடீரென்று அவருடைய காதுக்குள் யாரோ “ஓடு… ஓடிக் கொண்டேயிரு..” என்று குரல் மூலமாக சொல்கிறார்கள். இதை அவர் கேட்காத பட்சத்தில் அதிகப்பட்ச ஒலியில் இசை காதுக்குள் ஒலிக்க.. அது உதயாவை இம்சையாக்குகிறது. இதனால் அந்தக் குரல் சொல்வதையெல்லாம் செய்யத் துவங்குகிறார் உதயா. இது அவரை முழு பைத்தியம் என்னும் அளவுக்கு மற்றவர்களைச் சொல்ல வைக்கிறது.

இடையில் திடீரென்று இவரைப் பார்த்துவிடும் கோவையைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரான மனோபாலா தன்னுடயை பணத்தை திருடிவிட்டு ஓடி வந்ததாகச் சொல்லி உதயாவைப் பிடிக்கிறார்.

ஆனால் போலீஸ் வந்தவுடன் கதையை மாற்றிப் போட்டுவிட்டு எஸ்கேப்பாகுகிறார் மனோபாலா. ஆனால் உதயாவைச் சுற்றி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அறிகிறார் இன்ஸ்பெக்டர். இதனால் உதயாவை பாலோ செய்கிறது போலீஸ்.

இந்த நேரத்தில் தலைக்குள் இடப்படும் உத்தரவின்படி ஒரு கட்டிடத்தில் உச்சியில் இருந்து கீழே குதிக்கிறார் உதயா. ஆனால் மயிரிழையில் காப்பாற்றப்படுகிறார். மருத்துவமனையில் உதயாவின் உடல் ஸ்கேன் செய்யப்படும்போது அவருடைய காதுக்குள் ஒரு மைக்ரோ சிப் பொருத்தி வைக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் அறிகிறார்கள்.

இதனால்தான் அவர் இப்படி பைத்தியம்போல  நடந்து கொள்வதாகவும் டாக்டர்கள் முடிவெடுக்கிறார்கள்.

இப்போது உதயாவுக்கு தன்னுடைய நிலைமை என்னவென்று தெரிய வர.. தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவரை கண்டறிய அவரே ஓடுகிறார்.. ஓடுகிறார்.. ஓடிக் கொண்டேயிருக்கிறார். கடைசியில் கண்டறிந்தாரா..? இல்லையா..? அவருடைய திருமணம் என்ன ஆனது..? ஏன் அந்த மைக்ரோ சிப் அவருடைய காதுக்குள் பொருத்தப்பட்டது..? என்பதெல்லாம் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

தான் கற்றுக் கொண்ட அத்தனை வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறார் நாயகன் உதயா. நடிப்பதற்கு படங்களே கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கிறாரோ என்னவோ.. தன்னுடைய உச்சபட்ச நடிப்புவரையிலும் காட்டிவிட்டார். இனி அடுத்தடுத்த படங்களில் காட்டுவதற்கு அன்னாரிடத்தில் எதுவும் இல்லை என்பது மட்டுமே உண்மை.

கதைப்படி அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றிருப்பதால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் அல்லவா..? அதனை அப்படியே நடத்திக் காண்பித்திருக்கிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!

“உத்தரவு மகாராஜா” என்று தலை குனிந்து சொல்லும் அளவுக்கு டார்ச்சர் செய்யும் அந்தக் குரலைக் கேட்டு அவர் காட்டும் பயவுணர்ச்சியும், “யாருடா நீயி.. யாருடா நீயி..?” என்று அவர் கதறும் கதறலும், அல்லல்படும் அவரது மனநிலையையும் புரிந்து ரசிக்க முடிகிறது. ஆனால் இது படத்தின் கடைசிவரையிலும் வருவதால் ஓவர் டோஸாகவும் இருக்கிறது.

இடையில் கோவை பஞ்சு மில் காட்சிகளில் இவருடைய அப்பாவி ‘அந்நியன்’ அம்பி கேரக்டர்கூட ஓகேதான். இதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் உதயா.

கொடைக்கானல் மருத்துவராக நடித்திருக்கும் ‘இளைய திலகம்’ பிரபு அழகான ஒரு சிறுகதைக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டிருக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு தயாராக இருக்கும் ஒரு பெண்ணுடன் அவருக்கு இருக்கும் பாசமமு், அதையொட்டிய சம்பவங்களும் நிஜம் போலவே படமாக்கப்பட்டுள்ளன.

அந்தப் பெண் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரகளையாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தப் பெண்ணின் மரணமும், இதைத் தொடர்பு பிரபு உதயா மீது கொள்ளும் கோபமும், இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும், அவர் செய்யும் காது ஆபரேஷனும் மின்னல் வேகத்தில் திரைக்கதையை நகர்த்துகிறது. நம்ப முடியாவிட்டாலும் நம்பியே ஆக வேண்டும் என்கிறவிதத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

பஞ்சு மில்லில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கும் சேரா மிக அழகு. அந்தக் கேரக்டருக்கு மிகப் பொருத்தமாகவும், மிக அழகாகவும் நடித்திருக்கிறார். பாராட்டுக்கள். உதயாவை திருமணம் செய்யப் போகும் பெண்ணை குளோஸப்பில் பார்க்கவே முடியவில்லை. பிறகு எங்கே நடிப்பு பற்றி பேசுவது..? பிரபுவிடம் பழகும் பெண்ணும் மிக அழகு. மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

நகைச்சுவைக்கு மனோபாலாவும், மனோஜ்குமாரும் ஆளுக்கொரு பக்கமாக கொஞ்சம், கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் மனும், சப்-இன்ஸ்பெக்டர் கோவை சரளாவும் போலீஸ் ஸ்டேஷனை காமெடி ஸ்டேஷனாக்கியிருக்கிறார்கள். ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் காமெடியை தூக்கிவிட்டு சீரியஸ்னெஸாக்கியிருந்தால் படம் ‘சதுரங்க வேட்டை’ போல ஆகியிருக்கும்.

பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் குறைவில்லை. கொடைக்கானல் சம்பந்தமான காட்சிகளிலெல்லாம் அழகு. இதுவரையிலும் காட்டாத பகுதிகளை காட்டியிருக்கிறார்கள். நன்று. தேவையில்லாமல் பாடல்களை வைத்து இம்சை செய்யாத இயக்குநருக்கு நமது நன்றி. பெண்ணேய் என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் அழகாக இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாருக்கு நமது பாராட்டுக்கள். பின்னணி இசையையும் அமர்க்களமாய் அடித்து ஆடியிருக்கிறார். உதயா கதறிக் கொண்டு ஓடும் காட்சிகளில் துணையாய் இருக்கிறது பின்னணி இசை.

உதயா இப்போதும் அதே மன நல பாதிப்பில்தான் இருக்கிறாரா என்பதை சொல்லாமலேயே கதையை நகர்த்தியிருப்பதால் படம் முடிந்த பின்பும் நமக்குள் அந்தக் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கிறது. இதைச் சரி செய்திருந்தாலாவது இன்னும் கொஞ்சம் கூடுதலாக உதயாவை ரசித்திருக்கலாம்.

400 கோடி என்றால் பைத்தியமாக இருந்தால்கூட பாதை தவறுவான் என்கிற காட்சிகளெல்லாம் டிவிஸ்ட்டு மேல் டிவிஸ்ட்டாக வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் அதற்குச் சொல்லும் காரணமெல்லாம் ஏற்க முடிவதாக இல்லையே இயக்குநரே. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் காட்சிகளெல்லாம் மிகப் பெரிய டிராஜடி..! லாஜிக் எல்லை மீறிப் போயிருக்கிறது.

இதேபோல் காதுக்குள் சிப் வைத்து அலற விடுவதெல்லாம் கொரிய திரைப்படங்களில் எப்பவோ வந்துவிட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு தமிழ்ப் படத்தில்கூட இதுதான் கதை. ஆனால் இந்தப் படத்தில்தான் மெயின் சப்ஜெக்ட் என்பதால் இது கவனத்தை ஈர்க்கும்.

படத்தின் முடிவில் உதயாவுக்கு ஏற்படும் கதி.. ஒரு லட்சத்து ஒண்ணாவது முறையாக தமிழ்ச் சினிமாவில் சொல்லப்படும் நீதிதான் என்பதால் மனதில் நிற்கவில்லை.

நல்ல கதைக் கருதான். ஆனால் கதை உருவாக்கம், திரைக்கதையாக்கத்தில் இயக்குநர் கோட்டைவிட்டுவிட்டதால் ஒட்டு மொத்தமாய் படம் சிறப்பு என்று சொல்ல முடியவில்லை..!

நாயகனுக்கும், இயக்குநருக்கும் அடுத்தடுத்த படங்கள் பெருமை சேர்க்கட்டும் என்று வாழ்த்துகிறோம்..!
error: Content is protected !!