‘உறுதிகொள்’ படத்திற்கு ரீவைஸிங் கமிட்டியில் U/A சான்றிதழ்..!

‘உறுதிகொள்’ படத்திற்கு ரீவைஸிங் கமிட்டியில் U/A சான்றிதழ்..!

A.P.K.பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘உறுதி கொள்’ திரைப்படத்திற்கு  சென்சாரின் ரீவைஸிங் கமிட்டியில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மேகனா நடித்துள்ளார். மற்றும் ‘காளி’ வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் வினிகர், படத் தொகுப்பு – எம்.ஜேபி, பாடல்கள் – மணிஅமுதன், சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஸ்ரீதர், தயாரிப்பு – பி.அய்யப்பன், சி.பழனி, எழுத்து, இயக்கம் – R.அய்யனார்.

இவர் இயக்குநர் கிருஷ்ணாவிடம் ‘நெடுஞ்சாலை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.

சென்சார் போர்டில் இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட்டுதான் கிடைக்கும் என்று சொல்லப்பட்டதால் ரீவைஸிங் கமிட்டிக்கு சென்றனர் படக் குழுவினர். கடைசியாக அங்கே U/A கிடைத்திருக்கிறதாம்.

இது பற்றிப் பேசிய படத்தின் இயக்குநரான ஆர்.அய்யனார், “பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல், பருவ மாற்றம் ஏற்படுகிற காலக்கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சிதானே தவிர… அது காதல் இல்லை.

காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிப் போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள். இதை காதல், மோதல் செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.

அனைத்துத் தரப்பினரும் பார்க்கக் கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இறுதி  காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

முகம் சுழிக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.