full screen background image

உன்னோடு கா – சினிமா விமர்சனம்

உன்னோடு கா – சினிமா விமர்சனம்

நாம் அனைவருமே சின்ன வயதில் பேசியிருக்கும் மறக்க முடியாத ஒரு வசனம் இது. சின்னக் குழந்தைகள் யாருடனாவது சண்டையிட்டால் ‘உன்னோடு கா’ என்று சொல்லிவிட்டு ஆள் காட்டி விரலின் மீது அதற்கடுத்த விரலை வைத்து சீண்டிவிடுவது வழக்கம். இதை யார் துவக்கி வைத்த்து என்று தெரியவில்லை. ஆனால் இதனைத் தெரியாதவர்களும், அறியாதவர்களும், செய்யாதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது.

சின்ன வயதில் இருந்தே எப்போதும் எலியும், பூனையுமாய் இருக்கும் இரண்டு பேர் அதிலும் அவரவர் தாயின் கருவில் இருக்கும்போதே தான்தான் முதலில் வெளியில் வருவேன் என்று அதிலேயே போட்டியை உருவாக்கிக் கொண்டு மோதிக் கொண்ட.. அந்த இரண்டு பேர்.. வாழ்க்கையில் எப்படி போராடி சேர்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும் சிவலிங்கபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தென்னவன், பிரபு இருவரும் மாமன், மச்சான் முறையினர். 5 தலைமுறையாக இருவரின் குடும்பத்திற்குள்ளும் வெட்டு, குத்து, கொலை என்று தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஊரையே இரு பிரிவாகப் பிரித்ததோடு இல்லாமல் ஊருக்கு நடுவில் ஒரு வேலியையும் போட்டு அதகளம் செய்திருக்கிறார்கள் இவர்களின் பாட்டனார்கள்.

இந்தக் கொலை வழக்கம் நம் தலைமுறைக்கும் பரவக் கூடாது என்று நினைத்த தென்னவனும், பிரபுவும் அந்த ஊரைவிட்டு வெளியேறி சென்னையில் குடியேறுகிறார்கள். அங்கே பக்கத்து, பக்கத்து வீடுகளில் குடியேறி, இந்த விஷயம் தங்களது சொந்தக்கார்ர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

பிரபுவின் மனைவி ஊர்வசி. தென்னவனின் மனைவி ஸ்ரீரஞ்சனி. பிரபு-ஊர்வசியின் மகன் ஆரி. தென்னவன்-ஸ்ரீரஞ்சனியின் மகள் மாயா. இருவருக்கும் ஒரே வயதுதான். ஆனால் இவர்களில் மாயா ஒரு நிமிடம் முன்பாக பிறந்தவள். இருவருக்குள்ளும் ஆரம்பத்தில் இருந்தே முட்டல், மோதல்தான். எப்போதுமே சண்டைதான்.. ஆனால் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் இவர்களுக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

இந்த நேரத்தில் இவர்களின் நண்பர்களான பால சரவணனும், மிஷா கோஷலும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்குத் துணை போய் இவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க இருவருமே முயல்கிறார்கள். ஆனால் ஆளுக்கொரு யோசனையை சொல்லி அதன்படிதான் நடக்க வேண்டும் என்று காதலர்களை வற்புறுத்த, கடைசியில் அந்த யோசனை புஸ்ஸாகிவிட.. மிஷா கோஷலை அவரது அப்பா மன்சூரலிகான் அழைத்துச் சென்றுவிடுகிறார்.

சிலை கடத்தல் புள்ளியான மன்சூரலிகான் ஒரு அழகிய நடராஜர் சிலையைக் கடத்துகிறார். ஆனால் அது எதிர்பாராதவிதமாக பிரபுவின் அலங்காரப் பொருட்கள் கடைக்கு வந்து சேர்கிறது. அதை மன்சூரலிகான் கேட்டும் தர மறுக்கிறார் பிரபு. இந்த நேரத்தில் மிஷா கோஷலுக்கு ஆரி அவர்களது காதல் ஜெயிக்க சில ஆலோசனைகளைச் சொல்கிறார். இதை தற்செயலாகப் பார்த்து தவறாக நினைக்கும் மன்சூரலிகானின் அடியாட்கள் அவரிடம் சொல்லிவிட.. அவரோ இதுதான் சமயம் என்று நினைத்து பிரபுவிடம் தன் மகளை அவரது மகனுக்கு திருமணம்  செய்ய சம்மதம் என்றும் சம்பந்தம் பேசி முடிக்கலாம் என்று ஓடி வருகிறார்.

இந்த நேரத்தில் ஊரில் இருந்து வரும் கும்பல் தனித்தனியாக பிரபுவையும், தென்னவனயும் கண்டுபிடித்து ஊருக்குத் தூக்கி வருகிறது. ஊரில் பஞ்சாயத்து போட்டு “இப்போ எங்க கண்ணு முன்னாடியே வெட்டிக்கிட்டு சாகுங்க…” என்று இரண்டு தரப்பு பெண்களும் சொல்ல.. தென்னவனும், பிரபவும் அவர்களிடத்தில் சண்டை போட்டு தப்பிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் மன்சூரலிகான் தன் மகள் மிஷாலை பால சரவணன் பாலோ செய்வதைப் பார்த்து அவனை போட்டுத் தள்ள பிளான் செய்ய.. இதையறிந்த ஆரி, தான் அவனைச் சமாளித்துக் கொள்வதாகச் சொல்லி மன்சூரலிகானை சமாதானப்படுத்துகிறார். அதே நேரம் மிஷாலை காதலிப்பது போல் நடிக்கிறார்.

இதையறிந்த மாயா தானும் வேறொரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயார் என்று சொல்ல வேறு வழியில்லாத இரண்டு பெற்றோர்களும் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

பால சரவணனுக்கும், மிஷாலுக்கும் கல்யாணத்தை நடத்திக் கொடுக்க ஆரி உத்தரவாதம் செய்ய.. இந்த நேரத்தில் ஊர்க்கார்ர்கள் திரும்பவும் ஊரில் இருந்து வந்து தென்னவன், பிரபுவின் வாரிசுகளைத் தூக்கிச் செல்ல..  கடைசியில் என்ன நடக்கிறது என்பதை தியேட்டரில் போய் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்களேன்..!

இயக்குநர் முதலிலேயே தெளிவான தீர்மானத்துடன்தான் படத்தை உருவாக்கியிருக்கிறார். ரசிகர்களை லாஜிக்கை பற்றியே நினைக்க வைக்காமல் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்திருக்கும். இதை நிறைவாகவே செய்திருக்கிறார்.

ஹீரோ ஆரி இதுவரையில் ஆக்சன் ஹீரோவாகவே நடித்தவர் முதல்முறையாக காமெடி ரோல் செய்திருக்கிறார். இயக்குநரின் பவிசான இயக்கத்தில் அவ்வப்போது காமெடி வந்து விழுகிறது. கதையோட்டத்தில் ஹீரோயினை வெறுப்பேற்ற அவரை காதலிக்காததுபோல நடித்திருப்பதில், நமக்கே ஹீரோவை பார்க்கும்போது காண்டாகிறது. ஆக.. நடித்திருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்வோம்.

ஹீரோயின் மாயா உண்மையில் குட் செலக்ஷன். பார்க்கச் சின்னப் பொண்ணாக இருந்தாலும் நடிப்பில் பிரகாசிக்கிறார். கோபம், ஆத்திரம் எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையாக பல காட்சிகளில் நமக்கும் சேர்த்தே கோபத்தைக் கிளப்பியிருக்கிறார். அர்த்தமில்லாத இவரின் கோபத்திற்கு என்ன காரணம் என்று இயக்குநர் சொல்லாத காரணத்தினால் இவருடைய கடைசி நிமிட ‘ஐ லவ் யூ’ ரசிகர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மற்றவர்களில் சந்தேகமேயில்லாமல் ஊர்வசிதான் டாப். சின்னச் சின்ன வசனமாக இருந்தாலும் அதனை தனது உன்னத நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார். இன்னொரு அழகு அம்மா ஸ்ரீரஞ்சனி.. புடவை கட்டுவது எப்படி என்பதை இவரிடத்தில்தான் திரையுலக அம்மாமார்களும், நடிகைகளும் கற்றுக் கொள்ளலாம். கூடவே, நிறைவான நடிப்பையும், பாசமான அம்மாவையும் காட்டியிருக்கிறார்.

பிரபு, தென்னவன் அப்படியே.. தனித்துச் சொல்ல முடியாத அளவுக்கு இயக்குநரின் அபாரமான இயக்கத்தினால் எந்தக் காட்சியிலும் இவர்கள் சோடை போகவில்லை. இன்னொரு பக்கம் மன்சூரலிகானை இந்தப் படத்தில் வித்தியாசமாக பார்க்க முடிகிறது. அதேபோல் சாம்ஸின் டயலாக் டெலிவரியும் படம் நகைச்சுவை படம் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டேயிருந்தது..!

இதையெல்லாம் கடந்துவிட்டால் அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் அழகு ஒளிப்பதிவைத்தான். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் பிரேம் டூ பிரேம் அழகுதான்.. கலரிங் கொடுத்திருப்பதில்கூட மிகக் கவனமாக இருந்து மேலும் அழகுப்படுத்தியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயினை இன்னும் அழகாகவும் காட்டி பாடல் காட்சியைப் பார்க்க வைத்திருக்கிறார். நன்றி ஒளிப்பதிவாளரே..!

லாஜிக்கே பார்க்க வேண்டாத படமாக இருந்தாலும் படம் சொல்லும் நீதி பெண்ணடிமைத்தனத்தை போதிப்பது போலவே இருக்கிறதே இயக்குநரே..? ‘காதலை அவளே தன் வாயால் என் கண்ணை பார்த்து சொல்ல வைக்கிறேன்’ என்பதற்காக இன்னொரு பெண்ணுடன் திருமண மேடைவரைக்கும் கொண்டு வந்து விடுவதெல்லாம் எந்த வகையான ஹீரோயிஸம் இயக்குநரே..? அந்த இடத்தில் சாதாரண ரசிகனுக்கும் பிபி, சுகரெல்லாம் ஏறி விடுகிறது..!

காதலைச் சொல்வதறாக இருந்தாலும் இப்படியா..? காதலுக்கு பரஸ்பர அன்பு, நேசம், பரிவு, கனிவு இதையெல்லாம் கடந்து ஒருவருக்கொருவர் மீதான ஈர்ப்பும் இருந்தாக வேண்டுமே..? இப்படி சண்டையா போட்டுக்கிட்டிருந்துட்டு கடைசி நேரத்துல ‘எனக்கு உன் மேல லவ்வு இருந்துச்சு. அதான் இத்தனை நாள் சண்டை போட்டேன்’ என்பதெல்லாம் என்ன லாஜிக் ஸார்..? கொஞ்சம் திரைக்கதையில் திருத்தியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் கடைசிவரையிலும் படத்தை பார்க்க வைத்து, சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க குடும்பப் படமாக தேர்வாகியிருப்பது இது ஒன்றுதான்.. ஆக..இதற்காகவே இந்தப் படம் நிச்சயம் ஓடும் என்றே சொல்லலாம்..!

Our Score