full screen background image

ஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..!

ஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..!

மலையாளத் திரையுலகில் ‘மரிக்கார் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. இதுவரையிலும் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், போன்ற பிரபல  நாயகர்களின் நடிப்பில் 16 மலையாளப் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த மரிக்கார் பிலிம்ஸ் நிறுவனத்தினர் இப்போது முதன்முறையாக ‘உன் காதல் இருந்தால்’ என்ற தமிழ்ப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகிய மூன்று நாயகிகளும் நடித்திருக்கிறார்கள். ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பு & கதை, இயக்கம் – ஹாசிம் மரிக்கார், ஒளிப்பதிவு – சாஜித் மேனன், படத் தொகுப்பு – சாய் சுரேஷ், இசை – மன்சூர் அஹமத், கலை இயக்கம் – ஆர்கன் எஸ்.கர்மா, உடைகள் – அரவிந்த், பாடகர்கள் – ஆண்டனி தாசன், கார்த்திக், மானஸி, ஒப்பனை – பிரதீப் ரங்கன், பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – பிரபாகரன் அமுதன், கண்மணி, சண்டை இயக்கம் – ரன் ரவி, புகைப்படம் – வித்யாசாகர், வி.எஃப்.எக்ஸ்.(VFX) – டிஜிட்டல் கார்வி, தயாரிப்பு மேற்பார்வை – சுனில் பேட்டா, மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு நிறுவனம் – மரிக்கார் ஆர்ட்ஸ்.

 un kaathal irunthaal-stills-3

தமிழ் திரையுலகத்திற்கு வந்தவிதம் மற்றும் ‘உன் காதல் இருந்தால்’ படம் பற்றிய அனுபவங்களைப் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஹாசிம் மரிக்கார், சமீபத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, “நீண்ட வருடங்களாகவே தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. ஏனென்றால், தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் பரபரப்பான விளம்பரமும், வியாபாரமும் இருக்கிறது.

மலையாளத் திரைப்படங்களில் கதை கரு நன்றாக வந்தாலும், உலகம் முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும்விதமாக சினிமாவிற்கான மிகப் பெரிய வியாபார சந்தை தமிழ் சினிமாவில்தான் உள்ளது. அதனால்தான், தமிழில் ஒரு படத்தையாவது இயக்கம் செய்ய விரும்பினேன்.

இந்தப் படத்திற்கு ‘உன் காதல் இருந்தால்’ என்று பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. எதிர்மறை கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படத்தை இயக்குவது எனக்கு இதுவே முதல் முறை.

படத்தின் கதைக் கரு முற்றிலும் வேறு மாதிரியானதாக இருக்கும். திரைக்கதை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வேறுவிதமாக நகரும். சாதாரணமாக பார்க்கும்போது இந்த விஷயங்களைக் கவனிக்க முடியாது.

இந்தப் படத்தை வித்தியாசமாக, புதுவிதமாக படம் பிடித்திருக்கிறேன். இப்படம் ஒரு உளவியல் திரில்லர். பார்வையாளர்களுக்கும் படத்திற்கும் உளவியல் இருக்கும். திரில்லரும் படத்தில் இருக்கும். அதேபோல், ஹாரர், நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் என்று  பல திருப்பங்கள் நிறைந்திருக்கும்.

படத்தின் நேரம் மொத்தமே 2 மணி நேரம்தான். ஆனால் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படத்துடன் அவர்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும்படியாக.. இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும் வண்ணம் திரைக்கதையும், காட்சிகளும் இருக்கும்.

மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு காட்சிதான் கதையின் மையப் புள்ளி. அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம்தான் முழுப் படமாக விரிகிறது. இதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

un kaathal irunthaal-stills-2

படத்தின் நாயகனான ஸ்ரீகாந்த் சிறந்த நடிகர். ஆனால், அவரை தமிழ்ச் சினிமாவில் யாரும் சரியாகப் பயன்படுத்தவில்லை. அவர் இதுவரையிலும் கிட்டத்தட்ட 40 திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதன்முதலாக தமிழ் ரசிகர்கள் புது ஸ்ரீகாந்தை இந்தப் படத்தில் பார்ப்பார்கள். அதேபோல், அவர் நடிப்பை பெரிதும் ரசிப்பார்கள். எளிமையாக, யதார்த்தமாக அவருடைய நடிப்பு இருக்கும். மேலும், ஸ்ரீகாந்தின் முகம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயம். குறிப்பாக, பெண்கள் அவரை அதிகம் ரசிக்கிறார்கள். ஷங்கர், ஃபாசில் போன்ற பெரிய இயக்குநர்களுடன் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் என் படத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

தீபாவளிக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

Our Score