வித்தியாசமான பழி வாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’ 

வித்தியாசமான பழி வாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’ 

P.G.P. எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.G.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துப்பாக்கியின் கதை’. 

இந்தப் படத்தில் சிவ நிஷாந்த் என்னும் அறிமுக நடிகர் ஹீரோவாக நடிக்க,  பெங்களூருவை சேர்ந்த நீருஷா என்ற நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

மேலும், டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமி, இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த நடிகரான லால்வீர்சிங்,  சஞ்சனா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹர்ஷா ஆகியோரும் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – மூவேந்தர், இசை – சாய் பாஸ்கர், படத் தொகுப்பு – மணிக்குமரன், கலை இயக்கம் – எம்.ஜி.முருகன், சண்டை இயக்கம் – மகேஷ் மேத்யூ, மக்கள் தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – விஜய் கந்தசாமி.

‘துப்பாக்கியின் கதை’ படம் பற்றி இயக்குநர் விஜய் கந்தசாமி பேசுகையில், “ஆக்சன் த்ரில்லராக உருவாகும் இந்த ‘துப்பாக்கியின் கதை’ திரைப்படம், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய, இளைஞர்கள் ரசிக்கக் கூடிய படமாக உருவாகியிருக்கிறது.

#ThuppaakkiyinKadhai (4)

படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவான கதைதான். படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள்.

பழி வாங்கும் கதையம்சத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும்  எப்படி பழி வாங்குகிறார்கள் என்கிற விதத்தில் வித்தியாசம் காட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது…” என்றார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான P.G.பிச்சைமணி அடிப்படையில் கட்டுமான தொழில் செய்து வரும் ஒரு பில்டர். அவரும், இயக்குநர் விஜய் கந்தசாமியும் கடந்த பத்து வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். 

நீண்ட நாட்களாகவே சினிமாவில் கால் பதிக்கும் எண்ணத்துடன் நல்ல தருணத்திற்காக காத்திருந்த தயாரிப்பாளர் P.G.பிச்சைமணி, விஜய் கந்தசாமியிடம் இருந்த ‘துப்பாக்கியின் கதை’ பற்றி கேள்விப்பட்ட உடனே அந்தப் படத்தை தயாரிப்பதற்கு தானே முன் வந்து தயாரிப்பாளராக மாறியுள்ளார். 

“ஒரு நாள் கோவையில் இப்படத்தின் காட்சி படமாக்கிக் கொண்டிருந்தபோது துணை நடிகர் ஒருவரின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஹீரோ ஓடுவது போலவும் அந்த நடிகர் கூச்சலிடுவது போலவும் யாருக்கும் தெரியாமல் கேமராவை மறைத்து வைத்து படமாக்கினோம். 

ஆனால் அதை உண்மை என்று நினைத்த அங்கிருந்த பொதுஜனம் ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தில் ஹீரோவை உண்மையான திருடன் என்று நம்பி விரட்டிச் சென்றார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த நபர் விபத்தில் சிக்கி, அவரது காலில் முறிவு ஏற்பட்டதால், நாங்கள் சில லட்சங்கள்வரை அவரது சிகிச்சைக்காக செலவு செய்தோம். 

இது போல பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்துள்ளன…” என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.  

கோவையில் முதல்கட்ட படப்பிடிப்பை ஒரே மூச்சில் 35 நாட்களில் நடத்தி முடித்துவிட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக இந்த மாதம் வெளிநாடு செல்ல இருக்கின்றனர் படக் குழுவினர். 

இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு பாடல் காட்சிகளில் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. 

வரும் டிசம்பர் மாத இறுதியில், கிறிஸ்துமஸுக்கு முன்பாக இந்தப் படத்தை வெளியிடத் திட்டுமிட்டுள்ளார்கள்.




error: Content is protected !!