சமூக அவலங்களைச் சுட்டிக் காட்ட வருகிறான் சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’..!

சமூக அவலங்களைச் சுட்டிக் காட்ட வருகிறான் சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’..!

‘அப்பா’ படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் படம் ‘தொண்டன்’.

இதில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். அவரது தங்கை வேடத்தில் அர்த்தனா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.  மேலும் விக்ராந்த், சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஞானசம்பந்தம், வேல ராம்மூர்த்தி, நமோ நாராயணன், அனில் முரளி, திலீபன், பிச்சைக்காரன் மூர்த்தி, நசாத், பாபூஸ், செளந்தர்ராஜன், படவா கோபி, நித்யா, ஈரோடு கோபால், பல்லவா ராஜா, முருகன், தேவி, கெளரி என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம், ரிச்சர்டு எம்.நாதன், படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், இசை – ஜஸ்டின் பிரபாகரன், கலை இயக்கம் – ஜாக்கி, நடனம் – ஜானி, பாடல்கள் – யுகபாரதி, விவேக், சண்டை பயிற்சி – விஜய் ஜாகுவார், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.எஸ்.ரவிச்சந்திரன், உடைகள் – நட்ராஜ், ஒப்பனை – சந்துரு, ஸ்டில்ஸ் – ஏ.ஆர்.முருகன், பி.ஆர்.ஓ. – நிகில், டிடிஎஸ் மிக்ஸிங் – டி.உதயகுமார், 4 பிரேம்ஸ், டிஸைன்ஸ் – சேவியோ, எழுத்து, இயக்கம் – பி.சமுத்திரக்கனி.

Thondan Movie Stills (9)

தனது படங்களில் தொடர்ச்சியாக சமூகப் பிரச்சினைகளை பற்றியே பேசி வரும் சமுத்திரக்கனி, இந்தப் படத்தில் தனது கேரக்டர்களுக்கு வைத்திருக்கும் பெயர்களே படத்திற்கான குறியீடுகளாக இருக்கின்றன.

சமுத்திரக்கனியின் பெயர் ‘மகாவிஷ்ணு’வாம். படத்தில் சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பதால் காக்கும் கடவுளின் பெயரை வைத்திருக்கிறாராம். அவரது தங்கையான அர்த்தனாவின் பெயர் ‘மஹிஷா சூரமர்த்தினி’யாம். அம்மன் பெயர். ஆம்புலன்ஸில் அட்டெண்டராக வரும் விக்ராந்தின் பெயர் ‘விக்னேஷ்’. சமுத்திரக்கனியின் காதலி சுனைனாவின் பெயர் ‘பகழமுகி’. பெயர்களே படத்தின் வித்தியாசத்தை உணர்த்துகின்றன.

Thondan Movie Stills (4)

இந்த ‘தொண்டன்’ படம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சமுத்திரக்கனி, “ஆறு மாதங்களாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் ‘அப்பா’ படத்தை எடுத்தேன். அதேபோலத்தான் இந்த ‘தொண்டன்’ படத்தையும் எடுத்திருக்கிறேன்.

இப்போது தினமும் பத்திரிகைகளை பார்த்தால் ஏதாவது ஒரு பிரச்சினை.. நடு ரோட்டில் கொலை, கல்லூரியில் கொலை, என்று பல செய்திகள் வருகின்றன. அப்படிப்பட்ட நிஜ சம்பவங்களின் கோர்வைதான் இந்த ‘தொண்டன்’ திரைப்படம்.

ஈரோட்டில் ஒரு கல்லூரிக்குள் சென்று வகுப்பில் அமர்ந்திருந்த மாணவியை ஒருவன் அடித்து கொலை செய்திருக்கிறான். ஆனால், அவனை யாரும் தடுக்க முன் வரவில்லை. இந்த சம்பவத்தை வைத்துதான் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

Thondan Movie Stills (14)

இந்த படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். அவங்கதான் ஒரு உயிரை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை பற்றி நாம் சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் அவங்க 7 நாள் கோர்ஸ் ஒன்றை முடித்துவிட்டுத்தான் அந்த வேலைக்கே வர்றாங்க. அவங்க செய்யும் வேலை எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள இரண்டு நாட்கள் 108 ஆம்புலன்ஸில் ஒரு டிரைவருடன் சென்று நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

கெட்டது செய்தால் எதிரிகள் உருவாகுவார்கள் என்பது பழைய கதை. இப்போது நல்லது செய்தாலே எதிரிகள் உருவாகிறார்கள். பாதிக்கப்படும் ஓர் உயிரை காப்பாற்றும்போது அந்த உயிரை அழிக்க நினைத்தவன் நம்மையும் எதிரியாகவே பாவிக்கிறான். அவன் நம்மைவிட பலசாலியாக இருந்தால்  என்ன ஆகும்  என்பதையும், அடக்கப்பட்ட பெண் சக்தி கிளர்ந்தெழுந்தால் என்ன நடக்கும்  என்பதையும் சொல்லும் படம் இது.

ஒரு பெரிய ஆளின் ஆட்கள் ஒரு நபரை அடித்துப் படுகாயப்படுத்திவிட்டு அவன் செத்துவிட்டதாக நினைத்து விட்டுவிடுகிறார்கள். தகவல் அறிந்து நாங்கள் ஆம்புலன்ஸில் வந்து பார்த்து, உயிருடன் இருக்கும் அவரை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறோம்.

அதே நேரம் அடிபட்டவன் சாகவில்லை என்பது அந்த ரவுடி கும்பலுக்கு தெரிய வருகிறது.  இதையறிந்த ரவுடி கும்பலின் தலைவர் ஆம்புலன்ஸில் இருக்கும் எங்களையும் அழிக்கச் சொல்கிறார். இதையடுத்து நடக்கும் சம்பவங்களும், அதன் தொடர்ச்சியும்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

Thondan Working Stills (7)

இரண்டு மணி நேரம்தான் படம். இந்த இரண்டு மணி நேரமும் எந்தப் பக்கமும் உங்களது கவனம் திசை திரும்பாத அளவுக்கு படம் விறுவிறுப்பாக இருக்கும். ஒரு சம்பவம் முடிந்த பிறகு, உங்கள் கவனத்தை சிதறடிக்காத வகையில் அடுத்த காட்சியில் மற்றொரு சம்பவம் என்று படம் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறேன்.

இதில் விக்ராந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு கண்டிப்பாக விக்ராந்துக்கு பல வாய்ப்புகள் வரும். தற்போதே அவர் நடிக்கும் படங்களில் அவரது நடிப்பு குறித்து எல்லா தரப்பிலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த படம் அவரை இன்னும் ஒரு படி மேலே அழைத்துச் செல்லும்.

இதோடு ஜல்லிக்கட்டு, விவாசாயிகள் பிரச்னை என்று பல சமூக விசயங்களையும் இந்தப் படம் பேசும்.  ஜல்லிக்கட்டுப் பிரச்னையின்போது,  நான் அலங்காநல்லூர் வாடிவாசலில் மழை, வெயில்  பாராமல் இரண்டு நாள் உட்கார்ந்து இருந்தேன். அப்போது கேட்ட பல சம்பவங்களை இந்தப் படத்தில் வைத்திருக்கிறேன்.

Thondan Working Stills (6)

ஒரு நீண்ட ஷாட்டில்,  தமிழ்நாட்டில் இருந்த  87 வகை நாட்டு மாடுகளின் பெயர்களை சொல்கிறேன். இந்தக் காட்சியில் நடிக்க நீண்ட நாட்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.

படத்தில் விவசாயியின் நிலை பற்றியும் பேசுகிறேன்.  இப்படி சமூக அரசியல் நிறைய பேசினாலும் கொஞ்சம் ஜாதி அரசியலும் பேசியிருக்கிறேன். காரணம் இன்றைய தமிழ்ச் சமூகம் அப்படித்தான் இருக்கிறது.

அண்மையில் ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, ‘குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்த  மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணத்தில் கையில் கயிறு கட்டி, அதன் மூலம் தாங்கள் என்ன ஜாதி என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்’ என்றார். கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது.

Thondan Working Stills (9)

பொதுவாக ஒருவரிடம் நாம் பத்து நிமிடம் பேசினாலே அவர்கள் தங்களுடைய சாதியைச்  சொல்லி விடுகிறார்கள். அல்லது நம்ம ஜாதியைக் கேட்டு விடுகிறார்கள். இப்போதெல்லாம் சர்வசாதரணமாக ‘நீங்க ஏன்னா ஆளுங்க?’ என்கிறார்கள்.  நிலைமை அப்படி இருக்கும்போது இந்தக் கதையில் அதை பேசாமல் இருக்க முடியவில்லை.

படம் பல சீரியஸான விஷயயங்களை பேசினாலும் காமெடிக்கும் பஞ்சமில்லை. கஞ்சா கருப்பு, சூரி, தம்பி ராமையா, விக்ராந்த் இவர்களுடன் நானும கலந்து கொள்ளும் காமெடிகள் நிறையவே இருக்கு.

நான் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் தீவிர ரசிகன். அவரது ‘அடியே அழகே’ பாடலை எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரியாது. அவரோடு இந்தப் படத்தில் இணைந்துள்ளேன். நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். பின்னணி இசையில் தனிப் பெயர் எடுப்பார் என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் என் நீண்ட நாள் நண்பர். இந்தப் படத்துக்கு அவர் கிடைத்தது படத்துக்கு பெரிய பலமாக உள்ளது…” என்றார்.

Thondan Movie Stills (15)

நடிகர் விக்ராந்த் பேசும்போது, “இந்தப் படத்துக்காக அண்ணன் சமுத்திரக்கனியுடன் இருந்த நாட்களில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் எனக்கு அடுத்தடுத்து  படங்களில் நடிக்கும்போது பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன்..” என்றார்.

ஜஸ்டின் பிரபாகரன், “சமுத்திரக்கனி சார் சீனியர் டைரக்டர். ஆரம்பத்தில் அவரோடு பணியாற்ற பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஓரிரு நாட்களில் என்னை ரொம்ப சகஜமாக்கினார். அப்புறம் நடந்த்தெல்லாம்  இன்டரஸ்டிங்கான விஷயங்கள். இந்தப் படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம்…” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசும்போது, “இந்தப் படத்தில் பிரம்மாண்டம் என்று எதுவும் இல்லை . ஆனால் சிறப்பான கதை திரைக்கதை இயக்கம் மற்றும்  நடிப்பு உள்ளது. அதற்குரிய ஒளிப்பதிவை மனநிறைவோடு செய்திருக்கிறேன்..” என்றார்.

Thondan Movie Stills (13)

“நீங்க இயக்கும் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்..?” என்று சமுத்திரக்கனியிடம் கேட்டதற்கு, “அப்பா’ படத்தில் நான் நடித்த கேரக்டரில்கூட யாராவது நடித்திருக்கலாம். ஆனால், இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடத்தில் எந்த நடிகரும் நடிக்க முடியாது.

காரணம், படத்தில் 4 நிமிடக் காட்சி ஒன்று வரும், ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட அந்த காட்சிக்காக நான் பல மாதங்கள் என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். அந்த கதையை எழுத தொடங்கியதில் இருந்தே அந்தக் காட்சிக்காகவே நான் தயாராகி வந்தேன். அதனால்தான் இந்த படத்தில் நடித்தேன்…” என்றார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் நெய்வேலி, கடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலேயே படமாக்கியிருக்கிறார். ‘அப்பா’ படத்திற்கும் இங்கேதான் ஷூட்டிங் நடைபெற்றது.

Thondan Movie Stills (11)

“அப்படியென்ன நெய்வேலி பாசம்…?” என்று கேட்டதற்கு, “நெய்வேலி டவுன்ஷிப்பில் ஷூட்டிங்கிற்கு பெர்மிஷன் வாங்குவது மிக எளிது. நாம் நன்கு திட்டமிட்டு பக்காவா பிளான் செஞ்சு சொல்லிட்டோம்ன்னா, அவங்களே நமக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்திருவாங்க..

ஒரு இடத்துல ஷூட்டிங் நடத்துனோம்ன்னா அந்த இடத்தைவிட்டுட்டு மற்ற இடத்துக்கு போக்குவரத்தையே திருப்பிவிட்டு அவங்களே நமக்கு உதவி செய்வாங்க. அதோட அங்கே சாலைகள் மிக அகலமானவை. ஷூட்டிங் ஒரு பக்கம் தங்கு தடையில்லாமல் நடந்தாலும், இன்னொரு பக்கம் போக்குவரத்தும் போய்க்கிட்டேயிருக்கும். அதனால்தான் இந்த முறையும் கேமிராவை தூக்கிட்டு நெய்வேலிக்கே போயிட்டோம்..” என்றோம் பெருமையாக..!

இந்தத் ‘தொண்டன்’ எப்படியிருக்கிறான் என்பதை பார்க்க ‘சினிமா தொண்டர்கள்’ மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்..!
error: Content is protected !!