“ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஒலிக்கின்ற படம் ‘மாவீரன் கிட்டு’..!” – தொல்.திருமாவளவன் பாராட்டு..!

“ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஒலிக்கின்ற படம் ‘மாவீரன் கிட்டு’..!” – தொல்.திருமாவளவன் பாராட்டு..!

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிப்பில் சுசீந்திரனின் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியாகியிருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படம், “ஒடுக்கப்பட்டவர்கள் குரலை ஒலிக்கும் படம்…” என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளரான தொல்.திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

நேற்றைக்கு பிரத்யேக காட்சியில் ‘மாவீரன் கிட்டு’ படம் பார்த்த தொல்.திருமாவளவன், படம் முடிந்ததும் படம் பற்றிய தனது கருத்துக்களை படக் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.

img_7110

தொல்.திருமாவளவன் பேசும்போது,. “ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படமாக, அடித்தட்டிலே இருப்பவர்கள் ஆவேசமாக பேசும் குரலாக… இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தை இன்று காண வாய்ப்பு கிடைத்தது.

சமுகத்தில் நடக்கின்ற எதார்த்தமான போக்குகளையும்… சாதி இந்த சமுதாயத்தில் எப்படி ஒடுக்கப்படுகிறது.. எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றன.. எந்தளவிற்கு முரண்பாடாக இருக்கிறது என்பதையும் மிக எதார்த்தமாக சொல்லும்விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் மட்டும் அல்ல.. தயாரிப்பாளர்.. வசனகர்த்தா என அனைவருமே மிக துணிச்சலாக இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஒரு இடத்தில் ‘அதிகாரத்தில் இருப்பவரை நாங்கள் தவறு சொல்லவில்லை.. அதிகாரமே தவறு என சொல்கிறோம்’ என்கிற வசனம் மிக அழகாக உள்ளது.

அதிகாரம் எந்தளவிற்கு எளியவர்களை ஒடுக்குகிறது எனவும் கூறும்விதத்தில் சாட்சியமாக அமைந்துள்ளது இப்படம். காவல்துறை அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் எந்தளவிற்கு சாதிக்கு துணை நிற்கிறார்கள் என்பதனையும் இந்தப் படம் குறிப்பிடுகிறது. மேலும் சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

அதற்கும் மேலாக காதல் என்பது மேலானது.. உயர்வானது… அதை கட்டுப்படுத்த இயலாது என்பதையும், ஒடுக்கபட்டவர்களில் சிலர் விலை போகிறவர்களாக இருப்பதால் புரட்சி போராட்டங்களெல்லாம் தோல்வியில் முடிகிறது என்பதையும் இந்தப் படம் குறிப்பிடுகிறது.

இறுக்கமான சாதி அமைப்பினுள் மிக சிறந்த ஜனநாயகவாதிகள் இருக்கின்றார்கள் என்பதனை உணர்த்தும்விதமாக மிக சிறந்த ஜனநாயகவாதியாக கதாநாயகனின் தந்தை சிறப்பாக நடித்திக்கிறார்.

மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் போராடினால் ஒரு போராட்டம் வெல்லாது. அதனோடு சில ஜனநாயக மனிதர்களும் ஒன்று சேர்ந்தால்தான் அந்தப் போராட்டம் வெல்லும் என்பதனை இப்படம் விவரிக்கிறது.

பெருந்தியாகத்தினால்தான் கிட்டு, இப்போதும் நம்மிடையே மாவீரனாக இருக்கின்றார். மக்களுடைய போராட்டம் ஒருவனை மாவீரனாகிறது. ஒரு மாவீரன் மக்கள் போராட்டத்தை கட்டமைக்கிறான் என்பதனை உணர்த்தும்விதமாக இப்படம் அமைந்துள்ளது..” என்று வாழ்த்தினார் தொல்.திருமாவளவன்.




error: Content is protected !!