ஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..!

ஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..!

லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பவன் கந்தசாமி மற்றும் G.V.K. ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’.

கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகனான யுவன் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

இயக்குநர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய  பி.வரதராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

படம் பற்றி இயக்குநர் வரதராஜன் கூறும்போது, “இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் மக்கள் இன்று, சற்றே விலை அதிகம் என்றாலும்கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருட்களை வாங்க  ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி இந்த ஆர்கானிக் உணவுப் பொருட்கள் என்கிற பெயரில் மிகப் பெரிய ஊழல் நடந்து வருகின்றது. அது பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்தப் படத்தை எடுத்துள்ளோம். 

thisai movie stills

உதாரணத்திற்கு சொல்லப் போனால் நாட்டு வைத்தியம் என்கிற பெயரில் ஆர்கானிக் முறையில் கேன்சரை குணமாக்குகிறேன், சர்க்கரை நோயை இல்லாமல் செய்கிறேன் என சிலர் பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இப்போது வருகிற ஆர்கானிக் உணவுப் பொருட்கள் சரியானதுதானா என்பதையம் அவற்றை கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டாம் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறோம்.

இந்த ஆர்கானிக் பொருட்கள் மோசடியால் நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த மோசடி குறித்து ஆய்வு செய்தபோது நிறைய அதிர்ச்சியான தகவல்கள் எனக்கு கிடைத்தன. ஆர்கானிக் உணவுப் பொருட்களின் மீதான மக்களின் நம்பிக்கையை காசாக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தே இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.

IMG_8423

அதுமட்டுமல்ல ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் நடக்கும் சில மோசடிகளையும் இதில் சுட்டிக் காட்டியுள்ளோம். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் நபர் ஒருவரே இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்பதால் அதை பற்றிய நிறைய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.. 

இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இந்தப் படம் முக்கோண காதல் கதையாகவே நகரும்.. ஒருவர் ஆர்கானிக் உணவுப் பொருட்களில் நடக்கும் மோசடியையும், இன்னொருவர் ரியல் எஸ்டேட் பிசினஸில் நடக்கும் மோசடிகளையும் இரண்டு ஹீரோக்களுக்கு இணையாக இரண்டு வில்லன்களும் படத்தில் இருக்கின்றனர். 

எனது குருநாதர்கள் காமெடி, ஆக்சன் ரூட்டில் பயணித்தாலும் அதிலேயே தொடர்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. இந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பாக்யராஜ் இது போன்ற படங்களுக்குத்தான் விருதுகள் கொடுக்கப்படனும்னு எங்களை பாராட்டியது மறக்க முடியாதது…” என்றார் வரதராஜன்.

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் முதல் பாடலை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார். இப்போது இயக்குநர் கரு.பழனியப்பன் இன்னொரு பாடலை வெளியிட்டுள்ளார். 

சென்னை மற்றும் திருச்சி துறையூர் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 45 நாட்கள் நடத்தியுள்ளார்கள். படத்தின்  போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படுமாம்.