“திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக் கரு என்னுடையது…” – எழுத்தாளர் ராஜேஷ் குமார் ஆவேசம்..!

“திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக் கரு என்னுடையது…” – எழுத்தாளர் ராஜேஷ் குமார் ஆவேசம்..!

தமிழ்த் திரையுலகில் இனிமேல் வாராவாரம் கதை திருட்டு பஞ்சாயத்து நடைபெறும் போலிருக்கிறது.

‘96’ படத்தின் பஞ்சாயத்து முடிவதற்குள் அடுத்த கதைத் திருட்டு பற்றிய விவகாரம் வெளியில் வந்துள்ளது.

பிரபல தமிழ் கிரைம் ஸ்டோரி எழுத்தாளரான ராஜேஷ்குமார் நேற்றைக்கு வெளிவந்த ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறியுள்ளார்.

Thimiru-pudichavan-Movie-new-Poster-1

இது பற்றி அவருடைய முகநூல் பக்கத்தில் அவர் இன்றைக்கு எழுதியுள்ளது இது :

“இவர்கள் திருந்தவே மாட்டார்களா…?

சென்ற வருடம் நான் oneindia-வில் எழுதிய ஆன் லைன் தொடர் ‘ஒன்+ஒன் = ஜீரோ’ தொடர் கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.

அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து ‘திமிரு பிடித்தவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்.

இவர்கள் எப்போது திருந்துவார்கள்..?”

இவ்வாறு எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதியுள்ளார்.

‘திமிரு புடிச்சவன்’ படம் நேற்றைக்குத்தான் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடித்துள்ளனர். கணேஷா என்கிற இயக்குநர் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

ராஜேஷ்குமாரின் இந்தக் கதைத் திருட்டு புகார் பற்றி இயக்குநர் கணேஷாவிடம் நாம் கேட்டபோது, “இப்போதுதான் இந்த விஷயத்தையே கேள்விப்படுகிறேன். நான் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையை படிக்கவே இல்லை. அது பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. கதைக் கரு ஒற்றுமையானது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இது சுயமாக நானே எழுதியது. இப்போதுதான் எனக்குப் பெயர் கிடைக்கும் அளவுக்கு ஒரு படம் கிடைத்து அது வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் இது போன்ற சர்ச்சைகள் எழுவது வருத்தமாக உள்ளது..” என்றார்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்.

என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!?
error: Content is protected !!