தெனாலிராமன் வருமா..? வராதா..? இன்று கோர்ட் தீர்ப்பு..!

தெனாலிராமன் வருமா..? வராதா..? இன்று கோர்ட் தீர்ப்பு..!

நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்திற்கு எதிராக அனைத்து தெலுங்கு கூட்டமைப்பினர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பு தலைவர் சி.எம்.கே.ரெட்டி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நாராயண குப்தா, பொருளாளர் நந்தகோபால், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை தலைவர் பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் சி.எம்.கே.ரெட்டி, "தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை காமெடி செய்வதுபோல் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்கள். கம்பீரமான மன்னரை இப்படி காமெடியராக சித்தரிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. எனவே கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும்.

இது குறித்து 'தெனாலிராமன்' படத் தயாரிப்பாளரிடம் நாங்கள் 'படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள். அதில் தேவையில்லாத காட்சியை நீக்கிவிட்டு நீங்கள் படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள்' என்று சொன்னதற்கு அவர் 'நாங்கள் ஏன் உங்களிடம் காட்ட வேண்டும்?' என்று கூறிவிட்டார்.

இது தொடர்பாக நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வரும்.. தீர்ப்பை பொறுத்து எங்களது அடுத்தக் கட்டப் போராட்டத்தை நாங்கள் அறிவிப்போம்.." என்றார்.

இந்தப் படம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று தொடரப்பட்ட ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  பழந்தமிழர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் வீரக்குமார் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெனாலிராமன் படத்துக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராசுப்ரமணியன், வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவில் ஆதாரமில்லை என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டது.

வரும் 18-ம் தேதி ரிலீஸ் என்கிற நிலையில் இன்றைக்கு வரவிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புதான் 'தெனாலிராமனுக்கு' வாழ்வளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.