அறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..!

அறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..!

N.H.ஹரி சில்வர் ஸ்கிரின் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’.

இந்தப் படத்தின்  மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சந்தீப் ராஜ் ஏற்கனவே ‘தூங்காவனம்’ படத்தில் கமலுடன் நடித்தவர்.  கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர் ‘8 தோட்டாக்கள்’ வெற்றிப் படம் மூலமாக ஏற்கனவே  தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.  இவர் மூன்று  நண்பர்களில் ஒருவரின் மனைவியாக படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார். 

இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார். அபர்ணாவை  ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளத்தில் அவர் நடித்த படத்தை பார்த்தபோது அதில் இன்னொரு கேரக்டரில் நடித்திருந்த லிஜிமோலையும் இந்தப் படத்திற்கு அழைத்து வந்துவிட்டார் இயக்குநர் ராசு ரஞ்சித். 

Easan, Aparna Balamurali

கவின்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களாலும்  பின்னணி இசையாலும் படத்திற்கு முதுகெலும்பாக அவர் இருப்பார் என்கிறார் இயக்குநர் ராசு ரஞ்சித். அதுமட்டுமல்ல இவர் அடையாறு திரைப்பட கல்லூரியில் எடிட்டிங்  படித்தவர் என்பதால்  இந்தப் படத்தின் படத் தொகுப்பையும்  ரஞ்சித்தே கவனித்துள்ளார்.

அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப் படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலை வைத்திருக்கிறார் இயக்குநர் ராசு ரஞ்சித். இவர் ‘நாளைய இயக்குநர்’ குறும்பட போட்டியில் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ராசு ரஞ்சித், “ஒருவருக்கு நல்லது  நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால்தான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிற தமிழ் பொன்மொழியில்  இருந்துதான் இந்தப் படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம்.

அன்றாட தேவைகளுக்காக சின்னச் சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதைதான் இந்தப் படம். இந்தப் படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம்தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்…” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும்  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்தப் படத்தை பிரபல விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.