சத்யராஜ் நடிப்பில் சமூக நீதி பற்றிப் பேச வரும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படம்..!

சத்யராஜ் நடிப்பில் சமூக நீதி பற்றிப் பேச வரும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படம்..!

ஹனிபீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’.

இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

‘கருடவேகா’ படத்தின்  ஒளிப்பதிவாளர் ஆஞ்சி இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ‘யாமிருக்க பயமேன்’ மற்றும் ‘காட்டேரி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த எஸ்.என்.பிரசாத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். பிரபல படத் தொகுப்பாளர் ரூபனின் உதவியாளர் சரத் இந்தப் படத்தில் படத் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். குட்டிப் புலி, ஜெயில் ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்.

தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் படம் பற்றிக் கூறும்போது, “நான் ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தை தமிழில் தயாரிக்க  விரும்பிய காரணம், இந்தப் படம் சொல்லும் விஷயம் மிகப் பெரிய அளவில் சென்று சேரும் என்பதும், தமிழ்நாடு எப்போதும் சமூக நீதியை நிலை நிறுத்தும் என்பதாலும்தான்.

இந்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படம் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நமக்கு காட்டவிருக்கிறது. அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராட இருக்கிறார்.

Dheran, Sathyaraj , Sajeev(2)

சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக் கூடிய நேர்மறையான சக்தி ஒன்று அவருக்குள் இருக்கிறது.

இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டுதான் அவரை இந்த படத்துக்குள் கொண்டு வந்தது.  இயக்குநர் தீரஜ் இந்த கதையை என்னிடம் கூறியபோது, சத்யராஜ் சார் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்பினோம். அந்த அளவுக்கான மெசேஜூம், அதைச் சொல்லும் அளவுக்கான சக்தி சத்யராஜ் ஸாருக்கும்தான் இருக்கிறது. வரும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம்…” என்றார். 

படம் பற்றி இயக்குநர் தீரன் கூறும்போது, “இந்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படம் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுது போக்கு படம். இந்த படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் சாருக்கு நன்றி. ஒரு தைரியமான நடிகரையும் தாண்டி இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு தைரியமான தயாரிப்பாளரையும் கோரியது. அப்படியேதான் எனக்கு தயாரிப்பாளரும், நடிகரும் கிடைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர் வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன்..” என்றார்.

Theerppugal-Virkappadum-Movie-Poster-2

சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டரை சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

இது பற்றி மேலும் இயக்குநர் பேசும்போது, “எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப்பட்டார் உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை  படத்தின் தலைப்பை வெளியிட முடிவு செய்தோம். தோழர் திருமுருகன் காந்தி படத்தின் கதை பற்றி அறிந்து கொண்டு, படக் குழுவினரை பெரிதும் வாழ்த்தினார். அவருக்கு எங்களது படக் குழுவினர் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..” என்றார்.