சினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..!

சினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..!

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.

கொரானோ தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முதலில் மூடப்பட்ட தனித் திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மட்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்க தொழில் அரசுக்கு பெரும் வருவாயை பெற்றுத் தரக் கூடியது. இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

திரையரங்குகள் மூடப்பட்ட பின் இந்த 50,000 தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் பிற தொழில்களுக்கு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என ‘தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்’ நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில்………….

திரையரங்கு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.

அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.

தற்போது கொரானா ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்கள், மற்றும் போக்குவரத்து செலவுகள்  விலையேற்றம் பெற்றுள்ளன.

இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டுகளிப்பதுதான். சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.

இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கக் கூடிய திரையரங்கு தொழிலை பாதுகாக்கவும், பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்கவும், கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்.

1. தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தனி திரையரங்குகள் 700. 2 மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட மால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 300 உள்ளன.

தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரியான 8 சதவிகித வரியினை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம்.

இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும். இதனால் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதன் மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்து பிரிவினருக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

2. தனி திரையரங்குகளுக்கான GST வரியை 5% சதவிகிதமாகக் குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவண செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்கு தற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு(no input tax credit) முறையை அமுல்படுத்த வேண்டுகிறோம்.

இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது 100 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படும் (GST 12% + LBTtax8%) டிக்கெட்டின் விலை 84 ரூபாய் 5% GSTயுடன் சேர்ந்து குறையும்.

இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்.

3. மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் 18%, 12% GST வரிகளை ரத்து செய்து, ஒரே வரியாக GST 12% நிர்ணயம் செய்து தர வேண்டுகிறோம்.

தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிகப்பட்சமாக 15% பார்வையாளர்கள்  அளவில்தான் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும்பட்சத்தில் 20% பார்வையாளர்கள்வரை திரையரங்குகளுக்கு கூடுதலாக வரக் கூடிய சூழல் ஏற்படும்.

இது இல்லாதபட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள். இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

4. தற்பொழுது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.

5. தற்பொழுது முழு முடக்கக் காலம்வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தொழில் துவங்கிய பிறகு தொழில் சகஜ நிலைக்கு திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.

தமிழகத்தில் கிராமங்கள் சிறு நகரங்களில் கெளரவத்திற்காக காலங்காலமாக இயங்கிவரும் தனித் திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட மத்திய, மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர  வேண்டுகிறோம்…”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.