தவம் – சினிமா விமர்சனம்

தவம் – சினிமா விமர்சனம்

ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வசி ஆஸிப் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் சீமான்(நடேசன்  வாத்தியார்),  வசி(முருகன்),   பூஜாஸ்ரீ(அகிலா ) இயக்குநர்  விஜய்  ஆனந்த்(சிவன்னன்),  இயக்குநர்  சூரியன்(மாமா புலிகேசி),  அர்ச்சனா  சிங்,  சிங்கம் புலி,  போஸ்  வெங்கட்(வேதகிரி),  சந்தானபாரதி,  பிளாக் பாண்டி(ஐயப்பன்),  ‘கூல்’ சுரேஷ், தெனாலி, ‘கிளி’ ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வேல்முருகன், இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - இந்துமதி,  எழில் வேந்தன், கோவிந்த், கலை இயக்கம் – ராஜு, படத் தொகுப்பு - எஸ்.பி.அகமது, நடன இயக்கம் – ரவி தேவ், சண்டை இயக்கம் - ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை  -குமரவேல், சரவணன், தயாரிப்பு - வசி ஆஸிப், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -ஆர்.விஜயானந்த் -  ஏ.ஆர்.சூரியன்.

நாயகி பூஜாஸ்ரீ சந்தான பாரதி நடத்தும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். சந்தான பாரதி தன் மகளுக்கு தனது சொந்த ஊரில் திருமணம் நடப்பதால், அனைத்து ஊழியர்களையும் ஊருக்கு அழைக்கிறார். முதலில் வர மறுக்கும் நாயகி பின்பு அந்த ஊரின் பெயர் ‘அன்னை வயல்’ என்றவுடன் வருவதற்கு சம்மதிக்கிறார்.

அதே ஊரில்தான் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும் ‘ஏ டூ இஸட்’ என்னும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் வசி. அதே ஊரில் இருக்கும் மிகப் பெரிய ரவுடியான விஜயானந்த், பட்டப் பகலில் ஒரு கொலையைச் செய்ய அதனை நாயகியும் அவர்களது நண்பர், நண்பிகளும், கூடவே நாயகனும் பார்த்து விடுகிறார்கள்.

யாரும் சாட்சி சொல்ல வர மாட்டார்கள் என்று ரவுடி கெத்தாக இருக்கும் சூழலில் நாயகி சாட்சி சொல்ல முன் வந்து போலீஸில் புகார் கொடுக்கிறார். இதனால் நாயகியைக் கொலை செய்ய ரவுடியின் அடியாட்கள் முனைய.. அவர்களிடமிருந்து நாயகியை நாயகன் காப்பாற்றுகிறான்.

இப்போதுதான் நாயகி தான் யார் என்பதை நாயகனுக்குச் சொல்ல இங்கே ஒரு பிளாஷ்பேக் விரிகிறது.

இதே ஊரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர் சீமான். அவரது மகன்தான் நாயகன் வசி. அதே ஊரில் வசித்து வந்த போஸ் வெங்கட் நிறைய கடன் தொல்லையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் அந்த ஊர் எம்.எல்.ஏ. வெங்கட்டை அழைத்து ஒரு வேலையை அவரிடத்தில் ஒப்படைக்கிறார்.

ஜெர்மனியில் இருந்து ஒரு கெமிக்கல் பேக்டரியை அமைக்க வந்திருக்கும் தனியார் நிறுவனத்திற்கு அந்த ஊரில் இருக்கும் 100 ஏக்கர் அளவுக்கான விளைநிலங்களை வாங்கித் தரும்படியும் அதற்குக் கமிஷன் தொகையை லட்சத்தில் தருவதாகவும் சொல்கிறார் எம்.எல்.ஏ.

இதனால் சபலப்படும் போஸ் வெங்கட் ஊர் மக்களிடம் நிலத்தை வாங்க முற்படுகிறார். சீமான் சொன்னால் மக்கள் அனைவரும் கேட்பார்கள் என்று நினைத்து சீமானை வளைக்கப் பார்க்கிறார் போஸ் வெங்கட். ஆனால், கடைசி நிமிடத்தில் சீமானுக்கு தனது நண்பரின் மகளான சின்ன வயது நாயகி மூலமாக உண்மை தெரிய வர.. ஊர் மக்களிடம் உண்மையைச் சொல்லி அந்த நிலப் பதிவை நிறுத்துகிறார்.

இதனால் ஆத்திரப்பட்ட போஸ் வெங்கட், சீமானை அடியாட்களுடன் வந்து வெட்டித் தள்ளுகிறார். கடைசி நிமிடத்தில் நாயகியின் குடும்பத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மகனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து போகிறார் சீமான்.

அந்தச் சின்ன வயதில் பார்த்த நண்பிதான் இப்போதைய நாயகி என்பது நாயகனுக்குத் தெரிய வருகிறது. உடனேயே நாயகனுக்கு அவள் மீது காதல் பிறக்கிறது. கூடவே சிக்கலும் பிறக்கிறது.

ரவுடிக் கும்பல் நாயகியுடன் நாயகியைக் கொலை செய்ய முயல்கிறது. போதாக்குறைக்கு போஸ் வெங்கட்டின் மகனே, வசியுடன் வேலை பார்ப்பவனாக இருந்து இப்போது பழி தீர்க்கவும் முயல்கிறான்.

இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

புதுமுக நாயகனாக இருப்பதால் வசி ஆசிப்புக்கு நடிப்பு இன்னமும் வசப்படவில்லை. இயக்குநர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நாயகனை நடிக்க வைத்து திரையில் தெரிய வைத்திருக்கிறார்கள். நடிப்புக்கான ஸ்கோப் இருந்தும் சாதாரணமாகவே இருக்க வைக்கப்பட்டிருக்கிறார் நாயகன்.

ஆனால் நாயகி பூஜாஸ்ரீ புதுமுகம் போல தெரியவில்லை. சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆள் பாதி, ஆடை பாதியாக கொஞ்சம் கிராமியம் கலந்த கவர்ச்சியையும் காட்டத் தெரிந்தவராக இருக்கிறார். நடிப்பும் வருவதால் அடுத்தடுத்து படங்கள் கிடைத்தால் நல்லது.

படத்தின் நாயகனே சீமான்தான் என்று சொல்லலாம். அவர் வந்த பின்புதான் படத்தின் டெம்போவே மாறிவிட்டது. அழுத்தமான காட்சிகளின் மூலமாகவும், விரிவான வசனங்கள் மூலமாகவும் விவசாயத்தை அழித்து நாசமாக்க நினைக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்.. இதற்குத் துணை போகும் அரசியல்வியாதிகளைப் பற்றி புட்டுப் புட்டு வைக்கிறார் சீமான். இதற்குத் துணை நின்ற இயக்குநர்களுக்கு இந்த ஒரு விஷயத்துக்காகவே நன்றி சொல்ல வேண்டும்.

“அடுத்து ஒரு உலகப் போர் வந்தால், அது நீருக்கும், சோறுக்குமாகத்தான் இருக்கும்..” என்ற அவரது கூற்று நிச்சயமாக சரியென்றுதான் படுகிறது.

மெயின் வில்லனாக இயக்குநர் விஜயானந்தே நடித்திருக்கிறார். அழுத்தம் இல்லை. ஈர்ப்பு இல்லை. இதேபோல் இன்னொரு இயக்குநரான சூரியனும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனைத்தும் வீண்.

போஸ் வெங்கட்டும், பிளாக் பாண்டியும் வரும் காட்சிகளிலெல்லாம் கவனத்தை ஈர்க்கும்விதமாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் ஒப்புக்குச் சப்பாணியாக ஸ்கிரீனில் வந்து செல்கிறார்கள்.

படத்தின் துவக்கத்திலேயே ஒளிப்பதிவைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது இதுவொரு பட்ஜெட் படம் என்று..! இருந்தாலும் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரை கொணர்ந்து அவர் மூலமாக சிக்கனத்திலும் அழகைக் காட்டியிருக்கலாம். கடைசிவரையிலும் படம் கலருக்கும், வெள்ளைக்கும் நடுவிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘காதலில் விழுந்தேன்’, ‘என்ன என்ன அழகு’ ஆகிய பாடல்களை ரசிக்கலாம். மெலடி.. காதல் வரிகளுடன் எளிமையாக இருந்தன. ‘வா நீ கொண்டாடு’ பாடல் நாட்டு நிலைமையை எடுத்துரைக்கிறது.

படத் தொகுப்பாளரான எஸ்.பி.அகமது கொஞ்சம் மனம் வைத்து கடைசியில் நடைபெறும் சண்டை காட்சிகளில் கத்திரியைப் போட்டிருந்தால் நிறைய பேர் கிளைமாக்ஸில் எழுந்து ஓடியிருக்க மாட்டார்கள். அத்தனை தூரம் ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள் படத்தின் முடிவை..!

விவசாயத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தாலும் இடையிடையே கதை வெளியே போய்விடுவதால் நிறைய கொட்டாவிகளைவிட்டுவிட்டு அடுத்த ‘எழுப்புதல்’ காட்சிக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. காதல், கொலை.. என்று கதையை டைவர்ட் செய்யாமல் சீமானின் கதையையே படமாக்கியிருந்தால் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

இடைவேளைக்கு பின்பு படத்தில் ஏற்படும் தொய்வை எப்படி முயற்சித்தும் சரி செய்ய முடியவில்லை. தவமாக இருந்து படமெடுத்தவர்கள் தவத்தில் கூடுதல் அக்கறை செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

தவம் – கொஞ்சமேதான் வலிமையைக் கொடுத்திருக்கிறது..!