நடிகை லலிதா குமாரியின் தயாரிப்பில் எஸ்.என்.சக்திவேல் இயக்கும் ‘தறி’ தொலைக்காட்சித் தொடர்..!

நடிகை லலிதா குமாரியின் தயாரிப்பில் எஸ்.என்.சக்திவேல் இயக்கும் ‘தறி’ தொலைக்காட்சித் தொடர்..!

தற்போதைய தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் லேட்டஸ்ட் வரவு கலர்ஸ் சேனல். ஏற்கெனவே வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்தச் சேனல் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

புதியது என்றாலும் வியாழக்கிழமைதோறும் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு நெஞ்சு வலி வரவைக்கும் அளவுக்கு பிரச்சினையைக் கிளப்பும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த கலர்ஸ் சேனல்.

கலர்ஸ் தமிழ் சேனல் தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதை தொடும் கதையம்சம், மன உறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையை தனது பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்தி கொண்டாடி வருகிறது.

ஏற்கெனவே பல புதிய வகையிலான பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும், தொலைக்காட்சி தொடர்களையும் வழங்கியிருக்கும் கலர்ஸ் சேனலில் இப்போது புதிதாக ஒரு தொலைக்காட்சித் தொடர் துவங்கியுள்ளது.

Thari (2)

‘தறி’ என்ற இந்தப் புதிய தொலைக்காட்சித் தொடர் கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடரின் தலைப்புக்கு ஏற்றாற்போல் நெசவாளிகளின் வாழ்க்கைச் சவால்களை நிஜமாகப் பிரதிபலிக்கும் இந்த ‘தறி’ நெடுந்தொடரில் சபரி, மு.ராமசாமி, பரீனா, அங்கனா மற்றும் இன்னும் பல திறமையான நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். 

இந்தத் தொடர் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகை லலிதா குமாரி. கே.பாலசந்தரின் `மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர்.  இவர் பல படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்திருக்கிறார். தற்போதைய தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகத்தில் ஆர்வமாகப் பணியாற்றி வரும் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தறி’ தொடரை தயாரிப்பதை ஒரு பெருமையாகவே கருதுகிறார். 

Thari (3)

இந்தப் புதிய தொடர் குறித்து தயாரிப்பாளர் லலிதா குமாரி பேசுகையில், “நெசவாளர் சமூகத்தின் உண்மையான வாழ்க்கையையும், அவர்கள் தங்களது தொழிலில் சந்திக்கும் சவால்களையும்தான் இந்தத் தொடரில் சொல்ல இருக்கிறோம். பாரம்பரியமான நெசவு தொழிலை பாதுகாக்கும் அவசியத்தை இத்தொடர் வலியுறுத்துகிறது..” என்றார்.

இந்த ‘தறி’ நெடுந்தொடரை பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் இயக்கி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்ச் சின்னத்திரை உலகில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பல ஆயிரம் எபிசோடுகளை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் எஸ்.என்.சக்திவேல், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவரும் ஆவார்.

Thari (1)

‘தறி’ தொடர் குறித்து இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் கூறும்போது, “மெதுவாக மறைந்து வரும் நமது பாரம்பரிய நெசவுத் தொழிலுக்கு உயிரூட்டி, அதை மீட்சி பெற செய்ய வேண்டுமென்ற குறிக்கோளுடைய ஒரு பெண்ணின் பயணத்தை நேர்த்தியான கதையாக இந்தத் தொடர் சொல்கிறது.

மன உறுதி கொண்ட இரண்டு பெண் கதாபாத்திரங்களின் வழியாக சொல்லப்படுகின்ற இந்தக் கதைகளும் பார்வையாளர்களுக்கு பொறுப்புள்ள ஒரு பொழுது போக்காக இருக்கும்.

இளம் பெண்ணான அன்னம் என்ற கதாபாத்திரத்தின் வழியாக சொல்லப்படும் இந்தக் கதை, நொடித்துப் போன ஒரு நெசவாளர் குடும்பத்தின் போராட்டங்களையும், மெல்ல மெல்ல மறைந்து வருகிற பாரம்பரிய நெசவுக் கலைக்கு புத்துயிரூட்டுவதற்கான அவர்களது மனப் போராட்டம் வழியாக பார்வையாளர்களை உணர்ச்சிகரமான உலகத்துக்குள் தொலைக்காட்சி நேயர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது.

இத்தொடரின் கதை காஞ்சிபுரம் நகரை மையம் கொண்டது. காஞ்சிபுரம் நகரம் பல ஆண்டுகளாக நெசவுக் கலையை தமது உயிராகக் காப்பாற்றி வருகிற பட்டு நகரமாகும். இந்த நகரின் மரபும் பாரம்பரியமும் உலகளாவிய அங்கீகாரங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அதில் பட்டுத் தொழிலில் இரவும் பகலும் அயராது பாடுபட்ட பல தலைமுறைகளைச் சேர்ந்த நெசவாளிகளின் பங்கு அதிகம்.

இந்தத் ‘தறி’ தொடரை தயாரிப்பதற்காக கடந்த 2018 பிப்ரவரி முதல் மாதத்திற்கு இரண்டு வாரங்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து, நெசவாளர்கள் எப்படி நூல் எடுக்கிறார்கள்? எப்படி நூலை காய வைக்கிறார்கள்? எப்படி கலர் பூசுகிறார்கள்? பட்டு நூலை எப்படி காய வைத்து பிரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அங்கிருக்கும் மக்களிடம் நேர்காணல் செய்துதான் இந்த கதையை உருவாக்கியிருக்கிறோம்.

இந்தக் கதையின் வழியாக நெசவுக் கலை மீது மக்களது கவனமும், அக்கறையும் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம்…” என்றார். 




error: Content is protected !!