‘தமிழரசன்’ படத்தை இசைஞானி இளையராஜா துவக்கி வைத்தார்..!

‘தமிழரசன்’ படத்தை இசைஞானி இளையராஜா துவக்கி வைத்தார்..!

SNS மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பாபு யோகேஸ்வரன் எழுதி, இயக்குகிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. முதல் காட்சியை இசைஞானி இளையராஜா கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார்.

இந்தத் துவக்க விழாவில் இயக்குநர் மோகன்ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநர் மிலன், தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குநரும் தயாரிப்பாளருமான G.சிவா, இயக்குநர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் காட்சியில் விஜய் ஆண்டனியுடன் மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்தார். மாஸ்டர் பிரணவ் மோகன் முதன் முறையாக காமிரா முன் நின்றாலும் அவரது பின்னணி என்னவோ மிகவும் பலமானது. இவர் சீனியர் படத் தொகுப்பாளரான மோகனின் பேரன். இயக்குநர் மோகன்ராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர் உயர்ந்து வந்தவுடன் தான் பட்ட கஷ்டங்களை நினைத்து தன் வாரிசுகளை அந்த துறையில் ஈடுபடுத்தமாட்டார்கள்.

ஆனால் படத் தொகுப்பாளர் மோகன் தான் பெற்ற வெற்றியை தன் வாரிசுகளான மோகன் ராஜாவை இயக்குநராகவும்,  ரவியை ஜெயம் ரவியாகவும் வெற்றி பெற செய்திருக்கிறார். அவர்களும் தங்கள் வாரிசுகளை திரைத்துறையில் நம்பி களம் இறக்கி இருக்கிறார்கள். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கெனவே ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடிகராக களம் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது இந்தத் ‘தமிழரசன்’ படத்தின் மூலம் பிரணவ் மோகனும் களம் இறங்கியிருக்கிறார்.

துவக்க விழாவில் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இசைஞானி இளையராஜா, “இந்தப் படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது.  இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” என்று வாழ்த்தினார்.




error: Content is protected !!