வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு ‘செய்தி’யைப் பற்றிய படம்தான் ‘தகவல்’ திரைப்படம்..!

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு ‘செய்தி’யைப் பற்றிய படம்தான் ‘தகவல்’ திரைப்படம்..!

மோஷன் கிராப்ட் புரொடக்ஷன் மற்றும் எப்.வி.எம்.எஸ். நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தகவல்’.

இந்தப் படத்தில் தேஷா, ரிஷி, மயில்சாமி, டிம்பிள் ரோஸ், ஸ்ரீஷா, மாஸ்டர் விஷ்ணு ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு சிபி ஜோசப். இவர் ஜீவாவின் உதவியாளர். இசை – சாஜி தென்றல், நடனம் கூல் ஜெயந்த், பின்னணி இசை – எஸ்.பி.வெங்கடேஷ், நிர்வாகத் தயாரிப்பாளர் – ஒய். அசோக் குமார். தயாரிப்பு – ஜித்து ஜோஸ்.

இப்படத்தை கே.சசீந்தரா இயக்கியுள்ளார். இவர் பரதன், ஜோஷி போன்ற பல இயக்குநர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார் தமிழில் தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய அனுபவசாலி. மலையாளத்தில் ‘வைடூர்யம்’ என்ற படத்தினை இயக்கி பத்திரிகைகளின் பரவலான பாராட்டைப் பெற்றவர். அவர் இயக்கியுள்ள முதல் தமிழ்ப் படம்தான் ‘தகவல்’.

படம் பற்றி பேசிய இயக்குநர் சசீந்திரா, “பெண்ணை தெய்வமாக, நதியாக, தாய் மொழியாக, தாய் நாடாக பார்க்கிற, மதிக்கிற இந்த நாட்டில், இப்போது பெண்ணை காமக் கருவியாக, போகப் பொருளாகப் பார்க்கும் சூழல் உள்ளது.

ஒரு பெண் தனியே பயணம் செய்கிறபோது அவளை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது.. அதனால் அவள் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள் என்பதைப் பற்றிய கதையே  ‘தகவல்’ என்கிற படமாக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு சூழலில் கிடைக்கும் தகவல், அவனது வாழ்க்கையையே மாற்றியமைக்கும். அப்படி இப்படத்தில் வரும் ஒரு ‘தகவல்’தான் படத்தின் திருப்புமுனை, விறுவிறுப்புக்கு மையப்புள்ளி எல்லாமே.

தனியே பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் இப்படம் யோசிக்க வைக்கும். இந்த சமூகத்தின் மீது கேள்விகளை கேட்க வைக்கும்…” என்கிறார். 

கதைப் பயணிக்கும் பகுதிகளில்தான் படக் குழுவும் பயணம் செய்துள்ளது. மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம், கள்ளக்குறிச்சி, ஒத்தப்பாலம், மகாகனித் தோட்டம் என்று படக் குழுவினர் பல இடங்களுக்குப் பயணித்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

தொழில் நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரிதும் பேசப்படும். ‘ஆரி 435 ‘கேமராவால் பிலிமில்  எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள லென்ஸ்கள் காட்சிகளை பிரமாண்டப்படுத்தியுள்ளன. 

‘தகவல்’ படத்தின் இறுதிக் கட்ட தொழில் நுட்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.




error: Content is protected !!