E சினிமாவுக்கும் நேரடியாக படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..!

E சினிமாவுக்கும் நேரடியாக படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..!

தமிழகத்தில் 41-வது நாளாக நடைபெற்று வரும் திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தினமும் ஒரு திருப்பம் ஏற்பட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு ‘AEROX’ என்னும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் போட்டு இந்த நிறுவனத்தின் சர்வீஸை திரைப்படங்களின் திரையிடலுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மற்றுமொரு டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடரான ‘மைக்ரோப்ளக்ஸ்’ நிறுவனத்துடனும் தயாரிப்பாளர் சங்கம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலமாக தயாரிப்பாளர் சங்கமே தாங்கள் வெளியிடும் அனைத்து படங்களுக்கும் சொந்தமாகவே மாஸ்டரிங் வசதி செய்து, அந்தப் பிரதியை இந்த நிறுவனத்தின் DCI 2k, 4k ப்ரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் மூலமாக தியேட்டர்களுக்கு நேரடியாக வழங்கும்.

இந்த நிலையில் மூன்றாவது ஒப்பந்தமாக வட இந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரையரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப் பெரிய நிறுவனமான K sera sera நிறுவனத்துடனும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நேற்றைக்கு தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த  கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் TFPC யின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் K Sera Sera நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது.

இதன் மூலமாக மால் தியேட்டர்களில் செயல்படும் E cinema அமைப்புகளுக்கும் இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே நேரடியாக கன்டன்ட்(படம்) கொடுக்கப்படும். கியூப் நிறுவனத்திற்கோ வேறு டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்களுக்கோ தரப்படாது.

இந்தத் திட்டங்களையெல்லாம் ஒத்துக் கொள்கிற தியேட்டர்களுக்கு மட்டுமே முதலில் படத்தைக் கொடுத்து ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறதாம்.

இந்த நிலையில் நேற்றைக்கு தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால். இந்தப் பேச்சுவார்த்தை விவரங்கள் தெரியவில்லை என்றாலும், திரையுலக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசே அழைத்து ஒரு நிரந்தரத் தீர்வை காட்ட வேண்டும் என்று விஷால் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.