தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பிரத்யேக மாஸ்டரிங் யுனிட் துவக்கப்பட்டது..!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பிரத்யேக மாஸ்டரிங் யுனிட் துவக்கப்பட்டது..!

தமிழில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தியேட்டர்களுக்குக் கொடுக்கும்போது அந்தத் தியேட்டரில் இருக்கும் புரொஜெக்டர் எந்தக் கம்பெனி என்று பார்த்து அதற்கேற்றவாறு அந்தப் பிரதியை அந்தத் தொழில் நுட்பத்தில் மாற்றிக் கொடுக்கும் பணியை இதுவரையில் அந்தந்த நிறுவனங்களே செய்து வந்தன. இதற்காக அவைகள் பெரிய தொகையைக் கட்டணமாகக் கேட்டு வாங்கி வந்தன.

இப்போது அத்தகைய அதிகப்பட்சக் கட்டணத் தொகையைக் குறைக்கும் பொருட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்(TFPC) தங்களுக்கென்று தனியாக ஒரு மாஸ்டர் யூனிட்டை நிறுவியுள்ளது. இந்த யுனிட்டை மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்ச ங்கத்திற்காக செய்து கொடுத்துள்ளது.

IMG_3425

இதன் அறிமுக விழா நேற்று கோடம்பாக்கத்தில் மைக்ரோப்ளக்ஸ் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் TFPC செயலாளர் கதிரேசன் பேசும்போது, “மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு செலவுகள் குறையும்.  குறிப்பாக சிறு பட தயாரிப்பாளர்கள் மிகுந்த பயனடைவார்கள். தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மைக்ரோப்ளக்ஸ் ஆல்பர்ட்-க்கும், ப்ரைம் போக்கஸ் ரஞ்சித்திற்கும் எங்களது நன்றி…” என்றார்.

IMG_3404

மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆல்பர்ட் பேசும்போது, “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு மாஸ்டர் யூனிட் வேண்டும் என் விஷால் என்னிடம் பல முறை கேட்டார். இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றார்.

2 லட்சம் ரூபாய் செலவழித்து சங்கத்தை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சியை புரிந்துகொண்டு இந்த வசதியை செய்து தர ஒப்புக் கொண்டேன். பராமரிப்பு செலவைத் தவிர மற்றவைக்கு கட்டணம் கிடையாது.  அதேபோல், 7 கோடிக்கு கணக்கையும் சமர்ப்பித்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவார்…” என்றார்.

IMG_3279

TFPC துணை தலைவர் பார்த்திபன் பேசும்போது, “ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முதன்மையாகக் கருதுவது திருமணம்தான். ஆனால் அதைவிட தலைவர் பொறுப்பில் இருக்கும்போதே சங்கத்திற்கு சிறந்ததை செய்துவிட வேண்டும் என்கிற விஷாலை நான் தரிசிக்கிறேன்.

ஆல்பர்ட் உடனும், ரஞ்சித்துடனும் அவர் பேசிக் கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதைவிட தெளிவாக, சங்கத்திற்கு நன்மை செய்துவிட முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது.

இதில் அரசியல் இல்லை. நான் யாருக்கும் விரோதி அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மிகப் பெரிய தொகையை வைப்பு நிதியாக சேமித்து வைக்க நினைக்கும் விஷாலின் திட்டத்தில் எனது பங்களிப்பும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி…” என்றார்.

IMG_3285

TFPC செயலாளர் துரைராஜ் பேசும்போது, “நீண்ட நாட்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வேண்டும் என்பது விஷாலின் கனவு. இன்று அதை நிறைவேற்றியிருக்கிறார் விஷால். பல ஆண்டுகளாக கொத்தடிமைகள்போல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. அதற்கு உதவி புரிந்த இரு நிறுவனங்களுக்கும்  நன்றி…” என்றார்.

IMG_3317

TFPC தலைவர் விஷால் பேசும்போது, “தமிழ்த் திரையுலகத்திற்கு  மிகப் பெரிய நிறுவனமான மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்தை வரவேற்கிறேன். அதேபோன்று, ‘ப்ரைம் போக்கஸ்’ உடன் இணைவதிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கித் தந்தவர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்தின் ஆல்பர்ட். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஏனென்றால், தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ப்ரொஜெக்டருக்கு பணம் செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போதுதான் ப்ரைம் போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் கட்டணத் தொகையைக் குறைத்திருக்கிறார்கள்.

இந்த ‘மைக்ரோப்ளக்ஸ்’ வசதி ‘ஐடி’  நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில்தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாக இலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக ‘மைக்ரோப்ளக்ஸ்’ ஆல்பர்ட்-க்கு மீண்டும் ஒரு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டரும் இங்கே இருக்கிறது.

நமக்கு அண்ணா சாலையில் முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் ஒரு அலுவலகம் இருக்கிறது. ஆனால், இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்சார் ஷோ ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கும் நமக்கு வாடகை கிடையாது.

நான் படம் தயாரிக்கும்போதுதான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் எனக்கு புரிந்தது. ஆனால், இவர்கள் படம் தயாரிக்கும் தொழிலில் இறங்காமலேயே, தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு இந்தச் சலுகையை அளித்திருக்கிறார்கள்.

இப்படிபட்ட நண்பர்களை இழந்து விடாமல் எல்லோரும் நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவிதமான தடையாக இருந்தாலும் அதை உடைத்து விடலாம்.

எந்த விஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வதுதான் நமக்குப் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். நமக்கெகென்று ஒரு அலுவலகம் அமைந்திருக்கிறது. 

‘இளையராஜா 75’ விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவை இசைஞானிக்காக நடத்துவதில் பெருமையடைகிறேன். இப்படிப்பட்ட மாமனிதருக்கு விழா எடுப்பது நம் எல்லோருடைய கடமையும்கூட.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மென்மேலும் வளரணும். அதனுடன் சேர்ந்து இந்த மைக்ரோப்ளக்ஸ், ப்ரைம் போக்கஸ் நிறுவனங்களும் வளர வேண்டும்…” என்றார்.