அப்பா என்.டி.ஆர்., சித்தப்பா சிவாஜி, பெரியப்பா எம்.ஜி.ஆர்..!

அப்பா என்.டி.ஆர்., சித்தப்பா சிவாஜி, பெரியப்பா எம்.ஜி.ஆர்..!

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கெளதமி புத்ர சாதகர்ணி’.

இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர்  நடித்திருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்திருக்கும் படம் இது.

ஒளிப்பதிவு – சரஸ்வதி புத்ர ஞானசேகர், இசை – பாரதி புத்ர சிரஞ்சன், நடனம் – பாரதி புத்ரி பிருந்தா, சுசிலா புத்ரி ஸ்வர்ணா, சண்டை பயிற்சி – மனோவரம்மா புத்ர ராம்லஷ்மண், பாடல்கள் – வைரமுத்து, தனக்கோடி புத்ர மருதபரணி, வசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி. அஞ்சனா புத்ர கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் தமிழில் சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும், இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குநர்.

IMG_0485

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சி.கல்யாண், காட்ரகட்ட பிரசாத், படத்தின் இயக்குனர் கிரிஷ், படத்தின் தயாரிப்பாளர் ரகுநாத், நரேந்திரா,  y.ராஜீவ் ரெட்டி, ஜகர்ல முடி சாய்பாபு, பிபோ ஸ்ரீநிவாஸ், மற்றும் கிருஷ்ணாரெட்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படத்தின் இசையை நடிகர் கார்த்தி வெளியிட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார்.

விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா பேசும்போது, “நான் சென்னையில் இந்த விழாவில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி. நானும் உங்களில் ஒருத்தன்தான். சென்னையில் பிறந்தவன். சென்னையில் வளர்ந்தவன். தமிழ்நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன்.

என்னுடைய நூறாவது படத்திற்கு  நிறைய கதைகளை கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எதுவும் சரியா வரலே. அந்தச் சமயத்துல நம்ம இயக்குநர் கிருஷ் வந்து இந்த கதையை சொன்னார். கதை எனக்கு ரொம்பவும் புதுசா இருந்துச்சு. நிச்சயமா நமக்கு பெருமையளிக்கும்ன்னு நினைச்சேன். உடனே ஒகே சொல்லிட்டேன்.

இது நம்மை ஆண்ட ஒரு மன்னனின் கதை. இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது. இந்த படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க, ஆசியும் பெரியவங்க ஆசியும்தான்.

இது இல்லாமல் சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும்தான் இந்த படத்தில் நான் நடித்தது. அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நாம் நன்றாகவே இருப்போம்.

நான் அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் ஸார் படத்தில்  நடிக்கிறேன். சூட்டிங்கூட இங்கதான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது. நானும் உங்களில் ஒருத்தன்தான். இந்த படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்…” என்றார்.

விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் கார்த்தி, இயக்குநர் கிருஷ், இசையமைப்பாளர் பட் தயாரிப்பாளர் நரேந்திரா, வசனகர்த்தா மருதபரணி மற்றும் சி.கல்யாண் காட்ரகட்டா பிரசாத் உட்பட பலர் பேசினார்கள்.




error: Content is protected !!