திரைப்படங்களுக்கு வரி விலக்கு வழங்குவதில் புதிய நடைமுறை – தமிழக அரசின் திடீர் முடிவு..!

திரைப்படங்களுக்கு வரி விலக்கு வழங்குவதில் புதிய நடைமுறை – தமிழக அரசின் திடீர் முடிவு..!

அரசுகள் எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதில் சுய லாபம் பார்க்காமல் இருப்பதில்லை. இன்றைய இந்தியாவில்  அரசியல் சூழல் அப்படித்தான் இருக்கிறது.

தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு 40 சதவிகித வரிவிலக்கு என்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். வெறுமனே தமிழில் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு காமா, சோமா படங்களெல்லாம் இதில் வரிவிலக்கினை பெற்றன.

பின்பு ஆட்சிக்கு வந்த இப்போதைய அ.தி.மு.க. அரசு இதில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. பெயர் மட்டும் தமிழில் இருந்தால் போதாது. கூடவே அந்தப் படம் சிறந்த கருத்தினை கொண்டதாக இருக்க வேண்டும். ஆபாச காட்சிகள் இருக்கக் கூடாது. மூடத்தனங்களை வலியுறுத்துவதாக இருக்க்க் கூடாது. குடி, புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாக இருக்க்க் கூடாது. சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்..” என்றெல்லாம் விதிகளை திணித்தது. அப்படியிருந்தும் இந்த விதிவிலக்குகளிலிருந்தும் தப்பித்து பல படங்கள் வரிவிலக்கினை பெற்றன.

இந்தச் சூழலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ‘ஏழாம் அறிவு’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வணக்கம் சென்னை’, ‘நீர்ப்பறவை’, ‘இது கதிர்வேலன் காதல்’வரையிலும் எந்தப் படத்திற்கும் வரிவிலக்குக் கிடைக்கவில்லை.

இந்தப் படங்களெல்லாம் சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் பெற்றிருந்தாலும், தமிழக அரசின் வரி விலக்கு பெற அனைத்துவித தகுதிகளுடன் இருந்தாலும், தமிழக அரசின் ஒருதலைபட்சமான அரசியல் காரணத்தினால் வரிவிலக்குக் கிடைக்கவில்லை.

இதனை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது தள்ளுபடியானதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதிமன்றம் விசாரணையின்போது இந்த மாதிரியான வரி விலக்கு கேட்கும் திரைப்படங்களுக்கான கால வரையறையை தீர்மானித்து அதனை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி நேற்றைக்கு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த்து. அப்போது தமிழக அரசின் சார்பில் வரி விலக்கு கோரும் திரைப்படங்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் காலக்கட்டம் பற்றி தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில்தான் மிக புத்திசாலித்தனமாக புதிய விதிமுறையை கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறது தமிழக அரசு.

அதாவது, “இப்போது நடைமுறையில் உள்ளபடி, ‘தயாரிப்பாளர்கள் வரிவிலக்கு கோரிய விண்ணப்பத்தை தாக்கல் செய்த நாளில் இருந்து 4 வாரங்களில் முடிவினை தெரிவிக்க வேண்டும்’ என்பதற்கு பதிலாக, ‘வரி விலக்கு கோரிய திரைப்படத்தை திரைக்கு வந்த பின்பு அடுத்த நான்கு வாரங்களுக்குள் வரி விலக்கு அளிப்பதான முடிவெடுக்க’ அனுமதிக்க வேண்டும்..” என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.

இதன்படி பார்த்தால் ஒரு படத்தினை திரையிட்ட பின்பே வரி விலக்கு ஆணையைப் பெற முடியும் என்கிற சூழ்நிலை வருகிறது.

இப்போதைய நிலவரப்படி ஒரு திரைப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கிடைத்தவுடன் வரி விலக்கு கோரி விண்ணப்பிக்கிறார்கள். வரி விலக்கு கிடைத்தவுடன் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இதனால் முன்கூட்டியே தியேட்டர்காரர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட படத்திற்கு வரி விலக்கு கிடைத்திருப்பது தெரிந்து விடுகிறது.

இதனால் வணிக வரித் துறையினரிடம் மிக எளிதாக வரி விலக்கு ஆணைக்கான அனுமதி உத்தரவை அளித்துவிட்டு, கிடைத்த வசூலை விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சில நேரங்களில் இந்த வரி விலக்குதான் ஒரு திரைப்படத்தை வெள்ளித்திரைக்கு கொண்டு வரவும் பெரிதும் உதவுகிறது.

ஆனால் இப்போது தமிழக அரசு தடாலடியாக எடுத்திருக்கும் இந்த புதிய முடிவினால் அரசுத் தரப்பும், அதிகாரிகளின் தரப்பும் மறைமுகமாக லஞ்சத்தை வாங்கி குவிக்கப் போவது உறுதி என்றே தெரிகிறது.

ஒரு படம் ரிலீஸானவுடன் அதற்கு வரும் முட்டாள்தனமான எதிர்ப்புகளையும், நியாயமான கண்டனங்களையும்  அரசுத் தரப்பு மனதில் வைத்துக் கொள்ளும். இதனையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு, வரி விலக்குக் கேட்டு விண்ணப்பிக்கும் தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசி, ‘வரி விலக்கு வேணும்னா இவ்வளவு வெட்டு’ என்று சொல்லி வசூல் செய்ய துவங்கவும் வாய்ப்புண்டு. 

முறையாக ஒரு திரைப்படம் வரி விலக்கு பெற்றால் அத்திரைப்படத்தின் தியேட்டர் கட்டணங்கள் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டாக வேண்டும். ஆனால் இதுவரையில் இத்தனையாண்டுகளில் எந்தத் தியேட்டரிலும் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. மாறாக வரி விலக்கினால் கிடைக்கும் பல கோடிகள் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று மூன்று தரப்பிற்குமே சென்று சேர்ந்திருக்கிறது. கூடவே அரசு அதிகாரிகளுக்கு கப்பமாகவும் போகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

இதனை எதிர்த்து கோர்ட்டில் தற்போது பொதுநலன் கருதி வழக்கு போட்டிருக்கிறார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வரவில்லை. அதற்குள்ளாக இப்படியொரு திட்டத்தை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முன் வைத்திருக்கிறது எனில், இதனை லஞ்ச, லாவண்யத்திற்கான எதிர்பார்ப்பாகவே கருதலாம்.

திரையுலகத்தினர் இதனை புரிந்து கொண்டால் சரி..!




error: Content is protected !!