இயக்குநர்கள் சங்கத்தில் அவசர பொதுக் குழுக் கூட்டம் – தேர்தல் ஒத்தி வைப்பு..!

இயக்குநர்கள் சங்கத்தில் அவசர பொதுக் குழுக் கூட்டம் – தேர்தல் ஒத்தி வைப்பு..!

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் தேர்தல் நடப்பது வாடிக்கை. அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வரும் ஜூலை 14-ம் தேதியன்று நடைபெறும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் கூடிய சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் புதிய தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் தலைவர் பதவியைத் தவிர மற்ற பதவிகளுக்கு தேர்தல் உண்டு என்று அறிவித்தனர் சங்க நிர்வாகிகள். இதன்படி இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும், ஜெகதீசன் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையும் முடிவடைந்து இவர்களின் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

TANTIS-Members-3

இந்த நிலையில் திடீரென்று இயக்குநர்கள் சங்கத்தில் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா, தேர்தலில் போட்டியிடாமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் சில சங்கடங்கள் இருக்கும் என்பதை உணர்ந்ததால் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

bharathiraja-resign-letter

இதனால் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் குழப்பம் ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் முடிந்து, பரிசீலனையும் முடிந்துவிட்டதால் இனிமேல் தலைவர் பதவிக்கு யாரையும் போட்டியிட வைக்க முடியாதே என்கிற குழப்பத்திற்கு ஆளாகிவிட்டனர்.

இதனால் சங்கத்தின் தேர்தல் தேதியை ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதோடு வரும் 8-ம் தேதி காலையில் சங்கத்தின் பொதுக்குழுவை அவசரமாக கூட்டியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் புதிய தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்குப் பிறகு மீண்டும் வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, வாபஸ், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்றவை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.

bharathiraja

இயக்குநர் பாரதிராஜாவின் திடீர் விலகலுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில் இயக்குநர் பாரதிராஜா இயக்குநர்கள் சங்கத்தில் பொறுப்புக்கு வருவதாகவே இல்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலை எதிர்க்க வலுவான ஒரு தலைவர் தேவை என்பதால் விஷாலின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் பாரதிராஜாவை தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட வைத்துத் தலைவராக்கலாம் என்று சொல்லி வந்தார்கள்.

இந்த நிலைமையில் திடீரென்று பாரதிராஜா இயக்குநர் சங்கத்தின் தலைவரானார். இதுகூட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் தூண்டுதலில்தான் நடைபெற்றதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

காரணம், பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடாமல் இருப்பதற்காக விஷாலின் தூண்டுதலால் ஆர்.கே.செல்வமணி பாரதிராஜாவிடம் தனக்கிருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி கடைசிக்கட்ட நெருக்கடிகளை கொடுத்து பாரதிராஜாவை ஒப்புக் கொள்ள வைத்ததாகச் சொல்கிறார்கள்.

இதையறிந்து விஷாலின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஆர்.கே.செல்வமணியைத் திட்டித் தீர்த்தனர். பாரதிராஜாவிடம் இது பற்றி அனைவரும் கோபப்பட்டு பேச.. அவரும் இதன் பின்புதான் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்தாராம்.

இயக்குநர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒரே நேரத்தில் தலைவர் பொறுப்பில் இருக்க முடியாது என்பதை இயக்குநர் பாரதிராஜாவுக்கு அவருடைய நெருக்கமான வட்டாரத்தினர் உணர்த்தியுள்ளனர்.

“நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலும் விஷால் பொறுப்பில் இருந்ததை நாம் கண்டித்தோம். இப்போது அதையே நீங்கள் செய்தால் எப்படி..?” என்று மூத்தத் தயாரிப்பாளர்கள் பலரும் இயக்குநர் பாரதிராஜாவிடம் நேரிடையாகவே கடிந்து கொண்டனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களாகவே இது பற்றிய பேச்சுவார்த்தையை பாரதிராஜாவிடம் பலரும் நடத்தி வந்த நிலையில் இன்றைக்கு தனது விலகல் கடிதத்தை சமர்ப்பித்துவிட்டார் பாரதிராஜா.

இதனால் இயக்குநர் சங்கத்தில் ஏற்கெனவே செய்து கொண்டிருந்த தேர்தல் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

“இயக்குநர் பாரதிராஜா பொதுக் குழுவிலேயே பதவியேற்க மறுத்து மறுத்திருக்கலாம். அப்போது விட்டுவிட்டு இப்போது சொன்னதால், இதுவரையிலான தேர்தல் வேலைகளுக்குச் செய்த செலவுத் தொகை வீணானதுதான் மிச்சம்…” என்று முணுமுணுக்கிறார்கள் உதவி இயக்குநர்கள்.
error: Content is protected !!