full screen background image

கேளிக்கை வரியை எதிர்க்கும் திரையுலகத்தினரின் போராட்டம் நியாயமானதா..?

கேளிக்கை வரியை எதிர்க்கும் திரையுலகத்தினரின் போராட்டம் நியாயமானதா..?

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி அதிகாரம் கை மாறுமா..? அல்லது ஆட்சிக் கலைப்பு ஏற்படுமா என்கிற குழப்பத்தில் இருக்கும்போது தமிழ்த் திரையுலகமும் அப்படியொரு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

திரையுலகத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரியாக 10 சதவிகிதம் விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் திடீரென்று வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

இவர்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகமெங்கும் திரையரங்குகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை அடுத்துதான் இத்தனைக் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

devi-cinema-theatre

முன்பு அதிகப்பட்ச டிக்கெட் விலை 120 ரூபாயாக இருந்தது. இதில் தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவிகிதம் உள்ளடக்கம். இதனால் ஒரு டிக்கெட்டுக்கான 120 ரூபாயில் 30% கேளிக்கை வரியான 36 ரூபாயை அரசுக்கு வரியாகச் செலுத்திய பின்னர் மீதியுள்ள 84 ரூபாயில் தியேட்டர்காரர்கள்  42 ரூபாய் + விநியோகஸ்தர் (அ) தயாரிப்பாளர்கள் 42 ரூபாய் என்று பிரித்துக் கொண்டார்கள்.

ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 120 ரூபாய்க்கு மேல் இதையும் கூட்டித்தான் தியேட்டரில் விற்பனை செய்கிறார்கள். இதன்படி பார்த்தால் இப்போது அதிகப்பட்ச டிக்கெட்டின் விலை 153 ரூபாய் 60 காசுகள் என்றாகிறது.

இந்தப் பணத்தில் ஜி.எஸ்.டி. வரியான 28 சதவிகிதமான 36 ரூபாய் 30 பைசா மத்திய அரசுக்கு வரியாகச் சென்றது. மீதமிருக்கும் 120 ரூபாயில் தமிழக அரசின் கேளிக்கை வரியான 30 சதவிகிதமான 40 ரூபாயை தமிழக அரசுக்கு கட்ட வேண்டி வந்தது.

இதனால் தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலா 40 ரூபாய்தான் ஷேராக கிடைக்கும் என்கிற சூழல் எழுந்தது. இது ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பாக பெற்று வந்த ஷேர் தொகையில் இருந்து 2 ரூபாய் குறைவு என்பதால் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் இதனை வன்மையாக எதிர்த்தார்கள்.

“ஜி.எஸ்.டி. என்ற ஒரே வரி விதிப்பே போதும். தமிழக அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்…” என்று தமிழ்த் திரைப்பட அமைப்புகள் மாநில அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.

இந்த நேரத்தில் தமிழக அரசின் கேளிக்கை வரி பிரச்சினை முடிவுக்கு வரும்வரையிலும் தியேட்டரில் பிடித்தம் செய்யப்படும் தமிழக அரசின் கேளிக்கை வரியை தியேட்டர்காரர்கள் அரசிடம் செலுத்த வேண்டாம் என்று தமிழக அரசு ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர் கட்டணத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தமிழக அரசின் கேளிக்கை வரிக்கான பணம், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.  

இப்போது “கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து…” என்ற திரையுலகத்தினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு தற்போது 30 சதவிகித வரியிலிருந்து 10 சதவிகிதமாக தனது வரியை குறைத்துள்ளது. இந்த வரி விதிப்பு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறது.

இதனால் கடந்த ஒரு மாத காலமாக பிடித்தம் செய்து வைத்திருந்த தமிழக அரசின் கேளி்க்கை வரியான 30 சதவிகிதத் தொகையை தமிழக அரசிடம் கட்ட வேண்டிய சூழல் தியேட்டர்காரர்களுக்கு. இந்தக் கூடுதல் வரியினால் கடந்த ஒரு மாத காலமாக தியேட்டரில் ஓடிய படங்களுக்கான பணத்தை ஷேர் செய்வதில் தியேட்டர்காரர்களைவிடவும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் பெரிய இழப்பை அனுபவிக்கப் போகிறார்கள்.

இதனால்தான் தமிழ்த் திரையுலகத்தினர் திடீர் ஆவேசம் கொண்டு, “கேளி்க்கை வரியை 10 சதவிகிதம்கூட ஏற்க முடியாது. அதையும் நீக்குங்கள்” என்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த 10 சதவிகித வரியை அமல்படுத்தினால், டிக்கெட் விலை குறையும் என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே வசூலித்து வரும் தொகையில் அரசின் தற்போதைய கேளி்ககை வரியான 30 சதிவிகிதத்தையும் சேர்த்துதான் 153 ரூபாய் 60 காசுகளை பெரிய மால் தியேட்டர்காரர்கள் வசூலித்து வருகிறார்கள்.

ஆனால் இப்போது தமிழக அரசு தனது கேளிக்கை வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைத்துவிட்டதால் டிக்கெட் கட்டணமும் குறைக்கப்பட்டாக வேண்டும்.

இதன்படி பார்த்தால், 

டிக்கெட் விலை = 84
10% வரி = 8.4
மொத்தம் = 92.4
ஜிஎஸ்டி (18%) = 16.632
புதிய டிக்கெட் விலை = 109.032

அதாவது, 110 ருபாய்தான் டிக்கெட் விலை இருக்க வேண்டும். இதில் வரி போக மீதமிருக்கும் டிக்கெட்டின் உண்மையான விலையான 84 ரூபாயில் பாதியான 42 ரூபாயைத்தான் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும்.

இந்த 42 ரூபாய் என்பது ஜி.எஸ்.டி. வரிக்கு முன்பாகவே தமிழக அரசின் கேளி்ககை வரியான 30 சதவிகித வரியைக் கட்டி வந்த காலத்தில் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் தங்களுக்குள் பிரித்துக் கொண்ட அதே ஷேர் தொகையாகும்.

சரி.. கேளிக்கை வரியை முற்றிலுமாக அரசு நீக்கிவிட்டால் தற்போதைய நிலவரப்படி அதிகப்பட்ச கட்டணம் 120 ரூபாயில் இருந்து 101 ரூபாயாக குறைக்கப்பட வேண்டும். இதற்கு தியேட்டர்காரர்களும், தயாரிப்பாளர்களும் ஒத்துக் கொள்வார்களா..?

அரசின் உத்தரவே ஒரு முட்டாள்தனமான வடிவத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை வெளியிட்டால் தியேட்டர் கட்டணங்கள் குறைக்கப்பட்டாக வேண்டும் என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். இதனால் தியேட்டர்களில் புதிய கட்டணத்தில் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட வேண்டும். இதற்கு கொஞ்சம் கால அவகாசத்தை தியேட்டர்காரர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற அறிவுகூட இல்லாமல் நடு இரவில் உத்தரவை போட்டுவிட்டிருக்கிறது மாநில அரசு.

அடுத்த நாள் காலையில் இருந்து இப்போதுவரையிலும் தியேட்டர்காரர்கள் பழைய கட்டணத்தில்தான் இப்போதும் டிக்கெட் கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிந்தால் செப்டம்பர் 28-ம் தேதி முதல் பிரச்சினை தீரும் வரையிலான நாட்களுக்கு வெறும் 10 சதவிகித வரியை மட்டுமேதான் தமிழக அரசிடம் கட்டப் போகிறார்கள் தியேட்டர்காரர்கள்.

அப்படியானால் இந்தக் காலக்கட்டத்தில் ரசிகர்களிடம் வசூலிக்கப்படும் 30 சதவிகித வரியில் மீதமிருக்கும் 20 சதவிகித வரியை முறைகேடாக தாங்களே வைத்துக் கொள்ளப் போகிறார்கள் தியேட்டர்காரர்கள். இதற்கு அரசும் மறைமுகமாக ஒத்துப் போகிறது..! கடைசியில் ரசிகர்கள்தான் பெரிய இளிச்சவாயர்கள் என்பது உண்மையாகப் போகிறது. 

TFPC-GST-TAx-Letter-Stills-1

பின்பு எதற்காக இந்த போராட்டம்..? ஸ்டிரைக். வேலை நிறுத்தம்.. யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் இவர்கள்..?!

ஏற்கெனவே தியேட்டர்களின் கேண்டீனில் கொள்ளை.. பார்க்கிங் கட்டணத்தில் கொள்ளை என்று நிறையவே மக்களைச் சுரண்டி வரும் பெரிய மால் தியேட்டர்காரர்கள் மேலும், மேலும் மக்களிடத்தில் கொள்ளையடிக்கத்தான் நினைக்கிறார்கள். இவர்களின் இந்த்த் திருட்டுக்கு, தயாரிப்பாளர் சங்கமும் துணை போவது வெட்கக் கேடு.

இது மாதிரியான மால்களில் இப்போதும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களை மட்டும்தான் திரையிடுகிறார்கள். இவர்கள்தான் தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பிலும் அமர்ந்திருப்பதால் இது தன்னிச்சையாக, அவர்களது சுயநலனுக்காக எடுத்த முடிவு என்று விமர்சிக்கிறார்கள் சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள்.

அதோடு வரும் 6-ம் தேதியன்று 8 திரைப்படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. இவற்றுக்கான விளம்பரங்கள் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து தினசரிகளிலும், டிவிக்களிலும் வெளியாகி வருகின்றன. இதற்காக அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் பல லட்சங்களை செலவழித்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் திடுதிப்பென்று ஸ்டிரைக்.. ஆறாம் தேதி முதல் படங்களை வெளியிட மாட்டோம் என்று யாரிடமும் கருத்துக் கேட்காமல் அறிவித்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று வாட்ஸ்அப் குழுமங்களில் பல சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பொங்கித் தீர்த்திருக்கிறார்கள்.

அதிலும் வரும் வாரம் வெளியாகவிருக்கும் ‘விழித்திரு’, ‘திட்டி வாசல்’, ‘களத்தூர் கிராமம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் மிக அதிக செலவில் பணத்தைக் கொட்டி விளம்பரம் செய்திருக்கிறார்கள். இப்போது சங்கம் எடுத்த இந்த திடீர் முடிவால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிப் போயிருக்கிறார்கள் இந்தத் தயாரிப்பாளர்கள்.

சங்கத்தில் ஒரு முடிவெடுத்தால் இந்த வாரம் வெளியாகக் கூடிய படங்களின் தயாரிப்பாளர்களையும் அழைத்து பேசி, அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு முடிவெடுத்திருக்க வேண்டும். இப்படி தன்னிச்சையாக நிர்வாகத்தினர் முடிவெடுத்திருப்பது சரியா என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

மேலும் வரும் அக்டோபர் 18-ம் தேதி, தீபாவளி தினத்தன்று ‘மெர்சல்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் வரவுள்ளன. அவற்றுக்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகிறது. பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிப் போனால் பாதிக்கப்படப் போவது சின்ன பட்ஜெட் திரைப்படங்கள்தான்.

தீபாவளிக்கு பிறகு எந்த தேதியில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும் என்று தெரியாமல் தற்போது ரிலீஸுக்காக கடந்த இரண்டாண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் மேலும் தள்ளிப் போய் அடுத்த வருடத்தை எதிர் நோக்கி காத்திருக்க வேண்டியதுதான்..!

ஒரு திட்டமிடுதலே இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் இது போன்ற திடீர் முடிவுகள் நிச்சயமாக தமிழ்த் திரையுலகத்தை மிகப் பெரிய அளவுக்கு பதம் பார்க்கப் போகிறது..!

தமிழக அரசு நிச்சயமாக இந்த ஸ்டிரைக்கை கண்டு கொள்ளப் போவதில்லை. அவர்களே தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களா இதையெல்லாம் திரும்பிப் பார்க்கப் போகிறார்கள்…?

ஏற்கெனவே தடியெடுத்தவன் தண்டல்காரன் கதையாக கமல், ரஜினி, பிரகாஷ்ராஜ் என்று துவங்கி கடைசியாக பிரசன்னாவரையிலும் இந்த ஆட்சியை கிண்டல் செய்து பேசிவிட்டதால் கடும் கோபத்தில் இருக்கும் அரசுத் தரப்பினர், இந்த விஷயத்தில் எதையும் கிள்ளிக்கூட போட மாட்டார்கள் என்பது உறுதி..!

கடைசியில் இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது அப்பாவி சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான்..!

Our Score