தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தனி அலுவலரும், தேர்தல் அலுவலரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

முன்னதாக வரும் ஜூன் 21-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கான முறைப்படியான அறிவிப்பினை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அலுவலர் நேற்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை அடுத்து தயாரிப்பாளர்கள் தரப்பில் மும்முரமாக செயல்பட்டு மூன்று அணிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியுமாக 3 அணிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிய வந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு சட்டம் என்றைக்கு நீக்கப்படும் என்பதே தெரியாத நிலையில் தேர்தல் வேலைகளைப் பார்ப்பதும், வாக்குகளை சேகரிக்க அலைவதும் தயாரிப்பாளர்களால் முடியாத காரியம் என்று தனி அலுவலரிடத்திலும், தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டு அவை விசாரணையில் உள்ளன. இந்த நிலைமையில் தேர்தலை இப்போது நடத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு அரசிடம் பல தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளனர்.

இதை பரீசிலித்த அரசு பல தயாரிப்பாளர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை தள்ளி வைப்பதாக இன்றைக்கு அறிவித்துள்ளது.

producers council-election-2020-postponed-statement