இயக்குநர்கள் சங்கத் தேர்தல்-வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு..!

இயக்குநர்கள் சங்கத் தேர்தல்-வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு..!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.

அதன்படி 2019-2021-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் தற்போதைய செயலாளர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் அமீரின் தலைமையில் ஒரு அணியும் போட்டியில் இறங்கின. வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

ஆனால் வேட்பு மனு தாக்கலின்போது ஏற்பட்ட சிறு குழப்பத்தினால் இயக்குநர்கள் அமீர் மற்றும் ஜனநாதனின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதினால், அந்த அணியினர் அனைவருமே தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று அமீர் அணியினர் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதால் பொதுச் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் போட்டியில்லாமல் போய்விட்டது.

இதனால் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் பேரரசுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் செந்தில்நாதன் அறிவித்துள்ளார்.

ஆனால், மற்றைய பதவிகளுக்கு போட்டிகள் ஏற்பட்டுள்ளது.

இதன்படி தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை எதிர்த்து இயக்குநர் வித்யாசாகர் போட்டியிடுகிறார்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா இருவரும் ஆர்.கே.செல்வமணியின் அணியின் சார்பாக போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து இயக்குநர் என்.வேல்முருகன் தனியே போட்டியிடுகிறார்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு இயக்குநர்கள் சித்ரா லட்சுமணன், சுந்தர்.சி, என்.லிங்குசாமி, ஏகாம்பவாணன் ஆகியோர் ஆர்.கே.செல்வமணி அணியின் சார்பாகவும், ராஜா கார்த்திக், நாகராஜன் மணிகண்டன் என்ற 2 பேர் தனித்தும் போட்டியிடுகின்றனர்.

 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மனோபாலா, மனோஜ்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், என்.எஸ்.ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ், சரண், எம்.திருமலை, முத்து வடுகு, ராம்கி என்னும் ராமகிருஷ்ணன், டி.ரமேஷ் பிரபாகரன்,  ஆர்.கே.கண்ணன், செல்வி ஆர்.ஜெனிபர் ஜூலியட் ஆகிய 12 பேர் ஆர்.கே.செல்வமணி அணியில் போட்டியிடுகின்றனர்.

மேலும், ராசி அழகப்பன், ஜி.அருண்குமார், ப.பாக்கியராஜ், பி.இடிமன்னன், ஜி.ஐந்து கோவிலான், கே.பி.ஜெகன், எஸ்.மணிவண்ணன், கே.மதிராஜா, மூதூரை பொய்யாமொழி, எஸ்.முத்துக்குமரன்,  கே.நம்பிராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ரஞ்சித் குமார், ரத்தன் கணபதி, டி.ரவிக்குமார், எம்.சி.சேகர், ஓம்கார் என்னும் வெற்றி கணேஷ், பொன்.வரம் ஜெயசக்தி ஆகிய 18 பேர் தனித்தும் போட்டியிடுகின்றனர்.

tfdu-election-2019-candidates-name-1

tfdu-election-2019-candidates-name-2

tfdu-election-2019-candidates-name-3

tfdu-election-2019-candidates-name-4

tfdu-election-2019-candidates-name-5

இந்தத் தேர்தலின் வாக்குப் பதிவு வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் நடைபெறவிருக்கிறது. அன்றைய இரவிலேயே தலைவர், துணைத் தலைவர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மறுநாள் ஜூலை 22-ம் தேதியன்று செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.




error: Content is protected !!