துருவா – இந்துஜா நடிக்கும் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம்..!

துருவா – இந்துஜா நடிக்கும் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம்..!

ப்ளக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சூப்பர் டூப்பர்.’  

இந்தப் படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் ‘ஆண்மை தவறேல் ‘படத்தில் நாயகனாக நடித்தவர்.  நாயகியாக இந்துஜா நடிக்கிறார் . இவர் ஏற்கெனவே ‘மேயாத மான் ‘, ‘மெர்க்குரி’ , ‘பூமராங்’ , ‘அறுபது வயது மாநிறம்’ படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யாவும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் ஒரு ரகளையான  கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார். இவர் ‘மீசையை முறுக்கு’, ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_8099

ஒளிப்பதிவு – சுந்தர்ராம்  கிருஷ்ணன், இசை – திவாகரா தியாகராஜன், படத் தொகுப்பு – வேல்முருகன், கலை இயக்கம் – சூர்யா. 

இந்தப் படத்தை ஏ.கே. என்கிற அருண் கார்த்திக் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே குறும் படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது ‘லேகா’ குறும் படம் திரையுலகத்தில் பரவலாக கவனம் பெற்ற படமாகும்.

படம் பற்றி இயக்குநர் அருண் கார்த்திக் பேசும்போது, “இதுவொரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான  த்ரில்லர் படம். இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும்படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப்  புரிந்துதான் நாயகன், நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள்…” என்றார். 

IMG_8003(1)

இப்படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் நாயகன் துருவா, நாயகி இந்துஜா மற்றும் படத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கி படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு மும்முரமாக இருக்கின்றனர் ‘சூப்பர் டூப்பர்’ படக் குழுவினர்.