ஸ்பைடர் – சினிமா விமர்சனம்

ஸ்பைடர் – சினிமா விமர்சனம்

‘L.L.P.’ நிறுவனத்திற்காக தாகூர் மது மற்றும் N.V.பிரசாத் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில், தெலுங்குலகில் ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்டும் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர்களுடன் S.J.சூர்யா, R.J.பாலாஜி, பரத், பிரியதர்ஷி புலி கொண்டா, சாயாஜி ஷிண்டே, நாகிநீடு, ஜெயப்பிரகாஷ்,  தீபா ராமானுஜம், ஷாஜி, அஜய் ரத்னம், ஹரீஷ் பெராடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கலரிஸ்ட் – சி.சுருளிராஜன், நடனம் – ஷோபி, கலை இயக்கம் – ரூபின் கசாக், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரியாஸ் கே.அகமது, ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், தயாரிப்பு – என்.வி.பிரசாத், எழுத்து, இயக்கம் – ஏ.ஆர்.முருகதாஸ்.

முன்னணி தமிழ் நடிகர்கள் நடிக்கின்ற படங்களெல்லாம் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் குறைந்தது 200 தியேட்டர்களிலாவது ஓடுகின்றன. ஆனால் தெலுங்கு ஹீரோக்கள் நடிக்கின்ற படங்களுக்கு சென்னை, கோவை ஆகிய இரண்டு ஊர்களில் மால்களில் மட்டுமே தெலுங்கு பேசும் மக்களுக்காக இடம் கிடைக்கின்றன.

தெலுங்கு மக்கள் தமிழ் படங்களை பார்த்து ரசிக்கும்போது, தமிழகத்து மக்கள் ஏன் தெலுங்கு படங்களையும், தெலுங்குலகின் ஹீரோக்களையும் வாழ வைக்கக் கூடாது என்றெண்ணி இதன் முதல்படியாக தமிழில் இந்தப் படம் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் தெலுங்கின் இளைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மகேஷ் பாபு.

தெலுங்குலகின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான கிருஷ்ணாவின் மகனான மகேஷ்பாபு, டாலிவுட்டில் ‘பிரின்ஸ்’ அதாவது ‘இளவரசர்’ என்று கொண்டாடப்படுகிறார். அப்படிப்பட்டவர் நடிக்கின்ற படம் என்பதால், இந்த ‘ஸ்பைடர்’ மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

போதாக்குறைக்கு இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பதால் மேலும் பரபரப்பு கூடிக் கொண்டது. படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் பாதியை செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் உள் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் பணியைச் செய்து வருகிறது மத்திய உளவுத் துறை. இது Intelligence Bureo என்றழைக்கப்படுகிறது. நாட்டில் வசிப்பவர்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களை உளவு பார்த்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும் பணி இந்த அமைப்பின் ஒரு பகுதி வேலைதான்.

அப்படிப்பட்ட ஒரு வேலையைத்தான் செய்து வருகிறார் மகேஷ்பாபு. கூடவே தான் கண்டறிந்த தனிப்பட்ட சாப்ட்வேரின் மூலமாக யாராவது கஷ்டத்தில், சிக்கலில், உயிர் பயத்தில் இருப்பதாக யாருக்காவது போன் செய்து பேசினால் அதனை ஒட்டுக் கேட்கும் மகேஷ்பாபு அந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், பிரச்சினையை முடிப்பதற்கும் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகிறார். இது அவரது அலுவலகத்தினருக்கு தெரியவே தெரியாது.

இதன்படி காணாமல் போன போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனை கண்டுபிடித்துத் தருகிறார். காதல் என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க நினைப்பவர்களிடத்தில் இருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறார். இப்படி சில சமூக சேவைகளை தன் முகம் காட்டாமல் செய்து வருகிறார் மகேஷ் பாபு.

இந்த நேரத்தில் ஒரு நாள் இரவில் ஒரு வீட்டில் இருந்து இளம் பெண் ஒருவர் தனது தோழிக்கு போன் செய்து தன் வீட்டில் மட்டும் மின்சாரம் இல்லையென்றும், வீட்டில் யாரோ ஒருவர் இருப்பது போலவும் பயந்து போய் சொல்கிறார். இதை ஒட்டுக் கேட்கும் மகேஷ் பாபு தன்னுடன் படித்த, இப்போது பெண் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் ஒருவரை, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பாதுகாப்புக்காக அனுப்புகிறார்.

மறுநாள் காலையில் அந்த இரண்டு பெண்களும் கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிர்ச்சியடையும் மகேஷ் பாபு தன்னால்தான் அந்த படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்ற என்று நினைத்து தன் வேலையை ராஜினாமா செய்யும் அளவுக்குச் செல்கிறார்.

ஆனால் அவரது அப்பா ஜெயப்பிரகாஷின் ஆலோசனையைக் கேட்டு தன் முடிவை மாற்றிக் கொள்ளும் மகேஷ் பாபு, வேலையில் இருந்தபடியே உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய முயல்கிறார்.

போன் கால்களை டிரேஸ் செய்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அதோடு கூடவே சி.சி.டி.வி. கேமிராவின் புட்டேஜ்களை வைத்தும் முயல்கிறார். அதில் சந்தேகத்திற்கிடமாக கண்டுபிடிக்கப்படும் பரத்தின் புகைப்படத்தை வைத்து ஒரு டிராமா போடுகிறார் மகேஷ் பாபு.

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் செகந்திராபாத்தில் மருந்து கடை வைத்திருக்கும் பரத்தின் நண்பன், மகேஷ் பாபுவுக்கு போன் செய்து பரத்தை தெரியும் என்று சொல்ல மகேஷ் பாபு அங்கே ஓடுகிறார்.

பரத்தின் பெயர் ‘சுடலை’ என்றும் அவனுடைய வாழ்க்கைக் கதையை சுடுகாட்டில் வசிக்கும் முதியவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படியும் சொல்கிறார் மருந்து கடை நண்பர். சுடுகாட்டு முதியவரோ பரத்தின் வாழ்க்கைக் கதை முழுவதையும் மகேஷ் பாபுவிடம் சொல்கிறார்.

அந்த சுடுகாட்டில் வெட்டியான் வேலை பார்க்க வந்திருக்கிறார் பரத்தின் அப்பா. பரத்துக்கு ஒரு அண்ணனும் உண்டு. பரத்தின் அண்ணன் தினமும் பிணங்களை பார்த்து, பார்த்து பழகிவிட்டதாலும், அழுகை குரல்களை தினமும் கேட்டதாலும் அவருடைய மனநிலை சிறு வயதிலேயே பிறழ்கிறது.

சுடுகாட்டுக்கு பிணங்களே வரவில்லையென்றால் மிகவும் சோர்ந்துபோய் விடுகிறார் பரத்தின் அண்ணன். சரியாகச் சாப்பிடாமல் தவிக்கிறார். ஊரில் சாவே நடக்கவில்லையென்றால் என்ன..? நான் சாவை உருவாக்குகிறேன் என்று சொல்லி ஊரில் சில சாவுகளை தானே உருவாக்குகிறார் பரத்தின் அண்ணனான சிறுவன்.

இது எப்படியோ ஊர்க்காரர்களுக்குத் தெரிய வர.. அவர்கள் பரத்தின் அம்மா, அப்பாவையும், குடிசையையும் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். ஆனால் இந்த விபத்தில் பரத்தும், அவரது அண்ணனும் தப்பித்துவிடுகிறார்கள்.

இந்தக் கதையை அறிந்த மகேஷ் பாபு மீண்டும் ஹைதராபாத் திரும்புகிறார். மகேஷ்பாபு தனது ஊர்வரையிலும் சென்று விசாரித்ததை அறிந்த பரத்தின் அண்ணனான மெயின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா, செய்தி சேனல்களுக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைக்கிறார்.

அதில் தான் செய்த படுபயங்கர கொலைகளையெல்லாம் வெளிப்படையாகச் சொல்கிறார். ஹைதராபாத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ டிரெயினுக்கான தூண்களில் பலரையும் கொலை செய்து புதைத்து வைத்திருப்பதாக சூர்யா சொல்ல.. ஹைதராபாத் நகரமே அலறுகிறது. இதுவரையில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மெட்ரோ ரயிலின் பாலங்களின் அருகே கூடி கதறி அழுகிறார்கள்.

இப்போது கிடைத்த ஒரேயொரு சின்ன துப்பின் அடிப்படையில் பரத்தைத் தேடிப் பிடிக்கிறார் மகேஷ் பாபு. பரத்தை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழைத்து வரும் மகேஷ் பாபு அங்கேயே அவரை சுட்டுக் கொல்கிறார்.

தனது தம்பியின் சாவை நேரில் பார்த்த எஸ்.ஜே.சூர்யா மிகவும் ஆத்திரமாகி தனது படுகொலைகளை தொடரப் போவதாகச் சொல்கிறார். ஆனால் மகேஷ் பாபுவோ, சூர்யாவை எப்படியாவது கண்டுபிடித்துவிட தீவிரமாய் களத்தில் இறங்குகிறார். அவரால் முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் மிச்சம், மீதி படம்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரான படம் என்றாலும் தெலுங்குக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை ஹைதராபாத்தை மையமாக இருப்பது.. மகேஷ்பாபு செகந்திராபாத்திற்கு செல்வது.. சுடுகாட்டில் பலரது பெயர்களும் தெலுங்கில் இருப்பது.. மருத்துவமனையில்கூட தெலுங்கு பேசும் மக்களாக இருப்பது.. ஹைதராபாத்தின் ஒரு பகுதியான பஞ்ச்ரா ஹில்ஸ் மலைப் பகுதியில் இருந்து ஒரு பெரிய மலைக் குன்று கீழே உருட்டி விடப்படுவது என்று படம் நெடுகிலும் ஆந்திரா வாடை அநியாயத்திற்குத் தூக்குகிறது.

மகேஷ்பாபு அழகான முகம். ஆனால் எல்லாவித காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான ரியாக்சனை காட்டுவதுதான் ஏமாற்றமாக உள்ளது. தெலுங்குலகில் உணர்ச்சிப்பூர்வ காட்சிகளில்கூட கோபத்தைக் காட்டி நடிப்பு இதுதான் என்று சொல்லி முடித்துவிடுவார்கள். ஆனால் தமிழில் உணர்வுப்பூர்மான காட்சியென்றாலும்கூட கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லையென்றால் அது சோகக் காட்சியில்லை என்று சொல்லிவிடுவார்கள்.

மகேஷ்பாபுவிடம் இதை இயக்குநர் சொல்லவில்லை போலிருக்கிறது. தனது அம்மா சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்கிற நேரத்தில்கூட அவருடைய பதட்டம் எதையும் ஆடியன்ஸுக்கு உணர்த்தவில்லை. இதை முகத்தோடுதான் அடுத்தக் காட்சியில் தனது காதலியுடன் பேசுகிறார்.

இன்னொரு காட்சியில் கோபத்துடன் காதலியைத் தேடிப் போய் துரத்தி ஆட்டோவில் ஏறி அமர்ந்தவுடன்கூட கோப வெறியைக் காட்டாமல் சாதாரணமாகவே எந்த ஆஸ்பத்திரி என்று கேட்டுவிட்டு விடை கிடைத்தவுடன் வெளியில் இறங்கி ஓடுகிறார்.

ஆக.. தெலுங்குலகின் மாஸ் ஹீரோக்களுக்கு நடிப்பெல்லாம் தேவையில்லை என்பதையே தமிழுக்கும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். தமிழ் ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே..!

பாப்பா ராகுல் பிரீத் சிங்கின் அறிமுகக் காட்சியே தமிழுக்கு ஒவ்வாதது. புளுபிலிமை பார்த்துவிட்டு தனக்கு ஒரே டென்ஷனாக இருப்பதாகவும் தனது செயல் திறன் குறைந்துவிட்டதாகவும் இப்போது உடனேயே அதைத் தீர்க்க ஏதாவது ஏற்பாடு செய்யும்படியும் தனது தோழியிடம் போனில் சொல்கிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்றைய இளைஞிகளின் பல்ஸ் பார்த்து இப்படி வைத்திருக்கிறார் போலும்.. நாடு வெளங்கிரும்.

பாடல் காட்சிகளில் தெலுங்குப் படங்களுக்கே உரித்தான வகையில் துக்கடா உடையில் அழகு காட்டியிருக்கிறார் ராகுல். ஆனால் நடிப்பில்..? மருத்துவமனையில் ஏதோ செய்யப் போகிறான் என்பது முன்பே தெரிந்தும், மருத்துவமனையில் சூர்யாவை பார்த்த பின்பும் ஏதோ பிக்னிக் போவதை போல ஆட்டோவில் போய்க் கொண்டே மகேஷுக்கு போன் செய்து சொல்வதும்.. எந்த மருத்துவமனை என்று சொல்லாமலேயே போனை கட் செய்வதுமான திரைக்கதை படு சொதப்பல்.

இத்தனைக்கும் இந்தப் பெண்ணை மருத்துவம் படிக்கும் மாணவிதான். ஒரு சமூகப் பொறுப்புணர்வு இந்தப் பெண்ணுக்கு இருக்காதா..? எந்த மருத்துவனை என்று தெரிந்தவுடன் மகேஷ்பாபுவை தேடி வந்து சொல்லியிருக்க வேண்டாமா..? என்னவோ போங்கய்யா..

படத்தில் பெரிதும் ஸ்கோர் செய்திருப்பது சந்தேகமேயில்லாமல் ‘சுடலை’ என்ற பெயருடைய எஸ்.ஜே.சூர்யாதான். அவருடைய அறிமுகக் காட்சியில் ஒரு பக்க முடியை கண்ணின் மீது வைத்து மறைத்தபடியே ஸ்டைலாக அறிமுகமாகும் காட்சியிலேயே அசத்தியிருக்கிறார்.

தன் தம்பியைக் கொலை செய்த நிகழ்வை பார்த்தவுடன் அவர் காட்டும் அதிர்ச்சி, “அப்போ ஒரு மணிக்கு நீ வரலியா…?” என்று எகத்தாளமாக கேட்டுச் சிரிக்கும் இடம்.. மகேஷ் பாபுவிடம் அவரது அம்மாவையும், தம்பியையும் கொலை செய்யப் போவதாக போனில் சவால் விடும் காட்சி.. என்று பல இடங்களில் எஸ்.ஜே.சூர்யா அதகளம் செய்திருக்கிறார். நிச்சயமாக இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே வில்லன்தான் என்று சொல்ல வேண்டும்.

மகேஷ் பாபுவின் உயரதிகாரியாக ஷாஜி, இன்னொரு உயரதிகாரியாக ஹரீஷ் பெராடி இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் தற்போதைய யதார்த்த நிலைமையை எடுத்துரைத்தவுடன் புரிந்து கொண்டு தலையசைக்கும் காட்சியில் கொஞ்சம் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் பாபுவின் அம்மாவாக தீபா ராமானுஜம்.. அப்பாவாக ஜெயப்பிரகாஷ்.. தங்களது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சிறு வயது சூர்யாவாக நடித்த அந்தச் சிறுவனின் நடிப்பும் அபாரம். கொலை செய்யத் தயங்காத குணத்துடன் அந்த அழுகை சப்தத்தையும், பறையின் சப்தத்தையும் கேட்டு ரசிக்கும் அந்த கொடூரமான மனோபாவத்தை அழகாகக் காட்டியிருக்கிறான் அந்தச் சிறுவன். அவனை இந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

பரத் முதல்முறையாக இன்னொரு ஹீரோவின் கதையில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட்டை கொடுத்துவிட்டு செத்துப் போகிறார் பரத்.

மகேஷ் பாபு-பரத் இருவருக்குமிடையே நடக்கும் ரோலர் கோஸ்டர் சண்டை காட்சியை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் மெட்ரோ ரயில் நிலைய தூண் அருகில் நடக்கும் காட்சியில் அத்தனை ஜனத்திரளை கூட்டி வைத்து திறமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

மேலும் பாறை உருண்டு வரும் காட்சி, மருத்துவமனையில் வெடிகுண்டுகள் வெடிக்கின்ற காட்சியிலும், இதைத் தொடர்ந்து நடக்கும் சண்டை காட்சிகள்.. கிராபிக்ஸ் காட்சிகளில் ஒட்டு மொத்த இயக்குநர் குழுமமும் ஒரு வெறியாய் உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கிராபிக்ஸ் வல்லுநர்களின் உழைப்புக்கும் சேர்த்து நமது பாராட்டுக்கள்..!

தெலுங்கு, தமிழில் 140 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருப்பதால் காசை பற்றிக் கவலைப்படாமல் வாரி இறைத்திருக்கிறார்கள். பாடல் காட்சிகளில் கலை இயக்குநரின் பணி முக்கியமானதாக இருக்கிறது. இதேபோல் மகேஷ் பாபு வேலை செய்யும் ஐ.பி. அலுவலக உள் அலங்காரமும், அவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களும் சிறப்பாகவே இருக்கின்றன.

இந்தியாவின தலை சிறந்த ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அழகை அழகாகவே காட்டியிருக்கிறார். ஒளியை வைத்து பிரம்மாண்டம் காட்டாமல் காட்சியமைப்பிலேயே மிரட்டியிருக்கிறார். ரோலர் கோஸ்டர் சண்டை காட்சி.. இறுதியில் நடைபெறும் மருத்துவமனை காட்சி.. பாறை உருண்டு வருவது.. பாடல் காட்சிகள் என்று அனைவற்றிலும் சந்தோஷ் சிவனின் கைவண்ணம் இயக்குநருக்கு கிடைத்த மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம்.

 ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெலுங்கு மணவாடுகளுக்கேற்ற பாடல்களும், இசையும், பாடல் காட்சிகளும் கிடைத்திருக்கின்றன. ‘பூம் பூம்’, ‘ஒற்றை இரவுக்காய்’, ‘சிசிலியா சிசிலியா’, ‘ஆழி ஆழி’ பாடல்கள் ஒலித்த வேகத்தில் நம் காதில் இருந்து விடைபெற்று சென்றுவிட்டன.

ஸ்ரீகர் பிரசாத்தின் திறமையான படத் தொகுப்பில்  படத்தின் திரைக்கதை முற்பாதியில் ஜெட் வேகத்தில் பறக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இதற்கு இவர் மட்டுமே காரணம் அல்ல. இயக்குநர் திரைக்கதையில் ஓட்டை இருப்பததால் வந்த வினை அது.

பரத்தின் புகைப்படத்தை பரப்புரை செய்து கண்டறிய முயல்வது.. மகேஷ் பாபு தனது அம்மாவைக் காப்பாற்ற போடும் திட்டம், துப்பாக்கிக் குண்டடிபட்டு தப்பி ஒரு வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூர்யாவை வெளிக்கொணர வைக்க ‘விஜய் டிவி’யின் ‘மீனாட்சி சரவணன்’ சீரியலை வைத்து போடும் திட்டம்.. என்று பல சுவாரஸ்யமான திரைக்கதைகளை எழுதியிருக்கிறார் முருகதாஸ். இவைகள்தான் படத்தைக் காப்பாற்றுகின்றன.

உண்மையாக சூர்யா பிடிபட்ட உடனேயே கதை முடிந்துவிட்டது. ஆனால் அதனை முடிக்காமல் மீண்டும் தொடர்ந்தது… போகப் போக படம் போரடிக்கும் நிலைமைக்குக் கொண்டு போய்விட்டுவிட்டது. இல்லாமல், அப்போது சூர்யா தப்பித்து கடைசியாக மருத்துவமனை தாக்குதலின்போது பிடிபடுகிறார் என்பது போல திரைக்கதையை மாற்றியிருக்கலாம்.

ஒரு கம்பி வயிற்றில் குத்தி மறுபக்கம் வெளியில் வந்திருக்கும் நிலைமையில் மகேஷ் பாபு காப்பாற்றப்படுவதும்.. உடனேயே அவர் தனது பணிக்குத் திரும்பும் காட்சியமைப்பும் திரைக்கதைக்கு தேவையாய் இருக்கலாம். ஆனால் இன்றைய நிலைமையில் பத்து ரூபாய் டிக்கெட்டில் வந்தர்களைக்கூட சிரிக்க வைக்கும் காட்சி அது. இதேதான் இரண்டு துப்பாக்கிக் குண்டுகளை வாங்கிக் கொண்டு ஆற்றில் விழுந்து உயிர் பிழைத்து காத்திருக்கும் சூர்யாவின் கதையும்..!

இன்னொரு பக்கம் வெட்டியான் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் இப்படித்தான் சமூக விரோதிகளாக உருவெடுப்பார்களா..? என்ன மாதிரியான திரைக்கதை இது..? கொடூரமான மேல்தட்டு சிந்தனை.. என்று இயக்குநருக்கு இப்போது கண்டனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

ஒரு ஆசிரியர் தனது மாணவியிடம் பாலியல் வன்முறை செய்கிறார் என்று படமெடுத்தால் ‘ஆசிரியர்கள் அனைவருமே இப்படித்தானா..?’ என்று இதுவரையிலும் யாரும் கேட்டதில்லை. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சியை வைத்தால், ‘எல்லா போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இப்படியா..?’ என்று யாரும் கேட்கவில்லை.

ஆனால் இப்போது இந்த சுடலை, வெட்டியான் விஷயத்தில் வேகமாக கேள்வி கேட்கிறார்கள். இதுவொரு சிறுவனின் சிறு வயது மனப் பிறழ்வு பற்றிய கதை. அவனுக்கு அது ஏன் எற்படுகிறது என்றால் அவன் குடும்பம் சுடுகாட்டிலேயே வசித்து வருகிறார்கள். அவனது அப்பா அங்கே வெட்டியான் வேலை பார்க்கிறார்.

தப்பு சப்தமும், அழுகை சப்தமும் அவன் பிறந்த்தில் இருந்தே அவன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்பதும், இதனாலேயே அவன் இந்த மனச் சிக்கலில் ஆட்படுகிறான் என்பதும்தான் இயக்குநர் சொல்லியிருக்கும் திரைக்கதை. அவ்வளவுதான். இதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம்..!

ஒரு தெலுங்கு கமர்ஷியல் படம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் படமும் தப்பாமல் வந்திருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் சென்று பார்க்கலாம்..!