தமிழ்ச் சினிமாவில் பெண்களுக்கென்று தனி அமைப்பு உருவாக்கம்..!

தமிழ்ச் சினிமாவில் பெண்களுக்கென்று தனி அமைப்பு உருவாக்கம்..!

தமிழ்ச் சினிமா துறையில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் பொதுவாக 23 சங்கங்கள் இருக்கின்றனர். ஆனால் பெண்கள் பிரிவு என்று எந்தச் சங்கத்திலும் இல்லை. அதேபோல் பெண்களுக்கென்று தனி அமைப்புகளும் தமிழ்ச் சினிமா துறையில் இல்லை.

கேரளாவில்கூட சென்ற ஆண்டு கேரள சினிமா துறையில் பணியாற்றும் அனைத்து பெண்களும் சேர்ந்து ஒரு அமைப்பை தனியாக உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்ச் சினிமா துறையில் இப்போதுதான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

வைசாலி சுப்பிரமணியன், வி.பி.ஈஸ்வரி, மீனா மருதரசி, கீதா, ஏஞ்சல் சாம்ராஜ் என்று ஐந்து பெண் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பிற்கு ‘தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த மையத்தின் தலைவராக வைசாலி சுப்பிரமணியன், செயலாளராக ஈஸ்வரி V.P., துணை செயலாளராக மீனா மருதரசி.S, பொருளாளராக கீதா.M, துணைத் தலைவராக ஏஞ்சல் சாம்ராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

வைசாலி சுப்பிரமணியன் {தலைவர் }

இது பற்றி தலைவர் வைசாலி சுப்ரமணியன் பேசும்போது, “இப்போது நாங்கள் ஐந்து பேர்தான் செயற்குழுவில் இருக்கிறோம். எங்களுடைய அமைப்பின் துவக்க வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அமைப்பினை அதிகாரப்பூர்வமாக தொழிலாளர் தினமான வரும் மே முதல் தேதியன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக FEFSI அமைப்பின் தலைவர் R.K.செல்வமணியிடம் பேசினோம். அவர் ‘நல்ல விஷயம்தான்.. நீங்க பண்ணுங்க. நாங்கள் ஆதரவு தருகிறோம்..’ என்றார்.

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் சாரும் எங்களை வாழ்த்தினார். மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் P.C.ஸ்ரீராம் சாரும் எங்களது அமைப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

sifwa team

எங்களுடைய அமைப்பின் துவக்க விழாவில்  P.C.ஸ்ரீராம், வெற்றிமாறன், சத்யராஜ், ரோகிணி, ரேவதி, சச்சு அம்மா, புஷ்கர் காயத்ரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கீதா குருவப்பன் (sound engineer) மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

sifwa-invitation-1

அன்றைய விழாவில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பாக ஒரு காலாண்டு மாத இதழை வெளியிட இருக்கிறோம். இந்த பத்திரிக்கைக்கு இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றுபவரும் எங்களது மையத்தின் செயலாளருமான ஈஸ்வரி V.P.  ஆசிரியராகச் செயல்படுகிறார்.

sifwa-invitation-2

இந்த மையத்தின் துவக்கம் 100 வருட தமிழ் திரைப்பட வரலாற்றில்  ஒரு புதிய வரலாறாக இருக்கப் போகிறது.  அடுத்த தலைமுறைகள் இதில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடித்தளம் இது. இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தில் தமிழ்த் திரையுலகில் பணியாற்றும் பெண்கள் பலரும் இணைய வேண்டும். வருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்..” என்றார்.